கின்னஸ்  புத்தகத்தில் இடம்பெற்ற நிறுவனம், ஆண்டுதோறும் 70 லட்சம் சைக்கிள்கள் தயாரிக்கும் ஹீரோ சைக்கிள் ஓம் பிரகாஷ் முஞ்சல்  குறித்து பிரியா குமார் சுவைபட தந்திருக்கிறார். 

பாகிஸ்தானை சேர்ந்த உணவு தானிய மொத்த விற்பனையாளரின் மகன்தான்  ஓம் பிரகாஷ் முஞ்சல், சுருக்கமாக OP என்று அழைக்கப்படுகிறார்.  நான்கு சகோதரர்களின் மனக்கட்டுப்பாடு மற்றும் விடாமுயற்சியின் விளைவாக  ஹீரோ சைக்கிள் 60 வருட சரித்திரத்தைக் கண்டது.   கீதையைப் படித்து  வளர்ந்த குழந்தைகள் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த கதையின் நாயகர் ஓம்பிரகாஷ் இன்றும் தனது மூத்த சகோதரர்களின் கால்களை தொட்டு வணங்குகிறார். மேலும்  கைபேசியை உபயோகிக்காமல் மின்னஞ்சல் அனுப்பாமல் இருக்கும் ஒரு தொழிலதிபர். வணிகம் என்ற வார்த்தை கடினமாக இருந்தாலும் யாரையும் தனது போட்டியாளராக கருதுவதில்லை.   

பத்தாம் வகுப்பு வரை படித்த பிரகாஷ் முஞ்சல் ஆரம்பத்தில் சைக்கிள்களின் உதிரி பாகங்களை மட்டுமே விற்பனை செய்துவந்தார். சந்தர்ப்பவசமாக  பஞ்சாப் முதலமைச்சர் பிரதாப்சிங் கைரோனை சந்தித்தபோது ஏன் சைக்கிள் பாகங்களை விற்பதற்கு பதிலாக சைக்கிளையே தயாரிக்கக் கூடாது என கூறினார். அப்படி 1956 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் முதலில் 7500 சைக்கிள்களை தயாரித்து இப்போது ஆண்டொன்றுக்கு 70 லட்சம் சைக்கிள்களை தயாரிக்கும் நிலைக்கு வந்திருக்கிறது ராலே, ஹெர்குலஸ், அட்லஸ் போன்ற பிராண்டுகளை போட்டியாளர்களாக கொண்ட ஹீரோ சைக்கிள்  இந்திய சைக்கிள் சந்தையில் 37% சந்தைப் பங்கை கொண்டிருக்கிறது.

அவான்,அட்லஸ் ஹெர்குலஸ் போன்ற நிறுவனங்கள் ஹீரோ சைக்கிள்களோடு போட்டியிட்டாலும் ஓம் பிரகாஷ் ஒரு காலத்திலும் அவர்களை தனது போட்டியாளர்களாக நினைத்ததில்லை. அவான் சைக்கிள் நிறுவனத்தின் உரிமையாளர் பாவா,  ஓம் பிரகாஷின் நெருங்கிய நண்பர் ஆவார்.   இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்வதோடு தொழில் சம்பந்தமான முடிவுகளை இணைந்து எடுக்கின்றனர். 

ஹீரோ சைக்கிள் நிறுவனத்தின் ஒவ்வொரு        டீலர்களுடனும் தனிப்பட்ட முறையில் தொடர்பு வைத்திருந்தார். தனது விநியோகஸ்தர்களின் சுக துக்கங்களில் பங்கு கொள்வதோடு அவர்கள் லூதியானா வரும்போது தானே நேரடியாக ரயில் நிலையத்திற்கு சென்று அவர்களை அழைத்துவரும் அளவில் OP நட்புக் கொண்டிருந்தார்.

தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஒவ்வொருவருடனும் தனிப்பட்ட முறையில் நட்பு பாராட்டி அவர்களுக்கு சிரமம் என்று வரும்போது இயன்ற உதவியைச் செய்து தொழிலாளர்கள் மத்தியில் முதலாளி என்பதற்கும் மேலான பெயரை பெற்றிருக்கிறார். ஒருமுறை தனது தொழிலாளியின் குழந்தை மருத்துவமனையில் அனுமதித்திருந்தபோது,  அந்த தொழிலாளியை தனது கார் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தொழிலாளி தாங்கள் எப்படி வீடு செல்வீர்கள் என்று கேட்டபோது உலகத்தையே சைக்கிளில் சுற்ற வைத்த எனக்கா வீடு போக தெரியாது நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறுமளவிற்கு தொழிலாளர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

தனது தயாரிப்புகளின் தரத்தில் எந்தக் காலத்திலும் சமரசம் செய்து கொள்ளாத ஓம்பிரகாஷ்  விலை விஷயத்திலும் ரொம்ப கறார் பேர்வழி தான்.ஒரு முறை பில்லிங் குளறுபடியால் ஒரு விநியோகஸ்தருக்கு அதிகமான டிஸ்கவுண்ட் வழங்கப்பட்டுவிட்டது. இதை அறிந்து கொண்ட ஓம்பிரகாஷ் அந்த பொருளை வாங்கியிருந்த அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் அதே குறிப்பிட்ட தள்ளுபடியை வழங்கினார். 

