மார்ச் 2020 கொரோனா தொற்றால் உலகமே போராடிக் கொண்டிருந்த காலகட்டத்தில் `பைஜுஸ்’ செயலியை தரவிறக்கம் செய்தவர்களின் எண்ணிக்கை சுமார் 60 லட்சம். பள்ளி மாணவர்களுக்குக் உதவும் வகையில் செயலியை இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என பைஜு’ஸ் அறிவித்ததால் மாணவர்களின் எண்ணிக்கை முன்பு இருந்ததை விட சுமார் 150 சதவிகிதம் அதிகரித்தது என அதன் தலைமைச் செயல் அதிகாரியான ம்ரினாள் மோஹித் (Mrinal Mohit) தெரிவித்திருக்கிறார். 

கோவிட்-19, எட்-டெக் (Ed-Tech), மருத்துவம், தொழில்நுட்பம் சார்ந்த சில தொழில்களுக்கு அது வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது. `வீட்டில் இருந்தபடியே கல்வி கற்கலாம் (home studying)’ என்கிற கருத்தை தற்சமயம் கட்டாயமாக்கியிருக்கிறது. இது `புது வழக்கமாக (new normal)” மாறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

பைஜூ’ஸ் நிறுவனத்தை ஆரம்பித்தவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரவீந்திரன். இவருக்கு விளையாட்டில் அதிக விருப்பம் இருந்த காரணத்தால் மருத்துவம் படிக்காமல் (விளையாட அதிக நேரம் கிடைக்காது என்பதால்) பொறியியல் படிப்பில் சேர்ந்தார். இவருக்கு கணிதத்தில் எந்த அளவுக்கு ஆர்வம் இருந்ததோ அந்த அளவுக்கு விளையாட்டுகளிலும் ஆர்வம் இருந்தது. பொறியியல் படிப்பை முடித்த பின் ஒரு நிறுவனத்தில் `சர்வீஸ் இன்ஜீனியர்’ வேலை கிடைத்து பெங்களூருக்குச் சென்றார். அப்போது நண்பர்களில் பலர் எம்பிஏ நுழைவுத்தேர்வான `பொது சேர்க்கைத் தேர்வுக்கு (Common Admission Test – CAT) தங்களைத் தயார்படுத்திக் கொண்டிருந்தனர். இவர் அவர்களின்  சேர்க்கைத் தேர்வுக்கு என்ன தேவையென்பதை அறிந்து சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். பின்னர் இவரும்  தேர்வு எழுத அதில் 100% பெற்று தேர்ச்சி பெற்றார். ஆனால், அவர் எம்பிஏ படிப்பில் சேரவில்லை. 

தன்னைத்தானே சோதிக்க எண்ணி இரண்டாவது முறையும் CAT தேர்வு எழுத அதிலும் 100 சதவிகிதம்! இதன் மூலம் ரவீந்திரனுக்கு தனது பயிற்சி மேல் நம்பிக்கை வர அவரை கற்பித்தல் தொழிலை நோக்கி ஈர்க்க, அதன்பின் தான் கற்றுக் கொடுப்பதை காணொலியாகப் பதிவு செய்ய அது சுமார் 45 நகரங்களிலிருக்கும் மாணவர்களைச் சென்றடைந்தது.

அதன்பின் நண்பர்கள், தம்பி ரிஜு, மனைவி திவ்யா ஆகியோரின் ஒத்துழைப்புடன் `THINK AND LEARN PRIVATE LTD’ என்கிற ஆன்லைன் டுட்டோரியல் நிறுவனத்தை 2011 ஆம் ஆண்டு ஆரம்பித்தார். 

2012 ஆம் ஆண்டு ராஜன் பை (Rajan Pai, சேர்மன் மணிப்பால் எஜூகேஷன் அண்ட் மெடிக்கல் குரூப்) அவர்களுக்கு ரவீந்திரன் செய்து வரும் வேலை `தங்கச்சுரங்க’மாகத் தோன்றியது. எனவே, அவர் ரவீந்திரனிடம் பயிற்சி வகுப்பை ஆன்லைனுக்கு எடுத்துச் செல்ல திட்டத்தைத் தயாரித்து கேட்க, 

தனது நிறுவனத்தில் ரூ 50 கோடி முதலீடு செய்ய வேண்டுமென ரவீந்திரன் கூற அதைக் கேட்ட ராஜனுக்கு அதிர்ச்சி. ஆனால்  அடுத்த வருடம் மீண்டும்  சந்தித்தபோது நிறுவனத்தின் மதிப்பீடு சுமார் ரூ 200 கோடி. பின்னர் ராஜனின் ஆரியன் கேப்பிட்டல் ரூ 50 கோடி முதலீடு செய்தது. பின்னர் அந்த முதலீடு ஒன்பது மடங்காக ராஜனுக்கு திருப்ப கிடைத்தது!

