ஒரு முறை உபயோகித்துவிட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் பைகளால் சுற்றுச்சூழலுக்கும் புவிக்கும் மனிதனுக்கும் ஏற்படும் தீமைகளைப் பட்டியலிட்டு, அவ்வகை பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்க வேண்டாம் என்று அரசாங்கம் கூறியதும், பெரும்பாலான வணிக நிறுவனங்களும் கடைகளும் துணிப்பைகள் மற்றும் காகிதப் பைகளை உபயோகிக்க ஆரம்பித்துவிட்டன. இதிலிருந்துதான் தனது ‘ஸ்டார்ட் அப்’ தொழில் ஐடியாவைப் பிடித்துள்ளார் மதுரையைச் சேர்ந்த கிருஷ்ணன். 

எம்.பி.ஏ முடித்துவிட்டு, அமேசான் நிறுவனத்தில் 10 வருடங்கள் பணியாற்றியவர் கிருஷ்ணன். இவருடைய மனைவி கௌரி, எம்.எஸ்சி படித்தவர். அவரும் பிரபல ஐ.டி. நிறுவனத்தில் பணி செய்தவர்.

‘மஞ்சப்பை’ உதயமான வரலாற்றை கிருஷ்ணனிடம் கேட்டோம்.

‘‘2009ல் எங்களுக்குத் திருமணமாச்சு. 2012ல் சென்னையில் வேலை பார்த்தபோது, சூழலியல் ஆர்வலர்கள் சிலரின் நட்பு கிடைத்தது. அந்தத் தாக்கத்தில் நாமும்  நம் சமூகத்துக்கும் எதிர்கால சந்ததிக்கும் உபயோகமாக ஏதாவது செய்யலாமே என்கிற எண்ணம் வந்தது.

அது பிளாஸ்டிக்கை உபயோகிக்க வேண்டாம் என்ற பிரசாரம் தீவிரமாகத் தொடங்கிய நேரம் என்பதால், பிளாஸ்டிக்குக்கு மாற்றாக துணிப்பைகளைத் தயாரிக்கலாமேன்னு ஓர் எண்ணம் இருந்தது. 2014ல் அதைப் பத்திப் பேச ஆரம்பிசோம். முன்பெல்லாம் நம்ம ஊரில் எங்கே போனாலும் ‘மஞ்சப்பை’தானே! அதனால் எங்க நிறுவனத்துக்கு ‘மஞ்சப்பை’ என்ற அர்த்தம் வருவது போல ‘யெல்லோ பேக்ஸ்’ என்று பெயர் வச்சோம். முதலில் வீட்டிலேயே பைகளைத் தைத்து, ஸ்டால் போட்டோம்.

ஸ்டால்களில் நல்ல வரவேற்பு கிடைத்தது. நிறைய பேர் கேக்க ஆரம்பிச்சாங்க. 2015ல் நானும் கௌரியும் வேலையை விட்டுட்டு மதுரைக்கு வந்து இதையே முழுநேர தொழிலாகத் தொடங்கினோம். வறுமைக்கோட்டில் இருக்கும் குடும்பத்துப் பெண்களில் தையல் தெரிஞ்சவங்களிடம் பைகளைத் தைக்க ஆர்டர் கொடுத்தோம். அவங்க வாழ்வாதாரத்துக்கு ஒரு வருமானம் கிடைச்ச மாதிரியும் ஆச்சு! சுய உதவிக் குழுக்களிடமும் தைக்கக் கொடுத்து வாங்கினோம். அதன் பிறகுதான் நாங்களே மதுரையில் ஒரு வீடு எடுத்து, பெண் தையல்காரர்களை நியமிச்சு விதம் விதமான வடிவங்களில் துணிப்பைகளைத் தைத்து ஆன்லைன் மூலம் விற்கத் தொடங்கினோம்.. ஆனால் விதம் விதமான வண்ணங்களில் சிந்தெடிக் பைகளை உபயோகித்த மக்களை எங்களுடைய இயற்கையான, சாயத்தில் நனைக்காத துணிப்பையை வாங்க வைப்பது கொஞ்சம் சவாலாகத்தான் இருந்தது. அதனால கொஞ்சம் வார்த்தைகள், படங்கள், லோகோ மாதிரி அச்சிடறோம்..’’ என்று ‘மஞ்சப்பை’யின் வரலாற்றை விவரித்தார் கிருஷ்ணன்.

இவர்கள் நிறுவனத்துக்கு இப்போது இந்தியா முழுவதிலும் இருந்து ஆர்டர்கள் வருகின்றன. அயல்நாட்டினரும் விரும்பி வாங்குகிறார்கள். 

‘‘சமூக வலைதளங்களும் நண்பர்களும்தான் எங்களுக்கு பெரிய ஆதரவு கொடுத்தாங்க. அவங்க மூலமாக ‘மஞ்சப்பை’ பற்றிய தகவல் நன்கு பரவியது. பல புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமானாங்க. இப்போது எங்க நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் எல்லாருமே அக்கம்பக்கம் வசிக்கும் பெண்கள்தான். எல்லோருக்கும் குழந்தைகளை விட்டுட்டு வேலைக்குப் போகமுடியாத சூழல். அவங்களுக்கு இங்கே வேலைவாய்ப்பு கொடுத்தோம். அவங்க குழந்தைகளுக்கு மாலையில் ட்யூஷன் இங்கேயே சொல்லித் தர்றோம். இந்தப் பெண்களை ‘சுய உதவிக் குழுக்களாக’ மாத்தி, இந்தத் தொழிலை சமூகம் சார்ந்த தொழிலாக ஆக்கிவிட்டோம். சமூகத்தில் இருந்த ஒரு பிரச்னையைக் களைவதற்கும் அதற்கு சரியான மாற்றம் கொண்டுவர்றதுக்குமான வழிதான் இந்தத் தொழில். 

செய்ற பொருள் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காததாக இருக்கணும்; அதே சமயம் இதில் வரும் லாபமும் அந்த நிறுவனத்துக்கே போகணும் என்கிற எண்ணத்தில், இதை ‘யெல்லோ பேக்ஸ் ஃபவுண்டேஷன்’ என்கிற ‘நான் ப்ராஃபிட்டபிள் நிறுவனமாக’ மாத்தினோம். இந்தப் பெண்கள் செய்ற பைகளை விற்பனை செய்றதுக்காக ‘மேக்கர்ஸ் கார்ட்’ என்கிற துணை நிறுவனமும் தொடங்கினோம். ‘NGO’ என்ற பேரில் நன்கொடை எல்லாம் வாங்குவதில்லை. நாங்க செய்ற தொழில் மூலமாக எங்க ‘NGO’ வுக்கு பணம் வந்துடும். நாங்களும் இதில் சம்பளம் எடுத்துக்கிறோம்’’ என்கிறார் சமூக அக்கறை கொண்ட இந்தத் தொழிலதிபர்.  

அங்கே தயாராகும் பைகள் குறித்து கௌரி கிருஷ்ணனிடம் கேட்டோம்.

‘‘மாதத்துக்கு 30000 முதல் 50000 வரை பைகள் தயாரிக்கிறோம். வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கேற்ப வாசகங்கள், படங்களை அச்சிட்டு, தரமாகக் கொடுக்கிறோம். அதுக்கு ரசாயனம் கலக்காத இயற்கை சாயங்களைத்தான் உபயோகிக்கிறோம். எங்க யூனிட்டில் கட்டிங், டையிங், பிரின்டிங், டெய்லரிங் எல்லாப் பிரிவுகளும் இருக்கு.     

20 பைகள் கேக்கறவங்க முதல் 20000 பைகள் கேக்கறவங்க வரை வேறுபட்ட தளங்களில் வாடிக்கையாளர்கள் இருக்காங்க. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கஸ்டமைஸ்டு புரமோஷனல் பைகள் மொத்தமாகவும் பல்க் ஆர்டர்களும் தைச்சுக் கொடுக்கிறோம். அவை தவிர கைப்பை, தோள்பை, நீளமான கைப்பிடியுள்ள பை மற்றும் சாதாரண துணிப்பைகளைத் தைக்கிறோம். எங்களிடம் வாங்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்றவங்களும் இருக்காங்க.

பைகளுக்கு வெட்டியது போக எஞ்சி விழும் துணிகளை வீணாக்காமல், அதை ‘அப்சைக்ளிங்’ செய்து குழந்தைகளுக்கான குட்டிப் பைகள் மற்றும் பவுச்கள் தயாரிக்கிறோம். இப்படிச் செய்றதால் சுமார் ஒரு டன் எடையுள்ள துணியை மீண்டும் 4, 5 வருஷம் பயன்படும் பொருளாக மாத்துறோம்’’ என்று கூறிய கௌரி அவர்களின் தயாரிப்புகளை நம்மிடம் காண்பித்தார். ஒவ்வொரு பையும் ஒவ்வொரு டிசைனில் மனதைக் கவர்ந்தது.

சுற்றுச்சூழலில் அக்கறை கொண்ட அயல்நாட்டு தன்னார்வ நிறுவனங்கள் பல, ‘மஞ்சப்பை’ நிறுவனத்துக்கு வருகை தருவதுடன், அவர்களின் தயாரிப்புகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுவது குறிப்பிடத்தக்கது.

‘‘இங்கே எல்லா பிரிவுகளிலும் சேர்த்து சுமார் 20 பெண்களுக்கு மேல் வேலை செய்றாங்க. இதை ஒரு பெரிய குடும்பம்னு சொல்லலாம். பூமிகா, இலை, துளசி, டஸ்கர் என்று பல்வேறு பிராண்டுகளில் சிறு சிறு பிரிவுகளாக பைகளைத் தயாரிக்கும் குழுக்கள் இருக்கு. சம்பளம் பெறும் தொழிலாளர்கள் நிறைந்த நிறுவனம்னு சொல்றதை விட, நிறைய குறுந்தொழிலதிபர்கள் இணைந்த ஒரு பெரிய குழு என்று எங்களைச் சொல்லலாம்.

இதில் தன்னிறைவு அடைந்த பிறகு, அடுத்ததாக பெண்களுக்கான உள்பாவடை, பிளவுஸ், தலையணை உறை போன்றவற்றைத் தைக்கலாம்னு யோசனை இருக்கு. தையல் தெரிந்த பெண்கள் வீட்டிலிருந்தே தைச்சுக் கொடுத்தா, நாங்க மார்க்கெட்டிங் பண்ணலாம். மேலும் வீட்டிலேயே தயாரிக்கும் மசாலா பொடிகள் தயாரிக்கும் திட்டம் இருக்கிறது. பிளாஸ்டிக் பைகளில் அடைத்த ஏதோ ஒரு மசாலாபொடியைத்தான் இப்போ நாம வாங்கிட்டிருக்கோம். அதையே வீட்டில் ஒரு பெண் செய்து கொடுத்தால் சுவையும் நல்லா இருக்கும்; உடலுக்கும் கேடு செய்யாது..’’ என்று தன் கனவுகளைப் பகிர்கிறார் கிருஷ்ணன்.

சமுதாயத்துக்கு நன்மை செய்யும் எந்தவொரு தொழிலுக்கும் எப்போதும் வெற்றிதான் பாஸ்!

Spread the lovely business news