சமீப காலமாக மனிதர்களை யானைகள் தாக்குவதும், மனிதர்களால் யானைகள் பல்வேறு சிரமங்களுக்கு உட்படுவதும் தினசரி நிகழ்வாக மாறிவிட்டது.

இப்பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தோடு, நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஒரு கருவியை கரூர் ஸ்ரீ சங்கரா வித்யாலயா பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் யு. அபிநவ நாகராஜன் என்ற மாணவர் தனது வழிகாட்டி ஆசிரியர் து.ராஜசேகரன் அவர்களின் உதவியோடு வடிவமைத்துள்ளார்.

யானைகளின் கேட்கும் திறன் மிக அதிகம். நுண்ணிய ஒலியைக்கூட துல்லியமாக அறியக்கூடிய நுண்ணறிவு கொண்ட விலங்கு.  அவை தனது காதுகளை அசைத்துக் கொண்டே இருப்பது அருகில்  ஒலியில் ஏற்படும் மாற்றத்தை அறியவும் மற்ற யானைகளோடு தகவல்களை காற்றின் மூலம் பரிமாறிக்கொள்வதற்காகவும் ஆகும். 

அடிப்படையில் யானைகள் தேனீக்களின் ரீங்காரத்திற்கு அஞ்சக்கூடிய விலங்கு. தேனீக்களின் ரீங்கார ஒலியை 8 மீட்டர் தொலைவில்  உணரக்கூடியது. தேனீயின் ரீங்கார ஒலியின் அதிர்வெண் 150 ஹெர்ட்ஸ் முதல் 200 ஹெர்ட்ஸ் வரையிலானது. அவ்வாறு அந்த ரீங்கார ஒலியை யானைகள் உணரும் போது அவை உடனடியாக அப்பகுதியில் இருந்து வேறு பகுதிக்கு செல்லத் தொடங்கிவிடும். 

எனவே நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தேனீக்களின் ரீங்கார ஒலியை செயற்கை முறையில் உருவாக்குகிறார். இதற்காக சிறிய ஒலிபெருக்கி கொண்டு தானியங்கி மூலம் நவீன சென்சார்களை கொண்டு இயங்கும் கருவியை வடிவமைத்துள்ளார். குறைந்த செலவில் வடிவமைக்கப்பட்டுள்ள இக்கருவியைப் பயன்படுத்தி யானைகளின் மூலம் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்,  தாக்குதல்களை தடுத்து  உயிர்சேதங்களை தவிர்க்கலாம். இக்கருவியைக் கொண்டு குடியிருப்பு பகுதியில் யானைகளால் ஏற்படும் பாதிப்புகளை முழுமையாக கட்டுப்படுத்த முடியும்.

இக்கருவியை வீடுகள் மற்றும் சுற்றுச்சுவர் (காம்பவுண்ட்) இவற்றில் பொருத்துவதன் மூலம் யானைகள் மனிதர்களை தாக்குதலை 100% தடுக்கலாம். மேலும் நவீன தொழில் நுட்பத்தோடு கூடிய CCTV கேமராக்களோடு இக்கருவியை இணைத்து பல மீட்டர்கள் தொலைவில் வரும் யானைகளை கூட கண்டறிந்து மனித-யானை மோதலை தடுக்கலாம் என கூறுகிறார் இந்த மாணவர்.

மேலும் இந்த கருவியை சிறிய வடிவில் கைக்கடிகாரம் போன்ற வடிவமைத்தும் கையில் அணிந்து கொண்டு செல்லும்போது மலைப்பகுதிகளில் யானைகளால் ஏற்படக்கூடிய தனிமனித தாக்குதல்களிலிருந்து தப்பிக்க முடியும் என உறுதியளிக்கிறார்.

இக்கருவியை குடியிருப்பு பகுதியில் மட்டுமின்றி தோட்டங்களில் மற்றும் வயல்வெளிகளிலும் அமைத்து யானைகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்தும் பயிர்கள் மற்றும் விவசாயிகளை காப்பதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் மலைப்பகுதிகளில் பயணிக்ககூடிய வாகனங்களில் வெளிப்பகுதியில் இக்கருவியை பொருத்துவதன் மூலம் யானைகளால்; வாகனங்களின் மேல் ஏற்படக்கூடிய தாக்குதல்களை முழுமையாக தடுக்காலம். மேலும் இக்கருவியினால் மனிதர்கள் மட்டுமின்றி மனிதர்களால் யானைகள் மீது ஏற்படும் தாக்குதல்களையும் முழுமையாக தடுக்க முடியும். இக்கருவி அனைத்து விதமான யானை-மனித மோதல்களுக்கு ஒரு சிறந்த தீர்வாக அமையும் என்கிறார் அந்த மாணவர்.

தற்பொழுது யானைகளை கட்டுப்படுத்த பல இடங்களில் மின்வேலி முறையை பயன்படுத்துகிறார்கள். இதனால் யானைகள் மற்றும் மனிதர்கள் கூட அதிக அளவு ஆபத்தை எதிர்கொள்கிறார்கள். மேலும் யானைகளை விரட்ட தீ மூட்டுவது, மற்றும் பட்டாசுகள் வெடிப்பது போன்றவை மேலும் ஆபத்திற்கு வழிவகை செய்வதாக உள்ளது. இக்கருவி அனைத்து வகை பிரச்சனைக்கும் சரியான தீர்வாக அமையும். 

இப்புதிய கண்டுபிடிப்பு கோவை சிறுதொழில் சங்கம் (கொடிசியா) சார்பில் தேசிய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப கண்காட்சியில் சென்ற மாதம் 29ம் தேதி முதல் 31ம் தேதி வரை காட்சிப்படுத்தப்பட்டு பலரின் பாராட்டுகளையும் வரவேற்பையும் பெற்றது. இம்முறையை நடைமுறைப்படுத்த பலரும் வேண்டுகோள் விடுத்தனர். 

வழிகாட்டி ஆசிரியர் : து.ராஜசேகரன் 

தொடர்புக்கு : 99449 24271             

Spread the lovely business news