2020 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் கோவிட்-19க்கு முந்தைய காலத்தில் இருந்த உலகம், கோவிட்-19 காலத்துக்கு மாற ஆரம்பித்தது. எல்லா இடங்களிலும் மக்கள் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதில் பலர் இறந்தனர். தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த, முகக் கவசம் அணியுங்கள், கைகளை அடிக்கடி கழுவுங்கள், முகத்தைத் தொடுவதைத் தவிருங்கள், சமூக இடைவெளியை பின்பறுங்கள் என்று ஒவ்வொரு நாடும் தங்கள் மக்களைக் கேட்டுக் கொண்டன. இவை தொற்றுப் பரவலைக் குறைக்க உதவும் எனக் கருதப்பட்டது.

கொரொனா தொற்று குறித்து கவலையில்லாமல் தானும் தனது குடும்பமும் வாழும் காலம் வரும் என்ற நம்பிக்கையில் மக்கள் காத்திருக்கின்றனர்.  கோவிட்-19, நாளடைவில் வீரியம் குறைந்து அல்லது அதற்கான தடுப்பு மருந்து பரவலாகக் கிடைக்கும் பட்சத்தில் மக்களின் நம்பிக்கை நிறைவேறும்.  தங்கள் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளாமல் முன்பு போல வழக்கமான இயல்பு நிலைக்கு கோவிட்-19க்குப் பிறகும் மக்கள் வர வேண்டும். 

கோவிட் காலம் மூன்று நிலைகளைக் கொண்டிருக்கிறது. அவை ஊரடங்கு காலம், தளர்வுகள் காலம், பொருளாதார மீட்புக் காலம் என்பவை. 

இதில் பொருளாதார மீட்புக் காலம் குறித்து இங்கே பார்ப்போம்.

பொருளாதார வளர்ச்சிக்குத் திரும்பக்கூடிய வேகம் பல காரணிகளைச் சார்ந்திருக்கிறது. 

முதலாவதாக, ஆயிரக்கணக்கான தொழில்கள் நிரந்தரமாக மூடப்பட்டு விட்டன என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். பெரும்பாலான உணவகங்கள், துணிக்கடைகள், மற்ற தொழில்கள் ஒரு போதும் மீண்டும் திறக்கப்பட போவதில்லை. இந்தத் தொழில்களை நடத்தி வந்தவர்களால் கடனை அடைக்கவோ, பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்கவோ பணம் திரட்ட முடியாது. அவர்கள் திவாலாகியிருக்க வேண்டும். அல்லது தொழில்களை மூடியிருக்க வேண்டும். இதற்கிடையில் நிலைத்து நிற்கும் மற்ற தொழில்கள் மெதுவாக திறக்கப்படும். தைரியமான சில தொழில்முனைவோர் தேவையும் வாய்ப்பும் எங்கு இருக்கிறதோ அங்கே புதிய உணவகங்களை, துணிக்கடைகளை, மற்ற தொழில்களைத் தொடங்கக்கூடும், ஆனால் இதற்கு சில காலம் ஆகலாம். 

இரண்டாவதாக, சுற்றுலாத்துறை போன்ற சில தொழில்களில் வாடிக்கையாளர்கள் மீண்டும் ஈர்ப்பதற்கு நீண்ட காலம் ஆகலாம். விடுமுறைக்காக வெளியிடங்களுக்குச் செல்வதும், அதற்கான விமான டிக்கெட்டுகள் வாங்குவதற்கும் மக்களிடம் நம்பிக்கை வர அதிக நாட்கள் ஆகக்கூடும். மருத்துவ வசதி கிடைக்காத இடங்களுக்கு செல்வதை மக்கள் தவிர்க்கக்கூடும். அதுபோல ஹோட்டல் அறைகள், அங்கிருக்கும் தூய்மை, கிருமிநாசினி உபயோகிப்பு ஆகியவை பற்றி அவர்களுக்கு உறுதியாகத் தெரியாததால் அங்கு சென்று தங்குவதையும் தவிர்க்க நினைப்பார்கள். சிலர் பொழுதுபோக்கு வாகனம் வாங்கி ஹோட்டல் அறை எதுவும் புக் செய்யாமல் அதிலே பயணித்து தங்கிக் கொள்ளவும் செய்யலாம். 

