கும்பகோணம் என்றதும் டிகிரி காபி நினைவு வருவது போல, நாச்சியார்கோயில் என்றதும் குத்துவிளக்கு நினைவு வரும் அளவுக்கு புகழ் பெற்றுவிட்டது. அந்த பெருமை எல். கே. மெட்டல் எக்ஸ்போர்ட்ஸ் (L. K. Metal Exports) உரிமையாளர்  திரு. எல். தினேஷ் போன்றவர்களையே சேரும்.

தினேஷ் அவர்களிடம் அவரது தொழில் பற்றியும், தொழில் வளர்ந்த விதம் குறித்தும் பேசும்போது பல ஆச்சரியங்கள்…

இவர் 2008ல் கும்பகோணம் நாச்சியார்கோவிலில் பள்ளியில் படிக்கும்போதே குத்துவிளக்கு செய்யும் பட்டறைகளுக்கு  சென்று வேலை பழகிக் கொண்டார்.  டிப்ளோமா இன்ஜினீயரிங்  படிக்கும்போதே இந்தத் தொழிலைத் தொடங்கினார். சின்ன சின்னதாக குத்து விளக்குகள் விற்பனை செய்து கிடைத்த சொற்ப லாபங்களை கொண்டு லைசென்ஸ் போன்றவற்றை எடுத்தார். பின்னர் இதை ஓர் ‘ஸ்டார்ட் அப்’ தொழிலாக உயர்த்தி வளர்ச்சி பெறச் செய்திருக்கிறார் தினேஷ்.

குத்துவிளக்கு செய்வது இந்த ஊரின் ஒரு குடிசைத் தொழில். இவரது குடும்பத்தில்  இவர் மட்டுமே  இந்த தொழிலை முதன் முதலாக தொடங்கியுள்ளார்.

உள்ளூரிலும் சுற்று வட்டாரத்திலும் ஆர்டர் கேட்டு நிறைய சுற்றி திரிந்திருக்கிறார்.  வியாபாரத்திற்கு வரவேற்பு இருந்தது. ஆனால் எல்லா வியாபாரிகளும் பொருட்களை கடனுக்கே கேட்டனர்.  அதற்கு தனது பொருளாதாரம் இடம் கொடுக்காததால் ஆன்லைனில் வியாபாரம் செய்ய தொடங்கினார். ஆன்லைனில் ஆர்டர் கிடைத்த பின்னர் குத்து விளக்குகளை செய்து பணம் பெற்றுக்கொண்டு அனுப்பி வைத்தார். இதனால் பெரிய அளவில் பொருளாதார பிரச்னை  இல்லாமலேயே வியாபாரம் செய்து வந்தார். மற்றவர்களைவிட நல்ல தரமான பொருட்களை சப்ளை செய்வதால் நாளொரு வண்ணம் தொழில் வளர்ந்து வருவதாக சொல்லி திருப்தியடைந்தார்.

புது பித்தளையை விட பழைய பித்தளை சாமான்களை வாங்கி உருக்கிப் பித்தளை கட்டி செய்வது மிகவும் தரம் உள்ளதாக இருக்கும் என்கிறார்.  இவரிடம் ஆறு அடி வரை உயரமுள்ள பித்தளை குத்துவிளக்குகள் செய்யப்படுகின்றன. சாமி சிலைகளும் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் செய்யப்படுகின்றன. தனது தயாரிப்புகளுக்காக வீட்டிலேயே டிஸ்ப்லே ஷோரூம் வைத்துள்ளார். 

கனடா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது வழக்கம்.  ஆன்லைன் மூலம் உலகில் எங்கெல்லாம் தமிழர்கள் உள்ளார்களோ அங்கெல்லாம் ஆன்லைன் வியாபாரம் செய்து வருகிறார்.  சிறிய சாமி சிலைகள் மற்றும்  குத்துவிளக்குகள் அனுப்புவதில் சிரமம் இல்லை.30 கிலோவிற்கு மேல் இருந்தால்  தொல்பொருள் ஆராய்ச்சி (Archaeology) டிபார்ட்மெண்ட் மூலம், அனுப்பும் பொருட்கள்  பழங்காலத்து தொல்பொருள் சார்ந்தது அல்ல என்றும், புதிதாக தயார் செய்யப்பட்டது  என சான்றிதழ் வாங்கி ஃபார்வார்டிங் ஏஜெண்டு (Forwarding Agent) மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றது. 

ஆரம்பத்தில் நான் சிரமப்பட்டு பேசி  ஆர்டர் எடுத்தேன். இப்போது எனது தரமான பொருட்கள் எனக்காக பேசி ஆர்டர் அனுப்பி வைக்கின்றன என்று பெருமையுடன் சொல்கிறார்.

இவர் மீது நம்பிக்கை வைத்த கனடா நாட்டு வியாபாரிகள் சிலர் குத்துவிளக்குகள் மட்டும் அல்லாமல் மசாலா, மளிகை, அரிசி சாமான்கள் ஆர்டரும் கொடுக்கின்றனர். அவற்றை கண்டெய்னரில் ஏற்றுமதி செய்கிறார்.. 

வெளிநாட்டில்  பெரிய ஸ்டார் ஹோட்டல்களிலும்  அலுவலக வரவேற்பறையிலும்  நமது குத்துவிளக்குகள் மரியாதையான இடத்தில் வைத்து அலங்காரப் பொருளாக அழகு பார்பதால்  இதுபோன்ற இடத்திலிருந்து மேலும்  ஆர்டர்கள் வருகின்றன.

தொலைநோக்குப் பார்வை குறித்து பேசும்போது அதிக முதலீடு செய்து பித்தளை, காரீயம் போன்றவற்றை அதிகம் ஸ்டாக் வைத்து, வரும் ஆர்டரை மேலும் விரைவில் டெலிவரி செய்ய ஆசை என்றார். 

“எங்கள் ஊரில் எங்களுக்கான சங்கம் உள்ளது. சங்கம் சார்பில் விலைகள் நிர்ணயம் செய்யப்படுவதால், வியாபாரத்தில்  விலைகள் அதிக வித்தியாசம் இருக்காது. அந்த அளவிற்கு கட்டுக்கோப்பாக உள்ளது எங்கள் சங்கம்” என்று மகிழ்ச்சி பொங்க கூறி சங்கத்திற்கு பெருமை சேர்க்கிறார். 

இது பக்தி சார்ந்த தெய்வீக தொழில்…. அதை தொழில் பக்தியுடன் செய்யும்போது கிடைக்கும் ஒரு ஆனந்தமான  பக்திக்கு ஈடு இணையே இல்லை என சொல்லி வணங்கி விடை பெற்றார். 

தொடர்பு கொள்ள : 87546 01099

Spread the lovely business news