ஆப்பிள், அது பழமாக அல்லது  தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக எப்படி இருந்தாலும் ஆதாம், ஏவாள் காலத்திலிருந்து அதற்கென்று ஒரு வரலாறு உண்டு.   

சிரியன் குடியேறியான அப்துல் ஃபட்டா ஜாண்டலிக்கும், ஜெர்மன் ஜோன் கரோலுக்கும் பிறந்த குழந்தைதான் ஸ்டீவ். ஆனால் குடும்பத்தில் ஏற்பட்ட  குழப்பத்தில்,  குழந்தை வேண்டி விண்ணப்பித்திருந்த பால், க்ளாரா ஜாப்ஸ் தம்பதிக்கு தங்களின் மகன் ஸ்டீவை தத்து கொடுக்க, அவர்கள் குழந்தைக்கு ஸ்டீவ் பால் ஜாப்ஸ் என்று பெயர் சூட்டினர். 

அம்மா  க்ளாரா வீட்டிலிருந்தபடியே பாடங்கள் சொல்லி கொடுக்க ஆரம்பித்ததால் பள்ளிக்கூடத்தில் சேர்வதற்கு முன்பே ஸ்டீவ் வாசிக்கக் கற்றுக் கொண்டார். அப்பா பால் எலக்ட்ரானிக்ஸில் ஆர்வம் உடையவராக இருந்ததால் அப்பாவும், மகனும் அவர்கள் வீட்டிலிருந்த கராஜை (garage) பயன்படுத்தி தொலைக்காட்சிப் பெட்டி, ரேடியோ, ஸ்டீரியோ போன்ற பொருட்களை அக்குவேறு ஆணி வேறாகப் பிரித்து மீண்டும் ஒருங்கிணைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். 

பள்ளியில் சேர்ந்த ஸ்டீவுக்கு நான்காம் வகுப்பு படிக்கும்போது அவரது ஐக்யூ உயர்நிலைப்பள்ளி மாணவனுக்கு இருக்கும் அளவு இருந்தது. பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் கல்லூரியில்  சேர, அவருக்கு விருப்பமில்லை. படிப்பை பாதியில் விட்டார்.. 

உலகைச் சுற்றிப்பார்க்கப் புறப்பட்டார். ஏழு மாதங்களுக்குப் பிறகு வீடு திரும்பியவர் கண்ணில் `கணினி’ பட்டது. அதைப் பார்த்தவுடன், `நான் அதன் மேல் காதல் வயப்பட்டுவிட்டேன்’ என்று தனது உணர்வை வெளிப்படுத்தியிருக்கிறார். 

1970 ஆம் ஆண்டு இவருக்கு நண்பர் ஸ்டீவ் வோஸ்னியாக் (Steve Wozniak)அறிமுகமானார்.இருவரும் இணைந்து தொடர்ந்து கராஜில் எலக்ட்ரானிக்ஸ் சம்பந்தமான வேலையைச் செய்துவர அதன் விளைவாக பிறந்ததுதான் முதல் நவீன பெர்சனல் கம்ப்யூட்டர் `ஆப்பிள் 1’. அதே ஆண்டு ஸ்டீவ்களுடன் ரொனால்ட் வேய்னும் சேர `ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ்’ புதிய நிறுவனம் உருவானது. இதுவே `ஆப்பிள் Inc’ என இன்றைக்கும் இயங்கி வருகிறது. 

ஆப்பிள் 1 அறிமுகமாவதற்கு முன் சந்தையில் கணினி விற்கப்படவில்லை. மாறாக  உதிரியாக அதனுடைய பாகங்கள் விற்கப்பட்டு அதை ஒருங்கிணைப்பு செய்ய வேண்டியிருந்தது. இது தொழில்நுட்பம் அறியாதவர்களுக்கு  மிகுந்த சிரமமாக   இருந்தது. ஆப்பிள் 1 மூலம் அந்தக் குறைத் தீர்க்கப்பட்டது. இதற்குப் பின் மேம்படுத்தப்பட்ட கணினி ஆப்பிள் II என்கிற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. 1984 ஆம் ஆண்டு Mac என சுருக்கமாக அழைக்கப்படும் Macintosh கணினி அறிமுகப்படுத்தப்பட்டது ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்த கணினியில்தான் முதன் முதலாக GUI அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் மெளஸை விண்டோவுக்கும், அதில் இருக்கும் ஐகான்களுக்குமிடையே நகர்த்திக் கொண்டிருந்தால் போதுமானதாக இருந்தது. இதன் மூலம் கணினியின் இயக்கமும், இயக்கப்படுவதும் எளிதானது. 

ஆனால் நிறுவனத்தை ஆரம்பித்த நிறுவனரே நிறுவனத்தை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது. 1985 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக இருந்த ஜான் ஸ்கல்லிக்கும் ஸ்டீவுக்கும் ஏற்பட்ட மன வருத்தத்தால் `நிறுவனர்’ வெளியேறினார். ஆனால் அவரிடம் இருந்த தொழில்முனைவோருக்கான உத்வேகம் மட்டும் குறையவில்லை. தொழில்நுட்பத்தை பொழுதுபோக்குத் துறையிலும் பயன்படுத்தும் நோக்கில் NeXT என்கிற ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தார்.

1990 ஆம் ஆண்டு கல்வி, நிதி, அறிவியல் துறையைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் பயன்படும்படியான Work Station ஐ அறிமுகப்படுத்தினார். இது தொழில்நுட்ப ரீதியில் பல புதிய அம்சங்களைக் கொண்டிருந்தது. சொல்லப் போனால் இந்த ஒர்க் ஸ்டேஷன் மூலம்தான் ஸ்விட்சர்லாந்தின் CERN ஐச் சேர்ந்த Tim Berners-Lee உலகளாவிய இணையத்தைக் (World Wide Web) கண்டறிந்தார். 

1997 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் NeXT நிறுவனத்தை வாங்கியது. ஸ்டீவ் மீண்டும் ஆப்பிளுக்குத் திரும்பினார்! அதன் பிறகு, நிறுவனம் புத்துணர்ச்சி பெற்றது. 

1998 ஆம் ஆண்டு ஸ்டீவ் iMac ஐக் கண்டுபிடித்து இதில் CD பயன்பாட்டுக்கு  பதிலாக  USB ஐ  அறிமுகம் செய்தார். அதோடு இது இணையதளத்தைப் பயன்படுத்துவோர்களை கவனத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்தது. இது தகவல் தொழில்நுட்பத் துறையில் ஸ்டீவுக்கு இருந்த தொலைநோக்குப் பார்வைக்கு ஓர் உதாரணம் ஆகும். 

NeXTல் இருக்கும்போதே அவர் லூகாஸ் ஃபிலிம்ஸின் க்ராஃபிக் டிசைன் பிரிவை விலைக்கு வாங்க அதுவே பிறகு பிக்ஸார் அனிமேஷன் ஸ்டூடியோவாக உருவெடுத்து அனிமேஷன் படங்கள் எடுப்பதற்கான ஒரு `hub’ ஆக மாறியது. அதன் பின், டிஸ்னிலாண்ட் அந்த ஸ்டூடியோவை 7.4 பில்லியன் டாலர் பணம் கொடுத்து வாங்கியது. இதன் மூலம் டிஸ்னி லாண்டின் பெரிய பங்குதாரராக (சுமார் 7 சதவிகிதம்) ஸ்டீவ் இருந்தார்!

இதற்குப் பிறகு சந்தைக்கு வந்த ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்கள் அனைத்தும் – iPod, iTunes store, iPad, iPhone, Apple Watch, Apple TV போன்றவை – புதுமைக்கும், தனித்துவத்துக்கும், வடிவமைப்பிற்கும் உலகப் புகழ் பெற்றதாக இருந்து வருகிறது. iPad சந்தைக்கு வந்த நாளன்று மட்டும் சுமார் 3 லட்சம் விற்பனையாயிற்று. iPhone வாங்க மக்கள் வரிசையில் நின்றது சரித்திர பிரசித்தம்!

தொலைநோக்கு பார்வை, புதுமை இவற்றில்  பேரார்வம் கொண்டிருந்த ஸ்டீவ் 2011 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்.  

`புதுமையாக்கம் ஒன்றுதான் தலைவனையும் தொண்டனையும் வேறுபடுத்தும்’ என்ற ஸ்டீவ், அது போலவே தகவல் தொழில்நுட்பத்துறையில் கடைசி வரை தலைவராக இருந்தார். இவர் ஆரம்பித்த ஆப்பிள் நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 260 பில்லியன்  டாலர் (2019), பணியாளர்கள் 1,37,000. உலக அளவில் நான்கு பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்று ஆப்பிள். (அமேசான், கூகுள், மைக்ரோசாஃப்ட் ஆகியவை மற்ற மூன்றும்)  

ஸ்டீவ் ஜாப்ஸ் தொழில்முனைவோர்களுக்கு சொல்வதென்ன?  

  • உங்கள் மனதையும், உள்ளுணர்வையும் பின்பற்றுவதற்கு தைரியம் தேவை
  • நாட்டில் இருக்கும் கல்லறையில் செல்வந்தனாக உறங்குவது பெரிய விஷயம் இல்லை. ஆனால் உறங்கப் போகுமுன் இன்றைக்கு சிறப்பாக வேலை செய்தேன் என்கிற அந்த மனநிறைவுதான் முக்கியம். 
  • புதுமையாக்கத்தில் ஈடுபடும்போது தவறுகள் நடக்கத்தான் செய்யும். அதை ஏற்றுக் கொண்டு அடுத்தடுத்த புதுமையாக்கத்தை நோக்கி செல்வதுதான் வெற்றியை நோக்கியப் பயணத்துக்கு வழிவகுக்கும். 
  • உங்களுக்கான நேரம் குறுகியது எனவே வேறொருவர் போல வாழ்ந்து அதை வீணாக்காதீர்கள்.
  • அவருடைய மிகப் பிரபலமான மேற்கோள் `பசியுடன் இருங்கள், முட்டாளாக இருங்கள்” (Stay Hungry; Stay Foolish). மேலும்  கற்றுக் கொள்ள பசியுடன் / ஆவலுடன் இருங்கள், கனவைத் தொடருங்கள் என்பதாகும். இந்தத் தலைப்பில் அவர் 2005 ஆம் ஆண்டு ஸ்டான்ஃபோர்ட் பல்கலைகழகத்தில் உத்வேகமாக ஓர் உரை நிகழ்த்த அதுவும் ஆப்பிளைப் போலவே உலகளவில் பிரபலமானது.  
Spread the lovely business news