கால்களில் சக்கரத்தை மாட்டிக்கொண்டு இயந்திரகதியாக  ஓடிக்கொண்டிருக்கும்  மக்களுக்கு தற்போதைய தொழில் நுட்பம் மிகவும் துணை போகிறது. 

கரூர் ஸ்ரீ சங்கர வித்யாலயா பள்ளியின் மாணவர் விகாஷ் தனது ஆசிரியர் திரு. சதீஷ்குமார் அவர்களின் உதவியோடு டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் பயன்படுத்தப்படும் பில் போடும் ட்ராலிகளை உருவாக்கியுள்ளார்.

டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் பொருட்களை விரைவாக எடுத்து விட்டாலும் பில் போடுவதற்கு வெகுநேரம்  காத்துக்கொண்டு இருக்க வேண்டிய நிலை உள்ளது. 

இதற்குத் தீர்வாக ஒரு பொருள் எடுத்து ட்ராலியில் போடும்போது அதில் பொருத்தப்பட்டுள்ள கருவியில் ஸ்கேன் செய்து கொள்ளலாம். பொருள் தேவையில்லை என்றால் திரும்ப எதிர் திசையில் ஸ்கேன் செய்து பட்டியலில் இருந்து நீக்கி விடலாம். 

இதில் நாம் வாங்கும் பொருட்களின் எடை, விலை மற்றும் இதர தகவல்கள் RFID Tag உடன் இணைக்கப்பட்டிருக்கும்.  பொருட்களை  ட்ராலியில் வைத்தவுடன் இந்த RFID Tag பொருட்களின் தொகையை கணக்கீடு செய்ய ஆரம்பிக்கும் .

கடைசியில் மொத்தம் நாம் வாங்கிய பொருட்கள், அதன் எடை, விலை ஆகியவற்றை பில் போடும்  முன்பே வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ளலாம்.

எனவே நாம் நேராக பணம் செலுத்தும் இடத்திற்கு சென்று அதற்கான தொகையை கட்டி பொருட்களை கொண்டு  செல்லலாம். பெரும்பாலும் பில் போடும் இடத்தில்தான் கூட்டம் அலை மோதும்.  அதுவும் இந்த நோய்த் தொற்று காலத்தில் பொருட்களை வாங்குவது பெரும் சவாலாக மாறி விட்டது. எனவே ஒரு சிறு முயற்சியாக இந்த சவாலை எளிதாக்கும் முறையாக பில் போடும் வசதியுடன் கூடிய ட்ராலியை அறிமுகப்படுத்தி உள்ளார்கள்.

இது டிஜிட்டல் இந்தியா தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய ட்ராலி ஆகும். இவ்வகை ட்ராலியால் நாம் அதிக நேரம் பில் கவுண்டரில் காத்திருக்கத் தேவையில்லை. டிஜிட்டல் தொழில்நுட்பத்தை கொண்டு, நமது தேவைகளை எளிதாக்கலாம்.

கேஷ் கவுண்டரில் இருப்பவர் தனது கம்ப்யூட்டரில் பதிவாகியிருக்கும் விவரங்களை சரிபார்த்து சில நிமிடங்களிலேயே பணத்தைச் செலுத்தி நமது பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும். மேலும் இப்போது நடைமுறையில் உள்ள bar code  reader முறையில் ஸ்கேன் செய்து அத்துடன் RFID Tag  உடன் இணைந்து செயலாற்ற முடியும்.  எனவே இதற்கான நடைமுறையை பின்பற்றுவதில் எவ்வித நடைமுறை சிரமமும் இருக்காது எனலாம். இக்கருவியை பல்பொருள் அங்காடிகளில் செயல்படுத்தினால் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் .

மேலும் covid-19 காலக்கட்டத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு இந்த உத்தியை பல்பொருள் அங்காடிகளில் செயல்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு நோய் பற்றிய அச்சத்தையும், கூட்டத்தைப் பற்றிய பயத்தையும் தவிர்க்கலாம். 

இந்த அரிய கண்டுபிடிப்பு கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் சிறந்த படைப்பாக பாராட்டப்பட்டது. மேலும் மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது .

மேலும் மத்திய அரசால் Inspire Manak- 2019 அறிவியல் கண்காட்சி அறிவியல் கண்டுபிடிப்புகளில் பங்குபெற்று சிறந்த படைப்புக்கான ஊக்கத்தொகையாக ரூபாய் பத்தாயிரம் வழங்கப்பட்டு அனைவராலும் பாராட்டப்பட்டது.

மாணவர் விகாஷ் மேலும் பல அரிய கண்டுபிடிப்புகளை உலகுக்கு அறிமுகம் செய்ய வாழ்த்துவோம். 

Spread the lovely business news