How Sindhis Do Business – “PAISO”

பாகிஸ்தானில் உள்ள சிந்து பகுதியிலிருந்து வந்த ஒரு சமூகத்தினர் தான் சிந்திகள். கூடுதல் டர்ன் ஓவருக்ககாக குறைந்த லாபத்தில் வியாபாரத்தை நடத்துவதற்காக அறியப்பட்டவர்கள். இந்த புத்தகத்தில் பிரபலமான ஐந்து சிந்தி வணிகர்களை பற்றிய வெற்றிக் கதைகளை தந்திருக்கிறார்கள். இந்தியாவைச் சேர்ந்த முன்னோடி வணிகர்களில் சிந்திகளும் உள்ளனர்… ஹூண்டி பில் தள்ளுபடி முறை சிந்தி சமூகத்தினர் கொண்டு வந்திருக்கிறார்கள் என புத்தகத்தில் குறிப்பிடுகிறார்கள்.( ஆனால் இந்த முறை  தமிழ்நாட்டைச் சேர்ந்த நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தினரும் கொண்டு வந்ததாக சொல்கிறார்கள்). தங்கள் வணிகத்தில் பேரார்வமும் உடனடியாக நடவடிக்கைகளை எடுப்பதிலும் பேர் போனவர்கள். இந்திய- பாகிஸ்தான் பிரிவினையின்போது அதிகமாக பாதிக்கப்பட்டது இந்த சமூகம் தான் . தங்கள் தாயகத்தை விட்டு விட்டு  வெறும் கையும் வீசிய கையுமாய் புறப்பட்டவர்கள் இப்போது உலகம் எங்கும் பரவிக் கிடக்கிற சமூகமாக திகழ்கிறார்கள். 

பிரிவினைக்கு பின்பு பம்பாயில் சிந்திகளைப் பற்றி உலவும் ஒரு கருத்து என்னவென்றால் சிறு தொகையை சம்பாதிப்பதற்காக ஒரு  சிந்தி எதை வேண்டுமானாலும் செய்வார் என்பதுதான் அது. சிந்தி களின் வியாபாரத் திறமை பற்றி பம்பாயில் பன்னெடுங்காலமாக உலவி வரும் ஒரு கதை:

“கடைகளில் 50 கிலோ சர்க்கரை கொண்ட ஒரு பை ரூபாய் 50 க்கு விற்கிறதென்றால் சிந்தி வியாபாரிகள் அந்த சர்க்கரை பைகளை வாங்கி ரூ 1. அடக்கமான ஒரு கிலோ சர்க்கரையை 99  காசுக்கு விற்பார்கள். இது சந்தை விலையை விட ஒரு பைசா மலிவுதான். அதிகமான சர்க்கரை பைகள் விற்கும்போது இழப்பு அதிகமாகும். இந்த கணக்குப்படி 50 கிலோவுக்கு நிகர நஷ்டம் 50 காசுகள். பணத்தை இழப்பதற்காக ஒரு நபர் ஏன் இவ்வளவு கடினமாக உழைக்க வேண்டும் என மற்றவர்களை வியக்க வைத்தது. அங்கேதான் நிற்கிறது சிந்தி  தொழிலதிபரின் வியாபார சூட்சுமம்.ஒவ்வொரு முறையும் ஒரு சிந்தி தொழிலதிபர் ஒரு வெற்றுப் பையை ரூ 1 க்கு விற்கும்போது, ஒவ்வொரு 50 கிலோ பை சர்க்கரையிலும் 50 பைசா நிகர லாபம் ஈட்டினார் என்பதை மற்றவர்கள் கண்டு கொள்ளத் தவறியது”.

இந்த புத்தகம் ஐந்து சிந்தி தொழிலதிபர்களின் வாழ்க்கையை   உள்ளடக்கியது:

1. ஹரிலேலா குடும்பம் (ஹாங்காங்)- இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஹாங்காங்கில் குடியேறிய முதல் சிந்தி குடும்பங்களில் ஒன்றாகிய ஹரிலெலாஸ் 1930 -களில் நிலவிய போர் மற்றும் பொருளாதார மந்த சூழ்நிலைகளை தாண்டி வெற்றியாளர்களாக தங்களை நிலை நிறுத்திக் கொண்டனர்.அவர்கள் ரியல் எஸ்டேட் மற்றும்  ஹோட்டல் தொழில்களில் கால் பதித்தனர். இன்று, அவர் ஹரிலெலாஸ் ஹோட்டல், டிராவல் ஏஜென்சிகள் மற்றும் ரியல் எஸ்டேட் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு கூட்டு நிறுவனமாகும், மேலும் ஹாங்காங் பங்குச் சந்தையில் ஒரு இடத்தைப் பெற்றுள்ளனர்.

2. ரமோலா மோட்வானி, மெர்ரிமேக் வென்ச்சர்ஸ் . இது ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனமாகும், இது ஃபோர்ட் லாடர்டேலில் (புளோரிடா, அமெரிக்கா) அமைந்துள்ளது .ரமோலா மோட்வானி தலைமையில், அவரது இரண்டு மகன்களும் வியாபாரத்தில் உறுதுணையாக இருக்கின்றனர்.

3. ஹரிஷ் ஃபேபியானி (மாட்ரிட்)- இந்தியாவின் பர்ஸ்ட் ஏஞ்சல் முதலீட்டாளர்களில் ஒருவரான ஹரிஷ் ஃபேபியானி.,ஒரு குடும்பம் நடத்தும் சிந்தி வணிகத்தைப் போலல்லாமல், ஹரிஷ் நடத்தும் நிறுவனம் முதலீடு செய்யும் ஒவ்வொரு வணிகத்திற்கும் புரோபஷனல் அப்ரோச் -தொழில்முறை அணுகுமுறையை எடுக்கிறது..ஹரிஷ் 1983 இல் இந்தியாவை விட்டு வெளியேறி, அவரது மூத்த சகோதரருடன் ஒரு மின்னணு வணிகத்தை வெற்றிகரமாக நடத்தி வந்தனர், பின்னர் ஸ்பெயினில் ரியல் எஸ்டேட்டில் இறங்கினர். இன்று, ஹரிஷ் மாட்ரிட் தலைமையிடமான அமெரிக்கார்ப் குழுமத்தின் தலைவராக உள்ளார்,  

4. திலீப் குமார் லக்கி (மும்பை)- லக்கி குழுமம் இந்திய  வைரங்கள் ரத்தினங்கள் மற்றும் நகைத் துறையில் நீண்டகால வரலாற்றைக் கொண்டுள்ளது. பலராலும் அறியப்படாத,லக்கி குழுவின் தலைவர் திலீப் குமார் லக்கி 2003 ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிக தனிநபர் வரி செலுத்துபவர்  ஆனபோதும்,மும்பையில் புகழ்பெற்ற கேட்பரி ஹவுஸை வாங்கியபோதும் தான் அவரை இந்தியா கண்டு கொண்டது என்றே சொல்லலாம்

5. ஜிது விர்வானி,  எம்பஸி குரூப் (பெங்களூரு).- விரிவான திட்டமிடல் மற்றும் மூலோபாயத்துடன் படிப்படியாக  ஜிது  தனது எம்பஸி வணிகத்தை கட்டியெழுப்பினார்.

இந்தப் புத்தகத்தில் நாம் கண்டுகொள்ளும் சிந்தி வணிகங்களை / வணிகர்களை  பற்றிய  முக்கிய அம்சங்கள்:

1. உலகளாவிய பார்வை- வாய்ப்புகளைத் தேடி தாய்நாட்டை விட்டு வெளியே சென்று வியாபார முயற்சிகளை மேற்கொள்வது.

2. எந்த ஒரு முயற்சியிலும் தொழில் முனைவு சார்ந்த பார்வை.

3. வியாபாரத்தின் வெவ்வேறு பகுதிகளில் குடும்ப உறுப்பினர்களை இணைத்துக் கொள்வது

4. சிறிய அளவிலான வணிகங்கள் -சிந்திகளுக்கு சொந்தமான பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் எதுவும் இல்லை, ஏனெனில் அவர்கள் தங்கள் வணிகத்தில் வெளியாட்களின் யோசனையை விரும்புவதில்லை

5. மார்க்கெட் லீடர்ஷிப்-சந்தை தலைமை, அதிக அளவு மற்றும் சந்தைப் பங்கிற்காக குறைந்த லாபத்தில் வியாபாரத்தை மேற்கொள்வது.

6. சிந்தி குடும்பங்கள் உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு குடிபெயர்ந்து, தங்கள் குழந்தைகளை வெளிநாடுகளுக்கு கல்விக்காக அனுப்புகின்றனர்.இடம்பெயர்ந்த பிறகு, அவர்கள் தங்கள் உறவினர்களை அவர்களுடன் சேர்த்துக் கொள்வார்கள், இதனால் உறவினர்கள் தங்கள் சொந்த வாய்ப்புகளை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், குடும்ப வணிக வளர்ச்சிக்கு உதவவும் முடியும். சிந்திகள் மத்திய கிழக்கு, கரீபியன், ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆபிரிக்கா ஆகிய நாடுகளுக்கு சென்று வியாபாரம் செய்து வருகின்றனர்.பல ஆண்டுகளாக அவர்கள் வணிகங்கள் வர்த்தகம் மற்றும் நிதி நிறுவனங்கள் , ஏற்றுமதி / இறக்குமதி, சில்லறை விற்பனை, பொழுதுபோக்கு, கணினிகள், சொத்து / ரியல் எஸ்டேட்  போன்ற பல்வேறு துறைகளிலும் வியாபித்திருக்கின்றனர். 

7. பெரும்பாலான சிந்தி குடும்பங்கள் கல்வியைப் பெறுவதற்கு செலவிடும் நேரத்தை பணம் சம்பாதிப்பதற்கு சிறப்பாக செலவிட முடியும் என்று கருதினர். வழக்கத்திலுள்ள முறையான கல்வி மூலம் பெறக்கூடிய அறிவை,அவர்களது ரத்தத்தில் ஊறிப்போன, உள்ளார்ந்த வணிக உணர்வை நடைமுறை மற்றும் அனுபவத்தால் வளர்க்க முடியும் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளனர்.

அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் கிடைக்கும் இந்த புத்தகத்தை படித்துப் பார்த்தால் சிந்தி  வணிகர்களின் வெற்றிக்கான ரகசியம் புரியும்.

Spread the lovely business news