நீடித்து உழைக்கக்கூடிய பொருட்களைத் (கார், ரெஃப்ரிஜிரேட்டர், பெரிய உபகரணங்கள் போன்றவை) தயாரிக்கும் சில பெரிய நிறுவனங்கள்  உற்பத்தியை மெதுவாக ஆரம்பிக்கக்கூடும். அவர்களுடைய நீண்ட விநியோகத் தொடரில் சில முக்கியமான கூறுகள் கிடைக்காமல் போகக்கூடும். எனவே அவற்றை உள்நாட்டிலேயே வாங்கிக் கொள்ள முயல்வார்கள். பொருட்களுக்கான தேவை எவ்வளவு இருக்குமென்பதையும் அவர்களால் தீர்மானிக்க முடியாது. உதாரணமாக, பெரிய நகரங்களில் வசிக்கும் இளைஞர்கள் கார் வாங்குவதற்குப் பதிலாக ஊபர், லிஃப்ட் போன்ற டாக்ஸி சேவைகளைத் தேர்வு செய்யலாம், இது கார் உற்பத்தியாளர்களை கவலைக்கு உள்ளாக்கும். சிலர் எரிபொருள் பயன்படுத்தும் காருக்குப் பதிலாக எலக்ட்ரிக் கார் வாங்க நினைக்கலாம். பணியாளர்களில் எத்தனை பேர் வீட்டிலிருந்து வேலை பார்க்க விரும்புகிறார்கள் என்பது அவர்களுக்குத் தெளிவாகத் தெரியாது. வீட்டிலிருந்து வேலை பார்ப்பது ரியல் எஸ்டேட் துறையை பெருமளவில் பாதிக்கக்கூடும். 

அரசாங்கம் எந்த அளவுக்கு கரன்சி அச்சடித்து ட்ரில்லியன் கணக்கான ரூபாயை, கஷ்டப்படும் மக்களுக்கும், கடன் தேவைப்படும் தொழில்களுக்கும், நஷ்டமடைந்துகொண்டிருக்கும் பெரு நிறுவனங்களுக்கும் விநியோகம் செய்யும் என்பதைப் பொருத்தே பொருளாதார மீட்சி இருக்கும்.பற்றாக்குறை நிதி நிலைமையைத் தொடரலாம் என அரசு நினைத்தால் பொருளாதார மீட்சி வேகமாக இருக்கும். 

பழைய இயல்பு வாழ்க்கை திரும்புமா அல்லது புதிய இயல்பு வாழ்க்கையா?

பழைய வழக்கமே திரும்பி வர வேண்டும் என பெரும்பாலனவர்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பழைய வேலை அல்லது அதைவிடச் சிறந்த ஒன்று வேண்டுமென விரும்புகிறார்கள். வீட்டிலிருந்து வேலை செய்வதை விட அலுவலகத்துக்குச் செல்ல விரும்புகிறார்கள். அவர்கள் வாடிக்கையாளர், சப்ளையர்கள் அல்லது விநியோகஸ்தர்கள் இருக்கும் இடத்துக்கு பயணம் செய்ய தயாராக இருக்கிறார்கள். வேலை முடிந்தவுடன் சக பணியாள நண்பர்களுடன் உணவகத்துக்கோ அல்லது பொழுதுபோக்கு இடங்களுக்கோ செல்ல ஆசைப்படுகிறார்கள். வார இறுதி நாட்களில் குடும்பத்துடன் சூப்பர் மார்க்கெட், மால்கள், போன்ற இடங்களுக்கு  செல்ல விரும்புகிறார்கள். 

பெரும்பாலான மக்கள், பழைய இயல்பு வாழ்க்கை என்பதில் நிறைய பிரச்னைகள் இருப்பதாக நினைக்கிறார்கள். மருத்துவ அமைப்பும், மருந்துகளின் விலையும் மிகவும் அதிகம். நம் மருத்துவ அமைப்பால் 90,000 இறப்புகளைத் தடுக்க முடியவில்லை. இது, நமது பொருளாதார, சமூக அமைப்புகளில் இருக்கும் மிகப் பெரிய குறை. இதைப் பற்றித் தெரிந்து கொள்ள இப்போதைய சூழ்நிலை நமது கண்களை திறந்திருக்கிறது. 

பழைய இயல்பு வாழ்க்கையில் நம் பொருளாதார, அரசியல், சமூக அமைப்புகளில் இருந்து வரும் பலவீனங்கள் குறைக்க அல்லது நீக்க, சீர்திருத்தம் வேண்டுமென சிலர் நினைக்கிறார்கள். 

எங்கேயெல்லாம் மாற்றம் அவசியம் அல்லது விரும்பத்தக்கது?

1. நாட்டு மக்களின் மருத்துவ சிகிச்சை அமைப்பில் பெரும் மாற்றம் தேவை. மருத்துவ சிகிச்சை கிடைப்பது, எல்லா மக்களுக்குமான உரிமை என்பது இது வரை இல்லை. சிகிச்சை என்பது பெரும் செலவு செய்து பெற வேண்டியதாக உள்ளது. மருத்துவமனை கட்டணமும் மருந்துகள் விலையும் மிகவும் அதிகமக உள்ளன. நாட்டின் சில பகுதிகளில் சரியான மருத்துவ சிகிச்சை கிடைப்பதில்லை.மருத்துவ காப்பீடு திட்டத்தை அரசு வழங்க வேண்டும். 

