சிதம்பரம் ஸ்ரீ ஷண்முகவிலாஸ் ஸ்வீட் ஸ்டால் நிறுவனம் நகரின் முக்கிய பகுதியான தெற்கு ரத வீதியில் அமைந்துள்ளது. இதன் உரிமையாளர் திரு. கணேஷ் அவர்களுடன் தொலைபேசியில் பேசும்போது மிகவும் சுவாரசியமான, அறுசுவை தகவல்கள் தெரிந்து கொள்ள முடிந்தது.  கொரொனா பெருந்தொற்று பெருகிய  இந்த காலகட்டத்தில் கூட இந்நிறுவனம் தனது சிறப்பான சேவையை சிதம்பரம் மற்றும் சுற்று வட்டார மக்களுக்கு ஆற்றிவருவது பாராட்டத்தக்கது.  

அரசாங்கத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு காலை 7 மணிக்கு வாடிக்கையாளர் சேவையைத் தொடங்குகிறது.  இப்போதுள்ள நிலையை கருத்தில் கொண்டும் சிதம்பரம் நகராட்சி அறிவுறுத்தலின்படியும்  சமூக இடைவெளியை  கடைபிடிக்கும் வகையில் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் தனி இருக்கைகள் அளிக்கப்பட்டுள்ளது. அனைவரும் சோப்பு கரைசல் கொண்டு கைகழுவுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் அனைவருக்கும் மல்லி, மிளகு, சுக்கு, சீரகம், ஏலக்காய், கிராம்பு, திப்பிலி, வெற்றிலை, கற்பூரவல்லி இலை, துளசி, எலுமிச்சை, பனைவெல்லம் (இந்த பொருட்கள் குறித்த தகவல் பலகை அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது) ஆகியவற்றைக் கொண்ட நோய் எதிர்ப்புத் திறனை தூண்டி அதிகரிக்கும் சுவையான மூலிகை பானம் ஆறு மாதங்களுக்கு மேலாக இலவசமாக வழங்கி வருகின்றனர். வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்லாமல் இனிப்பகத்துக்கு வரும் எல்லோருக்கும் அளிக்கப்படுகிறது. 

கடைக்கு செல்லவும் வெளியே வரவும் தனித்தனி வழிகள் அமைத்துள்ளனர். இது, வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  

இந்த இனிப்பகம் தந்தை திரு. சீனிவாச ஐயர் அவர்கள்  1948 ல் தொடங்கியது. இவர், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் ஹாஸ்டலில் வாட்டர் பாயாக வாழ்க்கையை தொடங்கினார்.  தேவைகளின் தேடல் கூடத் தொடங்கியதால் சுயத்தொழில் தொடங்க எண்ணி நான்கு சக்கர வண்டியில் திண்பண்டங்களை வைத்து நான்கு வீதிகளிலும் சுற்றி வந்து விற்று வந்தார். பின்னர்  ஒரு இடத்தில் தள்ளுவண்டியை நிறுத்தி வியாபாரத்தை தொடர்ந்தார்.  அதுவே இப்போது தெற்கு வீதியில் இயங்கி வரும் ஸ்ரீ ஷண்முகவிலாஸ் ஸ்வீட்ஸ்.

நகர மக்களால் “கருப்பு ஐயர்” என அன்போடு அழைக்கப்பட்ட  தனது தந்தையாரின் சில வியாபார நுணுக்கங்களை கணேஷ் அவர்கள் நம்முடன் பகிர்ந்து கொண்டார். 

“அப்பா தனது எழுபது வயது வரை தனிமரமாக நின்று  வியாபாரத்தை கவனித்து வந்தார். விழுதாக நின்று அவருக்குத் தோள் கொடுக்க விரும்பினேன். நெய்வேலி என்எல்சி பொறியாளர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு கடை நிர்வாகத்தில் ஈடுபட்டேன்” என்றார்.

உங்களின் உயர்வுக்கு முக்கிய காரணமாக கருதுவது என்ன என்று கேட்டபோது, இரண்டு “R”

காரணம். ஒன்று நிராகரித்தல் (Rejection) மற்றொன்று தக்கவைத்தல் (Retention). இதில்தான் உள்ளது எங்களின் வெற்றி என்றார். 

