பெட்ரோல் விலை விர்ரென ஏறிக்கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் ஆபத்பாந்தவனாக இருப்பது எலக்ட்ரிக் வாகனங்கள்தான். அதுவும் குறிப்பாக பொருட்களை வீடுகளில் டெலிவரி செய்யும் வேலைகளில் இருப்பவர்கள் இரு சக்கர வாகனங்களை  தாங்களே சொந்தமாக வைத்திருக்க வேண்டும் என்பது எழுதப்படாத ஒரு விதி.  இவர்களில் பெரும்பாலும் பெட்ரோலில் ஓடும் இரு சக்கர வாகனங்களையே பயன்படுத்துகிறார்கள். இதனால் இவர்களுக்கு தினசரி எரிபொருள் செலவு அதிகரித்து அவர்களுடைய வருமானம் குறைய நேரிடுகிறது.  இவர்கள் எரிபொருள் சிக்கனம் மூலம் மாதம்  7000 ரூபாய் வரை சேமிக்க வழி வகை செய்யும் விதத்தில் ஒரு ஈ-பைக் கம்பெனி இந்த  திட்டத்தை கொண்டு வந்துள்ளது. 

eBikeGo என்ற இந்த கம்பெனி 2017 ல் 640   ஈ-பைக் இருசக்கர வாகனங்களை விற்றது. இது  2019 ல் 18,000  என கூடியிருக்கிறது. 2020 ல் 2,00,000 வாகனங்களை விற்க முடிவு செய்திருக்கிறது. 

இவர்களுடைய ஈ-பைக்கில் ஒரு கிலோமீட்டருக்கு ஆகும் செலவு 20 பைசாதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த  பைக்கில் 200 கிலோ எடை வரை உள்ள சாமான்களை ஏற்றி செல்லலாம். மணிக்கு அதிகபட்சமாக 25 கிலோமீட்டர் வரை செல்லும்.  ஒருமுறை சார்ஜ் செய்தால் 140 கிலோமீட்டர் வரை ஓட்டலாம். முழுமையாக சார்ஜ் செய்ய 2 மணி நேரம் தேவை.

இந்த ஈ-பைக் வாடகைக்கும்  கிடைப்பது சாதகமான விஷயம். இதைப் படித்தவுடன் அந்தக்  காலத்தில் மணி நேரக் கணக்கில் வாடகைக்கு சைக்கிள் எடுத்தது ஞாபகம் வருகிறதா? 

இந்த ஈ-பைக் கம்பெனி பல டெலிவரி கம்பெனிகளிடம்  ஒப்பந்தம் போட்டுள்ளது, அவர்களிடம் வேலை பார்ப்பவர்களுக்கு ஈ-பைக் வாடகைக்கு  கொடுக்க முடிவு செய்துள்ளது. Zomato, Delhivery, Ferns & Petals, Gostops, Big Basket, Ninja Cart, Swiggy, Big Basket போன்றவை இதில் அடங்கும். 

இந்த வருடம் மேலும் 69 கம்பெனிகளிடம் ஒப்பந்தம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளது. இதன் மூலம் பல ஆயிரக்கணக்கான ஈ-பைக்குகள்  சாலைகளில் ஓடத் துவங்கும்.

பெட்ரோல் வாகனங்களை எலக்ட்ரிக் வாகனங்களாக மாற்றும் முயற்சியில் இந்த கம்பெனி ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இப்போது இந்தியாவில் 8 நகரங்களில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் நடப்பு ஆண்டில்  80  ஊர்களில் செயல்படப் போகிறது.  இதில் சென்னை, கோவை  உண்டு. 

இது தவிர கோவிட் காலம் முடிந்து பலரும் அலுவலகங்களுக்கு பயணிக்க வேண்டிய சூழ்நிலை வரும் கூட்ட நெரிசல் உள்ள பஸ், ரயில், ஆட்டோக்களில் பயணம் செய்வதை தவிர்த்து தங்களுக்கென ஒரு இருசக்கர வாகனம் வாங்கலாம் என்று நினைக்கும் போது மாதம் 3,600 ரூபாய் என்ற அளவில் வாடகைக்கு இந்த இருசக்கர வாகனம் உங்களுக்கு கிடைக்கும்.

இந்தியாவில் மூன்று கோடி இருசக்கர வாகனங்கள் உள்ளன. அவற்றில் 0.1 சதவீதத்தையாவது ஈ-பைக்களாக ஒரு வருடத்தில் மாற்றவேண்டும் என்பதே இவர்களுடைய இலக்கு. 

தமிழ்நாட்டில் குறிப்பாக கோவை, திருப்பூர் போன்ற பல ஊர்களிலும் இது போன்ற ஈ-பைக்குகள் தயாரிக்கப்படுகின்றன. அவர்களும் இது போன்ற வாடகை மாடலை அறிமுகப்படுத்தும் போது அவர்களுடைய விற்பனையும் அதிகரிக்கும், நாடும் சுத்தமாகும், பர்சும் கனமாகும். சிக்கனமும், சுகாதாரமும் தானே நாட்டிற்கு இப்போது உடனடி தேவை.  

Spread the lovely business news
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •