இத் தொடரில் சுயம்புவாக அலங்கரிப்பவர் ஒரு பெண். அன்னையர் தினத்தன்று (மே 10) ஆப்ரிக்க அமெரிக்க இனத்தைச் சேர்ந்த ஓப்ரா கெயில் வின்ஃப்ரே (Oprah Gail Winfrey) பற்றி எழுதியது ஒரு தற்செயலான நிகழ்வு. 

இவர் கடந்து வந்த பாதை மிகவும் கரடு முரடானது. வீட்டு வேலை செய்யும் தாய்க்கு 1954 ஆம் ஆண்டில் மகளாகப் பிறந்து சிறுவயதில் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகி, 14 வயதில் கருவுற்ற கொடுமைக்கு ஆளானவர். பல துயரங்களை எதிர்கொண்டு ஃபீனிக்ஸ் பறவையாக மீண்டெழுந்தவர். 

ஓப்ராவின் அப்பா வெர்னான் (முடி திருத்துபவராக வாழ்க்கையை ஆரம்பித்து பிசினஸ்மேன் ஆனவர்) தான் இவர் வாழ்க்கையை மாற்றியமைத்தவர். தனது மகளிடம் ஒழுங்கை வளர்த்து கல்வியின் முக்கியத்துவத்தைப் புரிய வைத்தார். ஓப்ராவின்  பேச்சுத் திறமை மேல்படிப்புப் படிப்பதற்கான உதவித் தொகையைப் பெற்றுத் தந்தது. 

1971 ஆம் ஆண்டு டென்னசி ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து செய்தித்தொடர்பு படிக்க ஆரம்பித்தார். பின்னர் அவருக்கு வானொலி நிலையத்தில் பகுதி நேர செய்தி வாசிப்பாளர் வேலை கிடைத்தது. அதன்பின், WLAC-TV ல் செய்தி நெறியாளராகச் சேர்ந்தார். அந்நிறுவனத்தில் பணிபுரிந்தவர்களில் மிகவும் இளம்வயது, முதல் கருப்பின பெண் இவரே. தான் பார்க்கும் இந்த வேலை, `தனக்கு உகந்த வேலை’ இல்லை என உணர ஆரம்பித்தார் ஓப்ரா. `People Are Talking’ என்கிற `அரட்டை நிகழ்ச்சி’ யில் பொறுப்பேற்ற பின்  அந்நிகழ்ச்சியின் டி ஆர் பி எகிற ஆரம்பித்து மிகவும் புகழ்பெற்ற நிகழ்ச்சியானது. தொடர்ந்து எட்டு ஆண்டுகள் அந்நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். 

1983 ஆம் ஆண்டு சிகாகோவில் இயங்கி வரும் ABC தொலைக் காட்சியிலிருந்து அழைப்பு வந்தது. ரேட்டிங்கில் படுபாதாளத்தில் இருந்த AM Chicago என்கிற காலை நேர அரட்டை நிகழ்ச்சியை ஏற்று நடத்துமாறு ஓப்ராவிடம் கேட்டுக் கொண்டனர். வேலைக்காக தனது இருப்பிடத்தை சிகாகோ நகருக்கு மாற்றிக் கொண்டார். ஓப்ரா பொறுப்பேற்ற பிறகு, அந்த அரட்டை நிகழ்ச்சி, ரேட்டிங்கில் முதல் இடத்தைப் பிடித்தது. 

பின்னர் 1986 ஆம் ஆண்டு ABC நிறுவனமே ஓப்ராவுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதன்படி, இப்போது மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக இருக்கும் `The Oprah Winfrey Show’ 1986 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பின் நடந்தவை அனைத்தும் இன்றைக்கு வரலாறாகியிருக்கிறது!

இன்றைக்கு சுமார் 120 சானல்களில், 10 மில்லியன் பார்வையாளர்களைக் கொண்ட நிகழ்ச்சியாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இந்த நிகழ்ச்சி அறிமுகமான முதல் ஆண்டிலேயே 125 மில்லியன் டாலர் வருமானம் ஈட்டியது. இதில் ஒப்ராவுக்குக் கிடைத்தத் தொகை சுமார் 30 மில்லியன் டாலர். அமெரிக்க ஐக்கிய நாட்டில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக வளர்ந்து பல `Emmy Awards’ களைப் பெற்றது. நாளடைவில் இந்த நிகழ்ச்சியில் மைக்கேல் ஜாக்சன், வெஸ்ட் டேவிட் லெட்டர்மேன், பாரக் ஒபாமா, டாம் க்ரூஸ் என பல பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

தனிப்பட்ட முறையிலும், தொழில் ரீதியிலும் பல போராட்டங்களையும் பிரச்னைகளையும் சந்தித்த ஓப்ரா, தனியாக Harpo (Oprah என்கிற அவரது பெயரே வலமிருந்து இடமாக) என ஒரு தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தார். இதற்குப் பின் ஓப்ரா பல ஊடக வடிவங்களை கண்டறிய ஆரம்பித்தார். 1985 ஆம் ஆண்டு ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க் தயாரித்த ‘தி கலர் பர்ப்ள்’ என்கிற படத்தில் நடித்து ஆஸ்கார் விருதுக்கான முதல்கட்ட தேர்வுப் பட்டியலில் இடம் பெற்றார். 

Before Women Had Wings, Beloved போன்ற நல்ல இலக்கிய நூல்களின் உரிமையை வாங்கி திரைப்படமாக எடுக்க ஆரம்பித்தார். அனிமேஷன் படங்களில் ஓப்ரா பல பிரதான கேரக்டர்களுக்கு டப்பிங் செய்தார். கருப்பின வரலாறு அடிப்படையில் பல படங்களை தயாரித்தார். 

1998 ஆம் ஆண்டு பெண்களுக்கென்றே ஒரு கேபிள் சானலை `ஆக்சிஜன் மீடியா’ என்கிற பெயரிலும் 2006 ஆம் ஆண்டு சாட்டிலைட் வானொலி ஒன்றை `ஓப்ரா & ஃப்ரெண்ட்ஸ்’ என்கிற பெயரிலும் ஆரம்பித்தார். அதன்பின் 2011 ஆம் ஆண்டு அவர் Oprah Winfrey Network (OWN) என்று தன் பெயரிலேயே ஒரு தொலைக்காட்சி சானலை ஆரம்பித்து சாதனை படைத்தார். சில பத்திரிகைகளையும் ஆரம்பித்து நடத்திவரும் இவர் ஒரு நூலாசிரியரும் கூட. 

இவருடைய உழைப்பையும், வளர்ச்சியையும் பாராட்டி விருதுகளும் பாராட்டுகளும் தொடர்ந்து அவரை வந்தடைகின்றன. உலகில் மிகவும் தாக்கத்தை உருவாக்கிய பெண்மணி என லைஃப் பத்திரிகை அவரைப் புகழ்ந்தது. இருபதாம் நூற்றாண்டின் முதல் ஆப்ரிக்க அமெரிக்க இனத்தைச் சேர்ந்த கோடீஸ்வரி என ஃபோர்ப்ஸ் பத்திரிகை இவரை தொடர்ந்து மூன்று முறை தெரிவு செய்தது. சிசில் பி. டிமில்லே வாழ்நாள் சாதனையளருக்கான விருதைப் பெற்றார். விருது வாங்கிய பின் தனது ஏற்புரை நிகழ்ச்சியில் இவர் இன, பாலின சமத்துவம் குறித்துப் பேசியது பொதுவெளியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

அறுபத்தாறு வயதாகும் ஓர்பாவின் (ஆமாம் இதுதான் அவரது இயற்பெயர் – ORPHA – ஆனால் அதுவே  மருவி நாளடைவில் ஓப்ரா – OPRAH ஆனது) சொத்து மதிப்பு 2.7 பில்லியன் டாலர்.    

இளம்வயதில் பாலியல் துன்புறுத்தல்களையும் கருப்பினத்தைச் சேர்ந்தவர் என்பதால் பல அவமானங்களையும் அனுபவித்தவர்.   ஊடகத்துறையில் சாதாரண நிலையில் தனது பணி வாழ்க்கையை ஆரம்பித்து இன்றைக்கு தொழில்முனைவோராக உருவாகி பலருக்கும் ஒரு ரோல்மாடலாக இருந்து வருகிறார். இதெல்லாம் எப்படி சாத்தியமானது? இதோ அவரிடமே கேட்போம்.

  • மகாராணியைப் போல சிந்தனை செய் ஏனெனில், தோல்வியைக் கண்டு மகாராணி பயப்படப் போவதில்லை. மகத்துவத்திற்கான இன்னொரு படிக்கல்லே தோல்வி என்பதை உணர்ந்து கொள். 
  • உன்னை உயரத்துக்கு இட்டுச் செல்லக்கூடியவர்கள் உன்னைச் சுற்றி இருக்குமாறு பார்த்துக் கொள். 
  • உன்னிடம் என்ன இருக்கிறதோ அதற்கு நன்றியுடன் இருந்தால் இன்னும் பல உன்னை வந்தடையும்; உன்னிடம் எது இல்லையோ அதில் கவனம் செலுத்தினால் ஒருபோதும் எதுவும் இருக்காது. 
  • உங்கள் வாழ்க்கைக்காக சாத்தியமான, மிக உயர்ந்த, மிகப் பெரிய தொலைநோக்கை உருவாக்குங்கள்.  ஏனென்றால் நீங்கள் யாராக இருக்க விரும்புகிறர்களோ அவராக  நீங்களே மாறமுடியும்.
  • பொருளாதார ரீதியில் நான் மிகவும் வெற்றிகரமாக இருப்பதற்குக் காரணம் ஒருபோதும் பணத்தின் மீது கவனம் செலுத்தியதில்லை என்பதுதான். 

`நம்மிடம் இருக்கும் பேரார்வமே நமக்கான ஆற்றலும் புத்துணர்ச்சியும்’ எனக் கூறும் ஓப்ரா, `வெற்றிபெற வேண்டுமென கவலைப்படாமல் குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்க வேண்டுமென நினைத்து வேலை செய்யுங்கள் வெற்றியானது இயல்பாகவே உங்களை வந்தடையும்’ என்கிறார். ஓப்ரா வின்ஃப்ரேயின் வழி நடப்போம், வெற்றி பெறுவோம்!!    

Spread the lovely business news