முகநூல் அதிபர் Mark Zuckerberg ன் மனைவி ஆரம்பித்த Chan Zuckerberg Initiative என்கிற அமைப்பு இதில் சுமார் 50 மில்லியன் டாலர் முதலீடு செய்திருக்கிறது. ஆசியாவில் இந்த அமைப்பு முதலீடு செய்திருக்கும் ஒரே ஸ்டார்ட் அப் நிறுவனம் இதுதான். ரவீந்திரனின் நிறுவனத்தில் Sequoia Capital India, Tencent, Sofina, Lightspeed Venture Partners போன்ற நிறுவனங்கள் சுமார் 785 மில்லியன் டாலர் முதலீடு செய்திருக்கின்றன. 

2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை பைஜூ’ஸ் செயலியை தரவிறக்கம் செய்தவர்களின் எண்ணிக்கை சுமார் 10 மில்லியன். இதில் 3.5 மில்லியன் பேர் ஆண்டு சந்தாதாரர்கள். இந்த நிறுவனத்தின் பயனாளர்கள் தக்க வைப்பு விகிதம் சுமார் 85 சதவிகிதம். 2019 ஆம் ஆண்டு இதன் எதிர்பார்ப்பு வருமானம் ரூ 1400 கோடி. லாபம் ரூ 20 கோடி. இந்த ஆண்டு வருமானம் ரூ 3000 கோடியைத் தொடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆறு முதல் எட்டு வருட குழந்தைகளுக்கு சுவாராசியமாக இருக்க வேண்டுமென்பதற்கான அவர்களுக்கான செயலியில் டிஸ்னி நிறுவனத்தின் பாத்திரங்களையும் (Characters) இடம் பெற வைக்க அந்நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது. இதோடு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சியையும் ஆன்லைன் மூலம் இந்நிறுவனம் கொடுத்து வருகிறது. 

இந்நிறுவனத்தின் முதலீட்டில் ரவீந்திரனின்  பங்கு சுமார் 36 சதவிகிதம். இது மற்ற எந்தவொரு ஸ்டார்ட்-அப் நிறுவனர்களின் பங்கு சதவிகிதத்தை விட அதிகம். இன்றைக்கு ரவீந்திரனின் சொத்து மதிப்பு 1.91 பில்லியன் டாலர். இந்நிறுவனத்தின் மதிப்பீடு சுமார் 6 பில்லியன் டாலர். இதில் வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 3,200.              

`தொலைதூர கல்வித் தீர்வு’க்கென யுனெஸ்கோ அறிவித்திருக்கும் நிறுவனங்களின் பட்டியலில் இந்தியாவிலிருக்கும் எட்-டெக் நிறுவனங்களில் பைஜூ’ஸ் மட்டுமே இடம் பெற்றிருக்கிறது. 

பைஜூ ரவீந்திரனின் வெற்றிக்கான காரணங்கள் என்ன?

  • மனதால் எதை விரும்புகிறீர்களோ அதைச் செய்யுங்கள்.
  • நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதே வெற்றியாகும். 
  • நான் பணம் சம்பாதிக்க வேண்டுமென்பதற்காக இதை ஆரம்பிக்கவில்லை. நான் எதை விரும்பினேனோ அதைச் செய்ய ஆரம்பித்தேன். அதுவே பின்னாளில் தொழிலாகி விட்டது. 
  • எனக்கு விளையாட்டில் ஆர்வம் இருந்ததால் அதிலிருந்து மன அழுத்தத்தை எப்படிக் கையாள்வது, ஓர் அணியாக எப்படி வேலை செய்வது, `killer instinct’ என சொல்லக்கூடிய வெற்றி பெற வேண்டுமென்கிற உறுதிப்பாடு ஆகியவற்றைக் கற்றுக் கொண்டேன். 
  • என்ன செய்யப்போகிறோம் என்பதில் ஒரு தெளிவு இருப்பது அவசியம்.  

இனிவரும் நாட்களில் பைஜூ’ஸின் வளர்ச்சி அபரிதமாக இருக்கும் என்பதில் வேறு கருத்துக்களுக்கு இடமில்லை.

Spread the lovely business news