‘‘தமிழ்நாடு இன்னும் தனக்கென தனியாக ஒரு ஸ்டார்ட் அப் பாலிசி கொண்டு வரவில்லை. இதற்காக பல வருடங்களாக பேசி வருகிறது. பாலிசியும் ரெடியாகி விட்டது. தமிழ்நாட்டின் இரண்டாம் கட்ட நகரங்கள், கிராமங்கள் முன்னேறும் வகையில் அங்கு ஸ்டார்ட் அப்-கள் அமைக்கும் வகையில் பாலிசி அமையும் எனத் தெரிகிறது. ஆனால் இன்னும் அறிமுகமாகவில்லை. லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வந்திருக்கேன் என்ற பாணியில் நல்ல ஒரு ஸ்டார்ட்அப் பாலிசி தமிழ்நாட்டிற்கு தேவை…’’

–2018 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் தினமலர் நாளிதழில் நாம் எழுதிய கருத்துக்கள். சரியாக ஒரு வருடம் கழித்து, உலக முதலீட்டாளர்கள் மாநாடு சமயத்தில், ஒரு பாலிசியை தமிழ்நாடு அரசு வகுத்துள்ளது. இந்த பாலிசி எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.

தமிழ்நாட்டின் பாலிசி ஐந்து வருட பாலிசியாக இருக்கும். இந்த பாலிசி 2023 ஆம் வருடம் வரை அமலில் இருக்கும். ஸ்டார்ட் அப் தொழில்களில் முதலீடு செய்வதற்காக 250 கோடி ரூபாய் அளவில் ஒரு பண்ட் ஆரம்பித்துள்ளது.

ஸ்டார்ட் அப் தொழிலில் மக்களை ஊக்கப்படுத்துவதன் மூலமாக 2023 ஆம் வருடத்திற்குள் ஒரு இலட்சம் மக்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு அளிக்கும் துறையாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 250 கோடி ரூபாய் பண்டை, சிட்பி நிறுவனம் மூலமாக ஸ்டார்ட் அப் தொழில் தொடங்குபவர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளது.

தமிழ்நாட்டில் உங்களது ஸ்டார்ட்அப் தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெறுவதற்கு தமிழ்நாடு ஸ்டார்ட் அப் மற்றும் இன்னோவேஷன் மிஷன் என்ற நிறுவனத்தில் பதிவு செய்து கொள்ளுவது அவசியமாகும்.

நீங்கள் ஆரம்பித்திருக்கும் ஸ்டார்ட் அப் ஏழு வருடத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். மேலும் ஒரு வருடத்திற்கு 25 கோடி ரூபாய் விற்பனையை தாண்டி இருக்கக்கூடாது.

இதுதவிர “தமிழ்நாடு ஸ்டார்ட் அப் செய்து கிராண்ட் ஸீட் பண்ட்” ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஃபண்டின் மூலமாக முதல் வருடத்தில் ஐந்து கோடி ரூபாய் வங்கிகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் வழங்கப்படும்.

இந்த ஐந்து கோடி ரூபாய் புதிதாக ஸ்டார்ட் அப் கம்பெனிகள் தங்களுடைய ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட முயற்சிகளுக்கு வழங்கப்பட இருக்கிறது. அதாவது உங்களுக்கு ஸ்டார்ட் அப் நிறுவனம் ஆரம்பிக்கும் ஐடியா இருந்தால் அதை முழுமையான வடிவத்துக்கு கொண்டு வருவதற்கான உதவிகளை வங்கிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூலமாக இந்த கிராண்ட் உங்களுக்கு செய்யும்.

தமிழ்நாட்டில் ஸ்டார்ட் அப் மையங்கள் சென்னையை தவிர கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, மதுரை, திருச்சி, தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களிலும் அமைக்கப்படும்.

இந்தக் கொள்கையின் ஒரு புதிய அம்சமாக, தமிழ்நாடு அரசு நிறுவனங்களும், மத்திய அரசு நிறுவனங்களும், ஸ்டார்ட் அப் தொடங்க விரும்பும் நிறுவனங்கள் தங்களது ஸ்டார்ட் அப் ஐடியாக்களுக்கு வடிவம் கொண்டு வரும் விதமாக உதவி செய்ய உதவும். மேலும் இந்த அரசு நிறுவனங்கள் எவ்வாறு சிறப்பாக செயல்பட முடியும் என்பது குறித்து அவர்களுக்கு இந்த ஸ்டார்ட் அப்கள் தங்கள் கருத்துக்களை சொல்லும் விதமாகவும் இது இருக்கும்.

Spread the lovely business news