சில ஆண்டுகளுக்கு முன் தூர்தர்ஷன் பொதிகை சானலில் சக்கைபோடு போட்ட நிகழ்ச்சி, இயற்கை அழகுக் கலைஞர் ராஜம் முரளியின் அழகுக் குறிப்புகள் நிகழ்ச்சி. வீட்டில் இருக்கும் பொருட்களையும் எளிதில் கிடைக்கும் மூலிகைகளையும் கொண்டே பெண்கள் தங்களை எப்படி அழகாக வைத்துக் கொள்ளலாம் என்பதை ‘டெமோ’வுடன் விளக்கி புகழ்பெற்றவர் ராஜம் முரளி. அவள் விகடன், குங்குமம், மங்கையர் மலர் போன்ற பல முன்னணி பத்திரிகைகளிலும் அழகுக் கலை குறித்த பல தொடர்களை எழுதியவர். 

தன் தயாரிப்புகளை சந்தைப்படுத்துவதற்கென்று ராஜம் முரளி தொடங்கிய நிறுவனம்தான் சென்னை சைதாப்பேட்டையில் இருக்கும் ஆர்.எம். ஹெர்பல்ஸ். ‘வேதாஸ்’ என்ற பிராண்டில் சருமப் பராமரிப்பு, கேசப் பராமரிப்பு மற்றும் முழு உடல் பராமரிப்புக்கான இயற்கை அழகு சாதனங்களை சுத்தமான முறையில் தயாரித்து விற்பனை செய்கின்றது இவருடைய நிறுவனம். அழகுப் பொருட்கள் தவிர, ஆரோக்கியத்தைப் பேணும் (ஹெர்பல் ஹெல்த் டீ, ஆர்த்தோ ஆயில் போன்ற) சில பொருட்களையும் தயாரிக்கின்றனர். 

‘‘இந்த மாதிரி ஒரு பிசினஸ் ஆரம்பிக்கும் ஐடியா எப்படி வந்தது?’’

‘‘25 வருஷங்களுக்கு முன்னால் அழகுக் கலை குறித்த டிப்ளமா படிப்பை முடிச்சிட்டு, என்னுடைய சொந்தத் தயாரிப்பாக ஹென்னா பேஸ்ட், கேசத்துக்கான எண்ணெய், ஃபேஷியல் பவுடர், ஸ்கிரப், தேவையற்ற ரோமத்தை நீக்கும் ‘ஹேர் வீக்கனிங் பவுடர்’ எல்லாம் தயாரிச்சு, கேக்கிறவங்களுக்கு மட்டும் கொடுத்துக்கிட்டிருந்தேன். இதில் ‘ஹேர் வீக்கனிங் பவுடர்’தான் ரொம்ப ஸ்பெஷல்.. இதுவரையிலும் என்னைத் தவிர, வேறு எந்த ஹெர்பல் புராடக்ட்ஸ் தயாரிப்பாளரும் அந்த மாதிரி பவுடர் தயாரிக்கவில்லை. சைதாப்பேட்டையில் சின்னதாக அரவை மெஷின் போட்டு, பொடிகளை அரைக்கிறது, மூலிகை எண்ணெய் காய்ச்சுறதுன்னு செய்துட்டிருந்தேன்.. அமெரிக்காவில் இருக்கும் என் மகள்தான், என்னுடைய தயாரிப்புகளுக்கு உள்ளூரிலும் வெளிநாட்டிலும் நல்ல வரவேற்பு இருப்பதைச் சுட்டிக்காட்டி, அதை ஒரு நிறுவனமாக மாற்றுவதற்கு ஊக்கம் கொடுத்தாள். அதன் பிறகுதான் 2010ல் ‘ஆர்.எம்.ஹெர்பல்ஸ்’ என்ற நிறுவனம் தொடங்கினேன்’’ என்கிறார் ராஜம் முரளி.

கிண்ணி தொழிற்பேட்டையில் இவருடைய அரவை தொழிற்சாலை இருக்கிறது. அரைத்து, சலித்து, எண்ணெய் காய்ச்சி, பேக்கிங் செய்யவென 16 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இந்த   நிறுவனத்தில் எந்நேரமும் சந்தனமும் மஞ்சளும் வெட்டிவேரும் மணக்கின்றன. சந்தனம், மஞ்சள், மருதாணி, வெட்டிவேர், நன்னாரி, அவுரி, கரிசலாங்கண்ணி, ஆவாரம்பூ, பூலாங்கிழங்கு என நம் வீட்டிலும், வெளியிலும் கிடைக்கக் கூடிய முலிகைகளைக் கொண்டே இவர் தயாரிக்கும் பொடிகள் மற்றும் எண்ணெய்களுக்கு ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். வெளிநாட்டில் உள்ளவர்களும் ஆர்டர் செய்து வாங்குகின்றனர். 