பில்லிங்கில் நடைபெற்ற குளறுபடியால் தனது மற்ற விநியோகஸ்தர்கள் பாதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். 

ஹீரோ சைக்கிள் அவற்றிற்குரிய விலையிலேயே விற்கப்பட்டன. ஒரு காலத்திலும் போட்டிகளுக்காக விலையை கூட்டி குறைத்து ஓம்பிரகாஷ் விற்றதில்லை. ஒரு விநியோகஸ்தர் ஒரு சமயம் அதிக எண்ணிக்கையிலான சைக்கிள்களுக்கு ஆர்டர் வழங்கியபோது எதிர்பாராதவிதமாக அன்றைய தினமே அரசாங்க கொள்கை முடிவு காரணமாக இரும்பின் விலை அதிகரித்து, அதனால் சைக்கிள் விலையும் அதிகரிக்கப்பட வேண்டியிருந்தது. அந்த விநியோகஸ்தர் தான் முன்னர் கேட்டிருந்த பழைய விலையிலேயே சைக்கிள்களை விற்கச்சொல்லி கேட்டபோது ஓம் பிரகாஷ் மறுத்துவிட்டார். நீண்டகால வியாபாரத் தொடர்பின் காரணமாக ஏன் தனக்கு பழைய விலையிலேயே வழங்கக்கூடாது, இந்த விலை அதிகரிப்பை தான் எதிர்பார்க்கவில்லை என விநியோகஸ்தர் கேட்டபோது உங்களுக்காக நான் கவலைப்பட்டால், அதேபோல மற்ற விநியோகஸ்தர்களுக்கும் விலையை குறைக்க வேண்டியிருக்கும். எனவே தனது  விநியோகஸ்தரை, போட்டியாளரான அவான் சைக்கிள் நிறுவனத்திற்கு அழைத்துச் சென்றார் . அங்கு அவரது விநியோகஸ்தர் கேட்ட விலையிலேயே சைக்கிள்களை வாங்க முடிந்தது. இதன் மூலம் அவர் தனது வியாபாரத்தை போட்டியாளரிடம் இழந்திருந்தாலும், தனது விலை கொள்கையை  தளர்த்திக் கொள்ள தயாராக இல்லை. சமரசங்கள் குறுகிய காலத்தில் நன்மை போல தோற்றமளித்தாலும் நீண்டகாலத்தில் அவற்றால் இழப்புகளே மிஞ்சும்  என்கிறார்.

ஜஸ்ட் இன் டைம் (Just in Time -JIT) என்ற கோட்பாட்டை இந்தியாவில் வெற்றிகரமாக முதன் முதலில் செயல் படுத்திய நிறுவனம் . ஆனால் இந்தப் புத்தகத்தில் இதைப்பற்றிய செய்திகள் அதிகமில்லை . வெளிநாட்டு நிறுவனங்கள் கோலோச்சும்  இன்றைய சூழலில்   பாரம்பரிய நிறுவனங்களும் வெற்றிகரமாக திகழ்வதற்கு ஓம் பிரகாஷ் பயன்படுத்திய மேலாண்மை சித்தாந்தங்கள் அனைத்தும் வளரும்  தொழில் முனைவோருக்கு ஒரு பாடமாகும்.

இவரது வணிக கதையில்  நாம் தெரிந்து கொள்ள வேண்டியது.

  • விடாமுயற்சி
  • நேர்மையை கைவிடக்கூடாது
  • உங்கள் தரத்தை பராமரிக்கவும்
  • தரம், விலை குறித்து சமரசம் செய்து கொள்ளாதீர்கள்.
  • உங்கள் ஊழியர்களை அறிந்து கொள்ளுங்கள்
  • உங்கள் விநியோகஸ்தர்களை நன்றாக நடத்துங்கள்
  • விலைப்போரில் ஈடுபடாதீர்கள்.

பென்குயின் வெளியிட்டுள்ள இந்த புத்தகம் அமேசானில் கிடைக்கிறது.   

Spread the lovely business news