2. ஓய்வு பெறுபவர்களுக்கு போதுமான பாதுகாப்போ, மருத்துவ சிகிச்சை உதவியோ இல்லை. 

3. அலுவலகம் சென்று வேலை பார்ப்பதை விட வீட்டிலிருந்து வேலை பார்த்தால் இந்த நாடு பயனடையும். நவீன தகவல் தொடர்பு வசதிகளைக் கொண்டு பெரும்பாலான வேலைகளை வீட்டிலிருந்தபடியே செய்ய முடியுமா என்பதை நிறுவனங்கள் பரிசீலிக்க வேண்டும். அதிகமானவர்கள் வீட்டிலிருந்து வேலை பார்ப்பதால் போக்குவரத்து நெரிசல் குறையும், எரிபொருள் செலவு மிச்சம். அலுவலகத்துக்கு சென்று வருவதற்கான நேரம் மிச்சப்படும், நிறுவனங்கள் அலுவலகத்துக்கென செலுத்தும் வாடகை போன்ற செலவுகள் குறையும். வீட்டிலிருந்து வேலை பார்ப்பது குழந்தைகளையும் குடும்பத்தையும் சிறப்பாக நிர்வகிக்க வழிவகுக்கக் கூடும்.

4.பொது உதவிக்கான அமைப்பு மிகவும் உதவிகரமாக இருக்கும்படி செய்வது அவசியம். பெரும்பாலான மக்கள் ஏழைகள், அவர்கள் பசியால் வாடக்கூடும், வேலை செய்யும் பலருக்கு வாழ்வதற்குத் தேவையான சம்பளம் கிடைப்பதில்லை. யாரும் பசியால் வாடாதவாறு அரசு பார்த்துக் கொள்ள வேண்டும். 

5.கல்விமுறையில் மேம்பாடு அவசியம். திறமைகளை வளர்த்துக் கொள்ளாமலே பெரும்பாலான மாணவர்கள் படிப்பை முடித்துவிட்டு வெளியே வருகிறார்கள். எனவே, தரமான கல்வி, குறிப்பாக பின்தங்கிய பகுதிகளில் அவசியம் தேவை. அது போல அனைவருக்கும் `கட்டுப்படி’ ஆகக்கூடிய கல்விக் கட்டணத்துடன் கூடிய கல்லூரிகளும், தொழில்நுட்பப் பள்ளிகளும் வேண்டும். 

6.பொது வேலை, உள்கட்டமைப்பு, மறு உருவாக்கம் ஆகியவற்றின் மூலம் அதிகமானவர்களுக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும்.

7. வருமானவரி, சொத்து வரி (Wealth Tax) ஆகியவற்றை உயர்த்துவது மூலம் அரசு தன் வருமானத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.

8. பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளை மட்டுமே அதிகம் சார்ந்திருப்பதைக் குறைத்து மாற்று எரிபொருளை/எரிசக்தியை பயன்படுத்துவதன் மூலம் மாசுவைக் கட்டுப்படுத்துவதோடு புவி வெப்பமயமாவதையும் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

9. தொழில்துறையுடன் இணைந்து ஃபைபர் ப்ராட்காஸ்ட் நெட்வொர்க்கை மேம்படுத்தி அலைவரிசைக்கான செலவைக் குறைப்பதன் மூலம் டிஜிட்டல்மயமாக்க வேண்டும்.

இந்தக் கருத்துகள் எல்லாம் பொதுவெளியில் கலந்துரையாடுவதற்கு சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் தகுதியுள்ளவையாகும். இவை எதற்கும்  சட்டம் வழி வகுக்கவில்லையெனில் நாம் மீண்டும் பழைய இயல்பு வாழ்க்கைக்கே சென்று எதிர்காலத்தில் கோவிட் மற்றும் வேறு பல பிரச்சனைகள் ஏற்படும்போது அதைக் கையாள இப்போது இருப்பது போலவே ஒரு கையறு நிலையில் இருக்க வேண்டியிருக்கும்.   

ஒரு நாடு, அதன் மக்களுக்கு ஒரு சிறந்த வாழ்க்கையை வழங்க வேண்டுமென்று விரும்பினால், புதிய இயல்புக்கானத் தீர்வை நோக்கி நாம் செல்ல வேண்டும்.   

(`புதிய சந்தைப்படுத்தலின் பிதாமகன்’ என அறியப்படும் பிலிப் கோட்லர், சரசோட்டா இன்ஸ்டிடியூட் என்கிற இணையதளத்தில் மே 19 அன்று எழுதிய “The Phases of Covid-19 and the new normal it can bring” என்கிற கட்டுரை அவரது அனுமதி பெற்று இங்கு தமிழில் சுருக்கமாகத் தரப்பட்டிருக்கிறது)   

Spread the lovely business news