நீங்க ஒரு ஸ்டார்ட்அப் கம்பெனி ஆரம்பிக்க போறீங்களா?… அப்படின்னா பல ஸ்டார்ட் அப் சம்பந்தப்பட்ட வார்த்தைகள் உங்களுக்கு புதுமையாக தோன்றும். அதை தெரிந்து கொள்வது, புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். அவற்றை உங்களுக்கு தொகுத்து வழங்குகிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த பிரபாகரன். இவர் மிகச்சிறந்த மொழி வல்லுநர், கைதேர்ந்த ஓவியர். ஸ்டார்ட் அப் ஆரம்பிக்கப் போகும்  ஒவ்வொருவருக்கும் இந்தத் தொடர் பொக்கிஷமாக இருக்கும். வாருங்கள் தொடர் கட்டுரைக்குள் செல்வோம்.

பிட்ச் டெக் (PITCH DECK)

முதலீட்டாளர்கள் ஒரு ஸ்டார்ட் அப்-பில் முதலீடு செய்யும் முன், அந்த கம்பெனியின் முக்கிய அம்சங்களான ஆரம்பித்தவர்கள் பற்றிய முழு விவரம், தயாரிக்கும் பொருட்களின் முழு விவரம், சந்தை விவரம், எதிர்கால திட்டம் போன்றவை அடங்கிய அறிக்கையை எதிர்பார்ப்பார்கள். இந்த இன்வஸ்டர் பிரசண்டேஷன்தான் “பிட்ச் டெக்” எனப்படும்.

வேல்யூ ப்ரோப்போசிஷன் (VALUE PROPOSITION) பிசினஸ் என்றால் என்ன? வாடிக்கையாளர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண்பதுதான். வாடிக்கையாளரின் பிரச்சனைக்கு மற்ற கம்பெனிகள் கண்ட தீர்வை விட புதிய கம்பெனியின் தீர்வு சிறப்பாக இருப்பின் அது “வேல்யூ ப்ரோப்போசிஷன்” எனப்படும்.

அறிவுசார் சொத்து (INTELLECTUAL PROPERTY)

கண்டுபிடித்த ஒரு பொருளை, காப்புரிமை மற்றும் பதிப்புரிமையை வணிக முத்திரை மூலம் பாதுகாப்பதுதான் அறிவுசார் சொத்து எனப்படும். 

க்ரோத் ஹாக்கிங் (GROWTH HACKING)

க்ரோத் ஹாக்கிங் என்பதை வளர்ச்சி ஊடுருவல் எனவும் கூறலாம். வருவாயை விட அதிகம் செலவழித்து ஒரு பொருளை சந்தைப்படுத்தினால் நஷ்டமே மிஞ்சும். மார்க்கெட்டிங் செய்வதற்கு சராசரியாக செலவிடப்படும் தொகையை காட்டிலும் குறைந்த செலவில் பல நவீன உத்திகளை கையாண்டு மிக விரைவாக அந்த இலக்கை அடைபதைத்தான் “குரோத் ஹாக்கிங்” என்கிறார்கள்.

சுவிசேஷகர் (EVANGELISTS)

ஊர் ஊராய் சென்று சர்ச்சுகளுக்கு வெளியே எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் மதத்தின் சிறப்பையும், இறை வாசகங்கள் பற்றியும் மக்களுக்கு போதிப்பவர்கள்தான் “இவாஞ்ஜலிஸ்ட்கள்’ (சுவிசேஷகர்கள்) எனப்படுவர். 

உங்களுடைய தயாரிப்பை பல்வேறு காலகட்டங்களில் பல வாடிக்கையாளர்கள் வாங்குவார்கள். அதில் முதலாவதாக உங்கள் ப்ராடக்டை இனம் கண்டு அதன் மேல் நம்பிக்கை வைத்து அதை வாங்கி உபயோகித்து உணர்ந்து அதன் சிறப்பை அவர்களைப் போன்ற மற்ற வாடிக்கையாளர்களுக்கும் எடுத்துரைத்து வாங்கும்படி செய்பவர்களைத்தான் வணிகத்தின் “சுவிசேஷகர்கள்” என்கிறோம்.

வரும் இதழ்களிலும் ஸ்டார்ட் அப் பிசினஸில் பயன்படுத்தப்படும் மேலும்  பல சொற்களுடன் உங்களை சந்திப்போம்.

(தொடரும்)

Spread the lovely business news