காலம் காலமாக விவசாயிகள் தங்களுடைய உற்பத்திகளை தரகர்கள் மூலமாகத் தான் விற்று வந்திருக்கின்றனர். நேரடியாக உபயோகிப்பாளர்களுக்கு விற்று பழக்கமில்லை. இடைத்தரகர்களிடமிருந்து விவசாயிகளுக்கு உற்பத்தி பொருளுக்கான பணம் மிகவும்  குறைவாகவும்,  தாமதமாகவும் கிடைத்தது.  

கோவிட் பிரச்சனை வந்ததும் கர்நாடகாவில் விளையும்  நல்ல தரமான திராட்சைகள் ஆயிரக்கணக்கான டன்களை என்ன செய்வது என்று தெரியாமல் விவசாயிகள் விழித்தார்கள். காரணம் இடைத்தரகர்கள் வரவில்லை, வாங்கவில்லை. எப்படி விற்பது என்று தெரியாமல் திராட்சை விவசாயிகள் விழித்துக் கொண்டிருக்கும்போது, பெங்களூரில் உள்ள அக்ரிகல்சர் யூனிவர்சிட்டி,  கர்நாடகா பிரதேச திராட்சை விவசாயிகளுக்கு கைகொடுக்க முன்வந்தது. 

விவசாயிகளிடம் சென்று நேரடி விற்பனையை பற்றி விளக்கினார்கள்,  அதாவது திராட்சையை சுத்தப்படுத்துவது, நல்ல முறையில் அட்டை பெட்டிகளில் பேக் செய்வது போன்றவைகளை.  

அப்படி பேக் செய்யப்பட்ட   திராட்சைகளை வேன்கள் மூலமாக  பெங்களூருக்கு எடுத்து வந்து பெங்களூரில் இருக்கும் பல அடுக்குமாடி கட்டடங்களில் அவற்றை நேரடியாக விற்பது.  இது தான் திட்டம்.

ஒரு கிலோ 15 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை  திராட்சைகளை அடிமாட்டு விலைக்கு விற்றுக்கொண்டிருந்த விவசாயிகள் இதற்கு ஒத்துக் கொண்டனர். 

இங்குதான் மாயம் நடந்தது.  கிட்டத்தட்ட ஒரு மாதத்தில் 600 டன்களுக்கு மேலாக அவர்களால் நேரடியாக விற்க முடிந்தது. அதுவும் ஒருகிலோவுக்கு 60 முதல் 70 ரூபாய் வரை கிடைத்தது.  அது சரி வாங்குபவர்களுக்கு என்ன லாபம் என்று பார்த்தால்  கடைகளில் இதுவரை 150 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை கொடுத்து ஒரு கிலோ திராட்சை வாங்கிக் கொண்டு இருந்தவர்களுக்கு,  விவசாயிகளிடமிருந்து நேரடியாக 60 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை கிடைத்ததோடு, மேலும் மிகவும் ப்ரஷ் ஆகவும் கிடைத்தது. இதனால் விற்பனை களை கட்டியது. 

விவசாயிகளுக்கும் அதுவரை கிடைத்ததை  விட அதிக பணம்  கிடைத்தது, அதிலும்  தாமதமில்லாமல் அன்றே பணம் கிடைத்தது. 

இந்த வியாபாரம் வாட்ஸ்அப் மூலமாகவும், இணையம் மூலமாகவும், பேப்பர் செய்திகள் மூலமாகவும் பிரபலப்படுத்தபட்டதால் வாங்க விரும்பும் சொசைட்டிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆர்டர்கள் கொடுத்தன. 

இதுபோலத்தான் இப்போது மாம்பழ வியாபாரமும்.  உலக அளவில் 

மாம்பழ உற்பத்தியில் முன்னணி நாடுகளில் ஒன்றான இந்தியா சுமார் 1500 வெரைட்டிகளுக்கு மேலாக மாம்பழங்களை விளைவிக்கிறது.  அதில் உலகத்தில் புகழ்பெற்ற சில மாம்பழ வெரைட்டிகளான அல்போன்சா, பங்கனபள்ளி, இமாம்பசந்து, செளசா, பதாமி, தஸெரி, பஸ்லி, கேசர் போன்ற மாம்பழங்களும் அடங்கும்.  பெயர்களை  கேட்டாலே நாக்கில் நீர் ஊறும்.  

கோவிட் பிரச்சனையால்  அதன் விற்பனை பாதித்தது. ஆனால் அவர்களுக்கு கை கொடுத்தது விவசாயம் சார்ந்த ஸ்டார்ட்அப் கம்பெனிகள்தான்.  Ninjacart, Farmpal, Waycool, BigBasket, DeHaat, Intello Labs, KrishiHub, Loop, Crofarm, FreshoKartz, Kisan Network போன்றவை இதில் அடங்கும். 

கோவிட் கற்று கொடுத்த பாடம் என்ன? விவசாயிகளிடமிருந்து  வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக விற்பதை பற்றி காலம் காலமாக பேசி வந்தாலும், அதை எப்போதுமே இடைத் தரகர்கள் தடுத்து வந்தனர். தற்போது அதற்கு காலம் கனிந்திருக்கிறது.  

Spread the lovely business news