தமிழ்நாட்டில் புதிதாக தொழில்களில் ஈடுபட விரும்பும் முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு உதவும் விதமாக New Entrepreneur -cum- Enterprise Development Scheme- – NEEDS (புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம்) என்ற திட்டத்தை தமிழக அரசு 2012ம் வருடம் கொண்டுவந்துள்ளது. 2018ம் வருடம் இந்த திட்டத்தில் மாறுதல்கள் கொண்டுவர பெற்று இத்திட்டம் மேலும் செம்மைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் திட்டத்தில் ரூ.10 லட்சத்திற்கு மேலும் அதிகபட்சமாக ரூ.5 கோடி வரையிலும் உள்ள தொழில் திட்டங்களுக்கு கடனுதவி வழங்கப்படுகிறது. தொழில் திட்டங்கள் மெனுபெக்சரிங் அல்லது சேவை என்ற வகையில் இருக்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்பெறும் உதவியை நிலம் வாங்க, அதில் தொழிற்சாலை அமைக்க, இயந்திரங்கள் அமைக்க, நடைமுறை மூலதனம் ஆகியவற்றிற்கு உபயோகப்படுத்தப்படலாம்.

இத்திட்டத்தில் அரசு மானிய உதவியாக தொழில் திட்ட மதிப்பீட்டில் 25 விழுக்காடும் அதிகபட்சமாக 30 லட்சம் வரை மானியமாக வழங்கப்படுகிறது. வட்டி மானியமாக 3 சதவீதம் வழங்கபெறுகிறது.

பொதுப்பிரிவினராக இருந்தால் 10 சதவீதம் தங்கள் முதலீடாகவும், சிறப்புப் பிரிவினராக இருந்தால் 5 சதவீதம் தங்கள் முதலீடாகவும் செலுத்த வேண்டும்

இந்த திட்டத்தின் கீழ் அப்ளை செய்ய 21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது பொதுப்பிரிவினராக இருப்பின் 35 வயதிற்குள்ளும், சிறப்புப்பிரிவினராக (எஸ்.சி., எஸ்.டி., எம்.பி.சி., முன்னாள் ராணுவத்தினர், மைனாரிட்டி பிரிவினர், திருநங்கைகள், மாற்றுத் திறானாளிகள்) இருப்பின் 45 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி என்று பார்க்கப்போனால் டிகிரி அல்லது டிப்ளமோ அல்லது ஐ.டி.ஐ., குறைந்தபட்ச தகுதியாக கருதப்படுகிறது.

தொழிலை தனிநபர் நிறுவனாமகவோ அல்லது கூட்டு நிறுவனமாகவோ தொடங்கலாம். எல்லோருக்கும் மேற்சொன்ன தகுதிகள் இருக்க வேண்டும்.

திட்டத்தின் மூலம் நிதியுதவி பெற மாவட்ட தொழில் மையத்தை அணுகி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை பரிசீலித்து வங்கிகள்அல்லது TIIC (TAMILNADU INDUSTRIAL INVESTMENT CORPORATION) மூலம் கடனுதவி பெற பரிந்துரைக்கப்படுவர்.

முன்னமே மத்திய அல்லது மாநில அரசின் மானியத்துடன் கூடிய ஏதேனும் ஒரு திட்டத்தில் கடன் பெற்றவர்கள் இந்த திட்டத்தின் கீழ் விண்ணபிக்க இயலாது.

தொழில் முனைபவர் தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து வசிப்பவராக இருத்தல் வேண்டும்

வியாபாரம் சார்ந்த தொழில்கள் (பல சரக்கு கடை, மளிகை கடை, பொருட்களை வாங்கி, விற்கும் தொழில்) தொடங்க திட்டத்தில் விண்ணபிக்க இயலாது.

ஆன்லைன் மூலமாகவும் விண்ணபிக்கலாம் http://www.indcom.tn.gov.in/needs.html என்ற பக்கத்திற்கு செல்லவும்.

என்ன ஒரு பிரச்சனை என்றால், மாவட்ட தொழில் மையம் பரிந்துரை செய்த பிறகு வங்கிகள் அல்லது டிக் நிறுவனத்திடம் இருந்து கடன் பெறுவதில் பெரிய சிரமங்கள் இருக்கிறது. அதை எதிர்கொள்ள வேண்டும். பரிந்துரை செய்யப்படும் எல்லா விண்ணப்பங்களுக்கும் கடன் கிடைத்து விடும் என்று அறுதியிட்டு கூற முடியாது.

Spread the lovely business news