இந்தியாவில் தேன் சந்தை வருடந்தோறும் 10% வளர்ந்து வருகிறது, மேலும் 2024 க்குள் 2800 கோடி ரூபாய் மதிப்பை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேனீ வளர்ப்பு ஒரு லாபகரமான தொழிலாக தற்போது இருக்கிறது.

சென்னையை சேர்ந்த அக்ரிடெக் ஸ்டார்டஅப் கம்பெனி “கோபஸ்ஸர்” (gobuzzr) என்ற கம்பெனி கண்டுபிடித்த ஒரு கருவி தேன் கூடுகளின் கீழ் பொருத்தப்படுகிறது. இவை தேன் கூட்டின் உட்புற ஈரப்பதம், வெப்பநிலை, எடை மற்றும் தேனீக்களின் ஒலிகள் ஆகியவற்றை இண்டர்நெட் ஆப் திங்க்ஸ் (IoT)  என்ற தொழில்நுட்பத்தை  வைத்து கண்காணிக்கிறது. இதை தேனீ வளர்ப்பவர்கள் தங்களது கம்ப்யூட்டர் அல்லது மொபைல் வழியாக இந்த கம்பெனியின் செயலி மூலம் அறிந்து கொள்ளலாம். இதனால் தேனீ வளர்ப்பவர்கள் தேவையை அறிந்து நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் தேன் உற்பத்தியை கூட்ட முடிகிறது, அதிக வருமானத்தை பெற முடிகிறது.

இந்த ஸ்டார்ட் அப் கம்பெனியை ஆரம்பித்த கபில்தேவ் தென் ஆப்பிரிக்கா நாட்டிற்கு சென்றிருந்த போது 30,000 தேன் கூடுகளை வைத்திருந்த ஒரு பண்ணைக்கு விஜயம் செய்தபோது, விவசாயிகள் தேனை பிரித்தெடுக்க எப்படி சிரமப்பட்டார்கள் என்பதையும், தேன் கூடுகளில் தேனீக்களின் ஆரோக்கியத்தை  யூகம் மற்றும் உள்ளுணர்வு ஆகியவை கண்காணிக்கப்படுவதையும் கவனித்தார். மேலும் அவர்கள் தேன் எடுக்க பயன்படுத்திய சில நடைமுறைகள் தேனீக்களுக்கு கொடூரமானவையாக இருந்ததையும் குறிப்பாக மாற்ற விரும்பினார். இதன் விளைவு தான் இந்த “கோபஸ்ஸர்” ஸ்டார்ட் அப் கம்பெனி கண்டுபிடித்த கருவியாகும்.

இந்த நிறுவனம் கண்டுபிடித்த வழிமுறைகள் ஆயிரக்கணக்கான அப்பாவி தேனீக்களை மூச்சுத்திணறச் செய்வதற்கு முற்றுப்புள்ளி வைப்பது மட்டுமல்லாமல், போக்குவரத்து செலவைக் குறைத்து, தொழிலாளர் செலவையும் குறைத்து அதிக லாபத்தைக் கொடுக்க ஆரம்பித்தது.

இந்த கம்பெனியின் கருவிகள் விலைக்கு விற்கப்பட்டாலும், இந்தியாவில் சுமார் 5000 கருவிகளை இலவசமாக தேனீ வளர்ப்பவர்களுக்கு கொடுக்க முடிவு செய்து அதை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.

தேனீக்களும், மகரந்த சேர்க்கையும்

தேனீக்கள் தாவரங்களில் மகரந்த சேர்க்கை ஏற்பட மிகவும் உதவியாக இருக்கின்றன. தேனீக்கள் உட்பட பூச்சிகளின் மூலம் ஏற்படக் கூடிய மகரந்த சேர்க்கையின் உலக மதிப்பு 17,50,000 கோடி ரூபாய்களுக்கு மேல் இருப்பது குறிப்பிடதக்கது. 

தேனீ வளர்ப்பதால் தென்னை, பாக்கு தோப்புகளில் 30 சதவிகிதம் விளைச்சலும், பிற விவசாயங்களில் 20 சதவிகிதம் விளைச்சலும் கூடுதலாகின்றன.

இந்த அக்ரிடெக் தொடக்க நிலை கம்பெனி தற்போது ஜிம்பாப்வே மற்றும் இங்கிலாந்தில்

தேனீ வளர்ப்பவர்களுடன் இணைந்து செயல்படுகிறது. இவர்களின் இணையதளம் www.gobuzzr.com

இந்த கம்பெனி இந்தியாவின் சிறந்த 30 ஸ்டார்ட் அப்-களில் ஒன்றாக “நாஸ்காம்” அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது சிறப்பாகும்.

இந்த கம்பெனி தவிர தேனீ வளர்ப்பிற்கு உதவ பல ஸ்டார்ட் அப் கம்பெனிகள் உலகளவில் இருக்கின்றன. அவற்றில் குறிப்பிடதக்கன ApisProtect, BuzzBox, Bee Smart Technologies, BeeHero, The Bee Corp ஆகும். 

Spread the lovely business news