இந்தியா போன்ற விவசாய நாட்டில் கிராமப்புற விவசாயிகளின்  வாழ்வாதாரத்தை நிலை நிறுத்துவது மிகவும் முக்கியம். விவசாயிகள் பகுதிநேரமாகவோ அல்லது முழுநேரமாகவோ செய்யக்கூடிய தொழில் கோழி வளர்ப்பு ஆகும். அதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட வாய்ப்புகள் உள்ளது.

தமிழ்நாடு இந்திய அளவில் முட்டை உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது. 1970ம் வருடம் வாக்கில் சிறிய அளவில் தமிழ்நாட்டில் தொடங்கிய கோழிப்பண்ணை தொழில் தற்போது ஆல் போல் தழைத்து தமிழ்நாட்டில் 1000 க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளுடன் ஒரு நாளைக்கு 3 கோடி முட்டைகள் தயாரிக்கும் அளவில் வந்து நிற்கிறது.

இந்த தொழில் இன்னும் பெரிய அளவில் வளர தமிழ்நாட்டில் நல்ல வாய்ப்புகள் உள்ளது. இந்த தொழிலில் ஈடுபடுவதால் கிராமப்புற சிறு விவசாயிகள் தங்களின் வருமானத்தை நாலு மடங்காக உயர்த்தலாம்.

சாதித்து காட்டிய ஸ்டார்ட் அப்

இதை சாதித்து காட்டியிருக்கிறது பீகாரைச் சார்ந்த “எக்காஸ் (Eggoz)” என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம். வட இந்தியாவில் பல மாநிலங்களில் ஊட்டசத்து குறைபாட்டை போக்கவும், சிறு விவசாயிகளின் வருமானத்தை கூட்டும் விதமாகவும் ஐ.ஐ.டி. படித்த மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டது இந்த நிறுவனம். ஒரு கோழிப்பண்ணை ஆரம்பிப்பதற்கு குறைந்தபட்சம் 250 கோழிகள் இருந்தால் போதுமானது, இந்திய உற்பத்தி சராசரியை விட 15 சதவீதம் அதிகம் இருக்கிறது, உற்பத்தி செய்யும்  முட்டைகளை எக்காஸ் நிறுவனமே வாங்கிக் கொள்கிறது. பண்ணைக்கு தேவையான பண்ணை மேனேஜ்மெண்ட் செயலி (App),  பண்ணையின் சுற்றுப்புற சுழ்நிலைகளை கண்காணிக்க IoT (Internet of Things) சென்சார்கள், விலை குறைந்த பண்ணை நிர்வாக உபகரணங்கள் ஆகியவைகளை இந்த கம்பெனியே விவசாயிகளுக்கு வழங்குகிறது. 200 க்கும் மேற்பட்ட விவசாயிகளை ஒன்றினைத்திருக்கிறார்கள். இவர்களின் இணையதள முகவரி https://eggoz.in/

எக் (Egg) பிராண்டிங்

தமிழ்நாடு இந்த தொழிலில் பெரிய அளவில் முன்னேறி இருந்தாலும், முட்டைகளை பிராண்ட் செய்து விற்பனை செய்வதில் பெரிய அளவில் ஆர்வம் காட்டாதது ஒரு வருத்தமான விஷயம் தான். அது போல பிராண்ட் செய்து விற்கும் போதும், மேலும் ஆர்கானிக் முட்டைகளை விற்கும் போதும் விலை சிறிது கூடுதாலாக இருப்பது உண்மைதான். 

முட்டைகளில் பல வகைகள் இருக்கின்றன. 

ப்ரீ ரேஞ்ச் எக்ஸ் (Free Range Eggs) – கோழிகளை கூட்டில் அடைக்காமல் ஒரு பெரிய இடத்தில் சுதந்திரமாக வளர விட்டு அதன் மூலம் அவைகள் இடும் முட்டைகள் தாம் ப்ரீ ரேஞ்ச் எக்ஸ் என அழைக்கப்படுகின்றன. இந்த வகையில் வளரும் கோழிகளுக்கு ஆண்டிபயாடிக், மருந்துகள் ஆகியவைகள் கொடுக்கப்படும்.

ஆர்கானிக் எக்ஸ் (Organic Eggs) – இவைகளும் சுதந்திரமாக பெரிய அளவில் இருக்கும் பண்ணைகளில் வளரும் பறவைகள் மூலமாக கிடைக்கும் முட்டைகள் தான்.  ஆனால் இந்த பறவைகளுக்கு கொடுக்கப்படும் உணவு ஆர்கானிக் உணவுகளாக இருக்கும். மேலும் இவைகளுக்கு ஆண்டிபயாடிக், மருந்துகள் கொடுக்கப்படுவதில்லை. என்ன இவை நம் முன்னோர்கள் பெரிய வீடுகளில் சுதந்திரமாக வளர்த்த கோழிகளை நியாபகப்படுத்துகிறதா? ஆமாம், அது தான் உண்மை. அந்த பழக்க வழங்களில் பல தான் இன்று ஆர்கானிக் என்ற முறையில் மறு அவதாரம் எடுத்திருக்கிறது. 

வெஜிடேரியன் எக்ஸ்(Vegetarian Eggs) – எந்தவிதமான நான்- வெஜிடேரியன் உணவுகளும் கொடுக்காமல் வளர்க்கப்படும் பறவைகள் இடும் முட்டைகள் தாம் வெஜிடேரியன் எக்ஸ் என அழைக்கப்படுகிறது. ஒரு அமெரிக்க கம்பெனி செயற்கை முறையில் செடிகளை வைத்து வெஜிடேரியன் முட்டைகளை தயார் செய்கிறது. இவைகளை தயாரிக்கும் ஒரு புகழ் பெற்ற கம்பெனி www.ju.st. சென்று பாருங்கள் அருமையான இணையதளம்

வளர்ந்த நாடுகளில் உள்ள நுகர்வோர்கள் மாமிச உணவுகள் சாப்பிடுவதை அதிக அளவில் குறைத்து வருகின்றனர். இதற்கு  முக்கியமாக சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் விலங்கு நலன் தொடர்பான காரணங்களை சுட்டிக்காட்டுகின்றனர். மாமிச உணவிற்கு  மாற்றாக இருக்கும் உணவுப்பொருட்கள் தொழில் உலக அளவில் பெருகி வருகிறது. இந்த தொழில் 2030 ஆம் ஆண்டில் 250,000 கோடி ரூபாய்கள் மதிப்பை தாண்டியதாக இருக்கும் என்பது குறிப்பிடதக்கது. அடுத்த பத்தாண்டுகளில் இந்த துறையின் ஆண்டு  வளர்ச்சி விகிதம் 40% சதவீதத்திற்கு மேலாக இருக்கும். உங்கள் கவனமும் இந்த துறையின் மீது இருக்கட்டும்.

Spread the lovely business news