எண்சாண் உடம்பிற்கு சிரசே (தலையே) பிரதானம் என்பது மாறி  தற்போது உணவே பிரதானம் என்ற அளவிற்கு வந்து விட்டது. அந்த அளவிற்கு மக்கள் பல விதமான உணவுகளை சமைப்பதிலும்,  உண்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

ஒரு காலத்தில் பெண் படித்து முடித்தவுடன், பெண் என்ன செய்கிறாள் என்று கேட்டால் “அவள் அம்மாவிடமிருந்து சமையல் கற்றுக் கொள்கிறாள், கல்யாணம் முடிந்து ஒழுங்காக சமைக்க வேண்டுமே” என்று கூறுவார்கள்.  பின்னர் பல விதமான சமையல் கலை புத்தகங்கள் வந்தது அதை படித்து கற்றுக் கொண்டார்கள்.  தற்போது பாட்டி, அம்மா, சமையல் புத்தகங்கள் என எதுவுமே வேண்டாம், சமையல் கற்றுக் கொள்ள யூடியூப் ஒன்றே போதும் என்று யூடியூப் கதியாக இருக்கிறார்கள்.

சமையல் வல்லுனர்கள் அனைவரும் தற்போது யூடியூபில் இருக்கிறார்கள்.  முதல் காரணம் அவர்களின் சமையல் வீடியோக்கள் அனைவராலும் விரும்பி பார்க்கப்படுவது, இரண்டாவது பலர் விரும்பி பார்ப்பதால் அந்த வீடியோக்களை பதிவு செய்யும்  திறமையான சமையல்காரர்களுக்கு  அது பெரும் பணத்தை அள்ளித் தருகிறது.

தமிழ்நாட்டு உணவு,  உலகம் முழுவதும் விரும்பி உண்ணப்படுகிறது. இதனால் இது போன்ற வீடியோக்கள் தமிழர்கள்  மட்டுமல்லாமல் மற்றவர்களாலும் விரும்பி பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் கிட்டத்தட்ட 62 கோடி மக்கள் இன்டர்நெட் உபயோகிக்கிறார்கள் .  மாதத்திற்கு கிட்டத்தட்ட 26 கோடி மக்கள் யூடியூபில் உலாவுகிறார்கள்.  சில வருடங்கள் முன்பு மொபைலில் கட்டணம் கூடுதலாக இருந்ததால் வீடியோக்கள் பார்ப்பவர்கள் மிகவும் குறைவாக இருந்தார்கள். 2012 ம் வருடம் ஒரு நாளைக்கு இரண்டு நிமிடம் மட்டுமே சராசரியாக மக்கள் வீடியோ பதிவுகளை பார்த்து வந்தார்கள். ஆனால் இப்போது டேட்டா இலவசம் என்ற அறிவிப்புகள் வந்தவுடன்  மக்கள் வீடியோ மற்றும் யூடியூப் பார்க்கும் நேரத்தை மிகவும் கூடுதல் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவில் தற்போது ஒரு நபர் தினமும்  சராசரியாக சோஷியல் மீடியாவில் 2.30 மணி நேரம் செலவழிக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 

கிராம சமையல் வல்லுனர் டாடி ஆறுமுகம்  அவர்களின் “வில்லேஜ் ஃபுட் பேக்டரி”  யூடியூப் 35 லட்சம் பேர் ஃபாலோ செய்கிறார்கள் என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இல்லையா!  பேஸ்புக்கிலும் சுமார் 30 லட்சம் பேர் ஃபாலோ செய்கிறார்கள்.  கிராமத்து சமையலாக விறகு அடுப்பு, மண் சட்டி இவைகளை பயன்படுத்தி சமைத்துக் காட்டுகிறார்.  இதுதான் இவரின் சமையல்  ரகசியம். யூடியுப் மூலம் மாதம் 10 லட்ச ரூபாய் வரை சம்பாதிக்கிறார்.

இதுபோல “சச்சு சமையல்” என்ற  யூடியூப் சேனலை கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் ஃபாலோ செய்கிறார்கள். குழந்தைகளுக்கு உணவு கொடுப்பதில் உள்ள சிரமங்களை குறைப்பதும்  யூடியூப் வீடியோக்கள் தான். இது போன்ற யூடியூப் வீடியோக்களை  கிரியேட் செய்து அதை அவர்களின் யூடியூப் சேனலில் போடுவதை பலர் செய்து வருகிறார்கள். அதில் தமிழ்நாட்டை சேர்ந்த குபேர் நடராஜன், ஜெயலஷ்மி நடராஜன் நடத்தி வரும் “இன்போ பெல்ஸ்” என்ற யூடியூப் சேனலை கிட்டதட்ட 80 லட்சம் பேர் ஃபாலோ செய்கிறார்கள். இவர்கள் வருடத்திற்கு கோடிக் கணக்கில் சம்பாதிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

உங்களிடமுள்ள திறமைகளை யூடியூப் மூலமாக சேனலாக கொண்டு வாருங்கள். அது உங்களுக்கு நல்ல வருமானத்தை தரும்.

Spread the lovely business news