‘‘எங்களுடையது நிலையான தரம் உடைய தயாரிப்புகள். யாருக்காகவும் மாற்றுவது இல்லை. ஆனால் சமீபகாலமாக சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் இருக்கும் ஆயுர்வேதிக் ஸ்பாக்களில் எனது தயாரிப்புகளைப் பயன்படுத்த ஆரம்பிச்சிருக்காங்க. அவங்களுக்கு, அவங்க வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப ‘கஸ்டமைஸ்டு புராடக்ட்ஸ்’ செய்து அனுப்புறேன். உதாரணமாக, கிறிஸ்துமஸ் சீஸன் என்றால் கொரியன் போன்ற அயல்நாட்டுக்காரர்கள் அதிகம் வருவதால் அவங்க சருமத்துக்கு ஏத்த மாதிரி மூலிகை எண்ணெய்கள் மற்றும் பொடிகளின் மூலப்பொருட்களின் விகிதத்தைக் கொஞ்சம் மாற்றித் தயாரிப்போம். இதனால் ரெகுலரா எங்ககிட்ட வாங்குறாங்க’’ என்று கூறும் ராஜம் முரளி, பொதிகை சேனலில் 185 வாரங்கள் நிகழ்ச்சி நடத்தியவர். 

அது தவிர, அழகுக்கலை குறித்த கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள் (வொர்க் ஷாப்) மற்றும் வகுப்புகளும் நடத்துகிறார். இதுவரையில் 630 பேர் இவரிடம் பயின்று சான்றிதழ் பெற்றுள்ளனர்.

‘‘அவர்களுள் 55 வயசுக்கு மேற்படட் பெண்கள் கூட உண்டு. எல்லோருமே வீட்டில் சும்மா இருக்காமல் இது போல பயனுள்ள ஒரு சிறுதொழில் ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தணும் என்பதுதான் என்னுடைய குறிக்கோள். நான் இந்தத் துறைக்கு வந்து 25 ஆண்டுகள் ஆகுது. விரைவில் அரசு உதவியுடன் பெண்களுக்கு மூலிகை அழகுப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சியைக் கொடுக்கணும் என்பது என் விருப்பம்’’ என்கிறார் ராஜம் முரளி.

பலதரப்பட்ட சருமங்களுக்கு ஏற்ற மூலிகை தயாரிப்புகளைக் கண்டறிதல் மற்றும் மேம்படுத்துதல் என்னும் தலைப்பில் பி.எச்டி. முடித்துள்ள இவர், அழகுக் குறிப்புகள் மற்றும் தயாரிப்புகள் சம்பந்தமாக 7 புத்தகங்களும் எழுதியுள்ளார். அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளார்.

‘‘துவக்கத்தில் பியூட்டி பார்லர் உரிமையாளர்கள் சிலர் என் மீது கோபப்பட்டனர். நான் அவங்களுக்குப் போட்டியே இல்லை என்பதை அவர்கள் புரிஞ்சுக்கல. அவங்க செய்றது மேக்கப். அது ஒரு கலை. நான் செய்வது இயற்கையிலேயே அழகுபடுத்திக்கொள்ளும் கலை. ரெண்டுமே வேறு வேறு. 

இப்போதும் மார்க்கெட்டில் மிகப் பெரிய பிராண்டுகளின் ஹெர்பல் புராடக்ட்ஸ் எல்லாம் கிடைக்குது. ஆனாலும் என் தயாரிப்புகளை வாங்கி உபயோகப்படுத்தி பயனடைந்த வாடிக்கையாளர்கள் எப்போதும் தொடர்ந்து வாங்குவாங்க என்பதில் நான் உறுதியாக இருக்கேன். காரணம் வீட்டில் செய்றது போல பார்த்துப் பார்த்து தயாரிப்புகளின் தரத்தைப் பரிசோதிச்ச பிறகுதான் சந்தைக்கு அனுப்புறேன். அரசு வேளாண்மைக் கல்லூரிகள் தரும் முகவரிகள் மற்றும் எனக்குத் தெரிந்த ஆர்கானிக் விவசாயிகளிடம்தான் மூலப் பொருட்களைக் கொள்முதல் செய்றேன். அதனால் தரத்துக்கு எப்போதும் நான் கேரன்டி!’’ என்று கட்டைவிரல் உயர்த்தி ‘தம்ஸ் அப்’ காட்டிச் சிரிக்கிறார் அறுபதுகளைக் கடந்த இந்த அழகி.

Read More