கோவிட்-19 தொற்றின் மூலம் உலகையே அடங்கிக் கிடக்கச் செய்து பொருளாதார நலிவு ஏற்படக் காரணம் சீனாதான் என அமெரிக்கா குற்றஞ்சாட்ட, சீனாவிலிருந்து வெளியேறும் நிறுவனங்களை வரவேற்க பல நாடுகள் சிவப்புக் கம்பளம் விரித்துக் காத்திருக்கிறது. சீனாவில் ஒரு ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்து கோடீஸ்வரியான செள குன்ஃபே பற்றி இப்போது பார்ப்போம். 

1970 ஆம் ஆண்டு ஹூனான் மாநிலத்தில் முன்னாள் ராணுவ வீரருக்கு மகளாகப் பிறந்தார். ஐந்து வயதில் அம்மாவை இழந்தார். செகண்ட்ரி கல்வி வரை பயின்றவர். பதினாறு வயதில்  படிப்பை நிறுத்தி விட்டு கடிகாரங்களுக்கான உதிரிபாகங்கள் தயாரித்து வந்த ஒரு சிறிய தொழிற்சாலையில் மாதம் 180 யுவான் சம்பளத்துக்கு வேலைக்கு சென்றார். அவருக்கு மேலும் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் துளிர்விட்டது. மாலை வகுப்புகளில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தவர் கணக்கியல், கணினி என பல துறைகளில் பட்டயப்படிப்பு படித்து முடித்ததோடு கார் ஓட்டவும் கற்றுக் கொண்டார். 

அவர் பார்த்து வந்த வேலையில், எதுவும் சாதிக்க முடியாது என்ற அதிருப்தியில் வேலையை ராஜினாமா செய்தார். ஆனால் செளவிடமிருந்த வேலைத் திறனை அறிந்து கொண்ட முதலாளி அவரை தொழிற்சாலையின் தள மேலாளராக (floor manager) நியமித்தார்.

1993 ஆம் ஆண்டு அந்த சிறு தொழிற்சாலை சில பிரச்சனைகளால் மூடப்பட்டது. மீண்டும் பிரச்சனை. வாட்ச்-லென்ஸ்-உற்பத்தி (இதில் மொபைல் போன், டேபிளட், கணினி ஆகியவற்றிற்கான திரைகளும், touch screen modules, camera modules, fingerprint modules, camera lenses, ceramic panels, and metal accessories ஆகியவையும் அடங்கும்) செய்வதற்கான நிறுவனமொன்றை அவரது சேமிப்புத் தொகையான 3,000 அமெரிக்க டாலர் முதலீடாகக் கொண்டு ஆரம்பித்தார். வேலைக்கு அவருடைய சகோதர சகோதரிகளையும் உறவினர்களையும் நியமித்தார். நிறுவனத்தின் வளர்ச்சி ஒரு போராட்டமாக இருந்த நேரத்தில், 2001 – ல்  மொபைல் போனுக்கான திரை (ஸ்கிரீன்) தயாரிக்கும் ஒப்பந்தம் சீனாவின் மின்னணு உற்பத்தி நிறுவனமான TCL உடன் கையெழுத்தானது. 2003 – ல் லென்ஸ் டெக்னாலஜி நிறுவனம் விரிவாக்கப்பட்டு ஆயிரத்துக்கும் மேலான தொழிலாளர்கள் வேலைக்கு நியமிக்கப்பட்டனர்.  இருப்பினும் பலவித பிரச்னைகள் ஏற்பட வீரியத்துடன் மீண்டெழுந்தார் செள. 

`மோட்டரோலா’வுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்த வேளையில் பிரச்னையை சமாளிக்க சற்றும் யோசிக்காமல் தனது வீட்டை விற்று அனைத்துப் பணத்தையும் வியாபாரத்திற்காக பயன்படுத்திக்கொண்டார். 

மொபைல் போனின் திரை பிளாஸ்டிக்கிலிருந்து கண்ணாடிக்கு மாற லென்ஸ் டெக்னாலாஜிக்கு அடித்தது யோகம். மோட்டரோலாவுக்குப் பிறகு நோக்கியா, ஹெச்டிசி, சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் என பெரிய பெரிய நிறுவனங்களின் ஆர்டர்கள் வந்து குவிய ஆரம்பித்தன. 

2007 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் லென்ஸ் டெக்னாலாஜி தயாரித்த கண்ணாடி தொடு திரையுடன்தான் அறிமுகமானது. நிறுவனம் படிப்படியாக வளர்ந்து விஸ்வரூபமெடுத்தது. இன்றைக்கு லென்ஸ் டெக்னாலாஜி தயாரிக்கும் `காட்சித் திரை’யை வாங்காத நிறுவனங்களே இல்லையென்று சொல்லும் அளவிற்கு `சாதனங்கள் தயாரிக்கும்’ அனைத்து நிறுவனங்களுக்கும் சப்ளை செய்து வருகிறது. ஆப்பிள், சாம்சங், ஹூவாவே (Huawei) ஆகிய நிறுவனங்கள் மட்டுமே லென்ஸ் டெக்னாலஜியின் விற்பனையில் 75 சதவிகிதமாகும்!

2015 ஆம் ஆண்டு இந்நிறுவனம் பங்குச் சந்தையில் தனது பங்குகளை விற்க ஆரம்பித்தது. இன்றைக்கு இந்த நிறுவனத்தில் 85,000 பேர் வேலை பார்க்கிறார்கள். இதனுடைய சந்தை மூலதனத்தின் மதிப்பு சுமார் 11.4 பில்லியன் டாலர் (மே, 2015). 

2018 ஆம் ஆண்டு இவருடைய சொத்து மதிப்பு மதிப்பு 9.3 பில்லியன் டாலர்.  ஆனாலும் இன்றைக்கும் பதினெட்டு மணி நேரம் வேலை பார்க்கிறார். பெரும்பாலான நேரங்களில் தனது தொழிற்சாலையிலேயே உறங்கிவிடுவதும் உண்டு. பல பிரபலமான பத்திரிகைகள் வெளியிடும் உலக அளவிலான கோடீஸ்வரர்களின் பட்டியலில் இடம் பிடித்தவர். 2003 ஆம் ஆண்டு ஒரு பிரச்சனை ஏற்பட்ட போது ரயிலில் விழுந்து தற்கொலை செய்ய முயலும் போது அவருடைய மகளிடமிருந்து போன் வரவே அந்த எண்ணத்தைக் கைவிட்டார். 

இவருடைய அசாத்திய வெற்றிக்குக் காரணங்களாக அவர் கூறுவது;

 • கற்றுக் கொள்வதில் விருப்பம் காட்டுங்கள்
 • வெற்றி வந்துவிட்டால் அந்த `போதை’யிலேயே இருக்காதீர்கள். அது போல தோல்வி வந்தாலும் துவண்டு விடாதீர்கள்
 • நாம் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருந்தால்தான் வெற்றியென்பது நம்மை வந்தடையும். 
 • நான் செய்ய நினைத்தை செய்யவில்லையே என வருத்தப்பட்டுக் கொண்டு இறப்பதில் எனக்கு விருப்பமில்லை. 
 • சந்தை பற்றியும் போட்டியாளர்கள் பற்றியும் நன்கு தெரிந்து வைத்துக் கொண்டு அதற்கேற்ப உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

(*இந்தக் கட்டுரையோடு இந்தத் தொடர் முடிவுக்கு வருகிறது)

Spread the lovely business news
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •