“உங்கள் தோல்விகளைக் கண்டு மனக்குழப்பம் அடையாமல் அவற்றிலிருந்து கற்றுக் கொண்டு மீண்டும் ஆரம்பியுங்கள்” என்கிறார் புகழ்பெற்ற தொழில்முனைவோரான ரிச்சர்ட் ப்ரான்ஸன். படைப்பாற்றல், மன உறுதி, புத்திக்கூர்மை, நெகிழ்வுத்திறன், ரிஸ்க் எடுப்பதற்கான ஆரோக்கியமான மனநிலை ஆகிய அனைத்தும் ஒருவர் வெற்றிகரமான தொழில்முனைவோர் ஆவதற்கு அவசியமானதாகும். 

ஆனால் பரம்பரை சொத்து, வணிகப் பாரம்பரியம், பக்கபலம் என எதுவும் இல்லாத ஒருவர் வெற்றிகரமான தொழில் முனைவோர் ஆவது `சாத்தியமே’ என்பதாக, 1977 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் என்கிற சாம்ராஜ்யத்துக்கு வித்திட்ட தீரஜ்லால் ஹிராசந்த் அம்பானி (பின்னாளில், திருபாய்  அம்பானி) `சுயம்பு’வாக உருவான முதல் தலைமுறை. 

ஏடனை நோக்கி சென்றுக் கொண்டிருந்த கப்பலில் பயணித்த பல பயணிகளில் இந்தியாவைச் சேர்ந்த திருபாயும் ஒருவர். இவர் தான் செய்வது சரியா, தவறா என தன்னைத்தானே கேட்டுக் கொண்டே பயணித்துக் கொண்டிருந்தார். இவர் 1932  ம் ஆண்டு  குஜராத்தில் உள்ள சோர்வாட் என்கிற சிறுநகரத்தில் கிராமப்புற பள்ளியொன்றில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தவருக்கு மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார். பத்தாம் வகுப்பு கூட முடிக்காத நிலையில் பள்ளிக்குச் செல்வதை நிறுத்திக் கொண்டார்.

1950 ஆம் ஆண்டு ஏமன் நாட்டைச் சேர்ந்த ஏடன் நகரில் வேலைபார்த்து வந்த இவருடைய அண்ணன் ரம்னிக்லால் அழைப்பின் பேரில் அங்கு சென்று கொண்டிருந்தார். ஏடன் நகரில் இருந்த ஃப்ரெஞ்சு நாட்டு நிறுவனமான A. Besse & Co யில் க்ளார்க்காக 1958 வரை வேலைபார்த்து வந்தார். அப்போதே இவருக்குள் இருந்த உந்துதலும், நெட்வொர்க்கிங் திறமையும் தெளிவாகத் தெரியவந்தது. மிகவும் சரளமாக பேசும் அளவுக்கு அராபிக் மொழியைக் கற்றுக் கொண்டார். 

1958 ஆம் ஆண்டு பம்பாய்க்கு திரும்பி வரும்போது ஏதாவது ஒரு தொழிலை ஆரம்பிக்க வேண்டுமென்கிற எண்ணத்தில் இருந்தார். ஆரம்பத்தில் துருக்கி நாட்டில் இருக்கும் ஒன்றுவிட்ட சகோதரருடன் சேர்ந்து டெக்ஸ்டைல்ஸ், மசாலா பொருட்கள் ஆகியவற்றை விற்றுவந்தார். அதன் பின் 1967 ஆம் ஆண்டு நரோடாவில் ஒரு சிறிய ஸ்பின்னிங் மில்லை விலைக்கு வாங்கினார். இதுதான் ரிலையன்ஸ் டெக்ஸ்டைல்ஸ் என்கிற ஆலமரத்துக்கு வித்திட்ட விதையாகும். 

சந்தைப்படுத்துவதின் முக்கியத்துவத்தை அறிந்திருந்த இவர், உயர்வான தரம் கொண்ட பாலியெஸ்டர் துணியை தயாரிக்க ஆரம்பித்து `ஒன்லி விமல்’ என்கிற பெயரில் ஷோரூம்களை திறந்தார். இவரது சந்தைப்படுத்தல் பரப்புரை நாடெங்கிலும் இருக்கும் சில்லரை வர்த்தகர்களை `ஒன்லி விமல்’ ஷோரூம் திறக்கும்படி தூண்ட 1976-77 ஆம் ஆண்டில் இதனுடைய விற்பனை ரூ 70 கோடியை எட்டியது. இதை இன்னும் விரிவாக்க நினைத்து கடனுக்காக தேசியவங்கிகளை அணுகியபோது ஏதோவொரு காரணம் சொல்லி வங்கிகள் கடன் கொடுக்க மறுத்துவிட்டன. அதன்பின் இவர் எடுத்த முடிவு இந்திய பெருங்குழும சரித்திரத்தையே புரட்டிப்போட்டது.

ரிலையன்ஸ் நிறுவனத்தை பொது வரையறுக்கப்பட்ட நிறுவனமாக்க நினைத்து அந்த முயற்சியில் ஈடுபட்டார். ஆரம்பத்தில் 58,000 முதலீட்டாளர்கள் மூலம் தேவையான மூலதனத்தைத் திரட்டினார். காலப்போக்கில் இவரது நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் விளையாட்டரங்கில் நடத்தும் அளவுக்கு லட்சக்கணக்கானப் பங்குதாரர்கள் கலந்துகொள்ளும் ஒரு விழாவாக மாறிப்போனது வரலாறு.    

1970-80 களில் வணிகம் செய்வது என்பது கடினமான ஒன்றாக இருந்தது. ஒவ்வொன்றிலும் அரசியல் குறுக்கீடுகளும், தடைகளும் இருந்து வந்தன. 1988 ஆம் ஆண்டு `மாற்றத்தக்க கடனீட்டு பத்திரம்’ சம்பந்தமாக இதன் மீது வழக்குத் தொடரப்பட்டது. 1990 களின் மத்திய காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் `கணக்கு வழக்குகள்’ சரியில்லை என பலவிதமான செய்திகள் உலா வந்தன. ஆனால் மத்திய ரிசர்வ் வங்கி நடத்திய விசாரணையின்படி இந்நிறுவனம் எந்தவித சட்டமீறல் நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என தெரியவந்தது. 

1980 களில் இந்நிறுவனம் அரசின் கொள்கைகளில் இருக்கும் நெளிவு சுளிவுகளை தனக்கு சாதகமாக பயன்படுத்தி உரிமம் பெற்றது குறித்தெல்லாம் பத்திரிகைகள் `ரீம்’ கணக்கில் எழுதித் தள்ளின. ஆனால் அவற்றையெல்லாம் எதிர்கொண்ட திருபாய் `ராக் ஆஃப் ஜிப்ரால்டர்’ போன்ற உறுதியுடன் நின்றார். 

1986 ஆம் ஆண்டு திருபாய் உடல்நிலை சரியில்லாமல் போக, அவரது மகன்களான முகேசும், அனிலும் ரிலையன்ஸ் குழுமத்தின் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு, மேலும் பல துறைகளில் கால்பதித்து வெற்றி நடை போட ஆரம்பித்தனர். இது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. 

ரிலையன்ஸின் திட்டங்கள் எல்லாமே யாரும் நினைத்துப் பார்க்கக்கூட தயங்கும் அளவுக்கான பெரும் முதலீடுகளைக் கொண்டதாக இருக்கும். பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, பெட்ரோகெமிக்கல்ஸ், டெக்ஸ்டைல்ஸ், சில்லரை வணிகம், ஊடகங்கள், தொலைத் தொடர்புத் துறை, மியூசிக், வங்கித்துறை என இந்நிறுவனம் கால்பதிக்காத துறையே இல்லை எனும் அளவுக்கு திருபாய் அன்று விதைத்த விதை இன்று ஆலமரமாக வளர்ந்து கிளைவிட்டு வருகிறது.   

இவருடைய வெற்றிக்கான சூட்சும மந்திரங்களாக அவர் சொன்னது – 

”உங்கள் கனவிலிருந்து எதையும் உருவாக்கவில்லையெனில் யாரோ ஒருவர் உங்களை நியமித்து அவரது கனவை நனவாக்கிக் கொள்வார்’ எனவே கனவை செயல்படுத்துங்கள். 

பெரிதினும் பெரிது கேள் என்பது போல `பெரிதாக சிந்தியுங்கள், வேகமாக சிந்தியுங்கள், எதிர்காலம் குறித்து சிந்தியுங்கள்” எதையும் சாதிக்கலாம். 

கனவு காணத் துணிந்தவர்கள் வெற்றி பெறுவதற்கு இந்த உலகமே இருக்கிறது.

`கால கெடுவுக்குள் வேலையை முடிப்பதில் எனக்கு இஷ்டமில்லை, அதைத் தோற்கடிக்கவே நான் விரும்புகிறேன்’ என்றார். இதற்கு நாம் செய்யும் காரியத்தில் முழுக் கவனமும், ஈடுபாடும் தேவை. 

1998 ஆம் ஆண்டு இவர் பற்றி எழுதப்பட்ட `The Polyester Prince: The Rise of Dhirubhai Ambani” தடை செய்யப்பட்டது. இவரின் ஞாபகார்த்தமாக 2002 ஆம் ஆண்டு இந்திய அரசு அஞ்சல்தலை வெளியிட்டு சிறப்பித்ததோடு 2016 ஆம் ஆண்டு பத்ம விபூஷண் விருதும் கொடுத்து கெளரவித்தது. 2007 ஆம் ஆண்டு இவரது வாழ்க்கையை பிரதிபலிப்பதுபோல அபிஷேக்பச்சன் நடிப்பில் இயக்குநர் மணிரத்னம் எடுத்த படம் `குரு’ என பரவலாகப் பேசப்பட்டது. 

விஸ்வரூபம் எடுத்த திருபாய் என்கிற சுயம்பின் காலடிச்சுவடுகளைப் பின்பற்றி அக்குழுமத்தின் செயல்பாடுகள் ”ஜியோ, ஜியோ” வென்று தொடர்கின்றன.

Spread the lovely business news