நிராகரித்தல்: நல்ல பொருட்களை கொடுக்க வேண்டும், கெட்ட பொருட்களை தூக்கி போட வேண்டும் என்ற எண்ணம் இருந்தால்தான் இந்த தொழிலில் ஜெயிக்க முடியும். ஒரு பட்சனம் செய்யும்போது கலவைப் பொருட்கள் அளவு வித்தியாசத்தால் மாறுபட்டாலோ அல்லது செய்முறை தவறாகிவிட்டாலோ, அது அதுவாக இருக்காது. அதை மீண்டும் மாற்றி அல்லது மறுசுழற்சி செய்து பெயர் மாற்றிக் கொடுத்தால் நமது பெயரை கெடுத்து விடும். ஆதலால் அதை தூக்கிப் போட வேண்டும். இதுதான் நிராகரித்தல். உணவு பண்டங்களில் மறுசுழற்சி செய்யக்கூடாது. 

தக்கவைத்தல் : வியாபாரத்தில் உறுதுணையாளர்களுக்கு நல்ல ஊதியம் தருவது மட்டும் போதாது.  அவர்களை அரவணைத்து பணிக்கான அங்கீகாரத்தை கொடுத்து, பாராட்ட வேண்டும். அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வைக் கொடுத்து  தக்கவைக்க வேண்டும். இதுதான் தக்கவைத்தல்.

இந்த நிறுவனத்தில் மேலும் ஒரு சிறப்பு. இங்கு பணிபுரிபவர்களை பணியாளர்கள் அல்லது வேலையாட்கள் என இவர்கள் அழைப்பதில்லை. “உறுதுணையாளர்கள்” என்றுதான்  அழைக்கின்றனர். இங்குள்ள பல உறுதுணையாளர்கள் பல பத்து ஆண்டுகளாக நிரந்தரமாக துணையாக இருந்து வருகின்றனர். 

இங்கு ஒரு மேலாளரை தவிர கண்காணிப்பாளர் என்று யாரும் இல்லை. இது குறித்து கேட்டபோது, “உறுதுணையாளர்கள் எங்களிடம் வேலையில் சேர்ந்தவுடன், தன்னை தானே கட்டுப்படுத்திக்கொண்டு கண்டிப்புடன் வழி நடத்திக்  கொள்வது எப்படி என்பதை நாங்கள் கற்றுக் கொடுக்கிறோம். பின்னர் அவர்களே தங்களை வழிநடத்திக்கொள்ளும் அளவுக்கு மாறிவிடுவார்கள். எனவே, அவர்களை கண்காணிக்க யாரும் அவசியமில்லை” என்றார். என்ன ஒரு ஆச்சரியம், இதுவே, பழக்க வழக்கம் ஆகி பின்னர் ஒழுக்கம் ஆகிவிடுகிறது. ஒரு நல்ல ஃபார்முலாவை கையாளுகிறீர்கள் என பாராட்டினோம். 

இனிப்பகத்தின் உறுதுணையாளர்கள் அனைவருக்கும் அவர்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு வலைதொப்பி,  கையுறை, தரமான முகக்கவசம், கைக்குட்டைகள் ஆகியவற்றை நிர்வாகமே வழங்குகிறது.

அப்பா அஸ்திவாரம் என்றால், உறுதுணையாளர்கள்  எங்கள் கடையை தாங்கும் தூண்கள் என தனது துணையாளர்களை பாராட்டினார். 

“உள்ளங்கையில் வைத்து தட்டிப் போடுவதுதான் வடை. ஆனால் எனது அப்பா, மசால் வடையை தட்டிப் போடாமல் அப்படியே உருண்டையாக போடுவார்கள். வாடிக்கையாளர்களின் கூட்டத்தை கருதி இப்படி செய்துள்ளார்கள்.  மசால் வடை, உருவத்தில்  போண்டா போல இருக்கும். இதை சுடச்சுட சாப்பிடும் கூட்டத்தில் சிலர் “இது போண்டாவா?  வடையா?” என்ற தலைப்பில் பட்டிமன்றமே நடத்தி விடுவதும் உண்டு. இந்த வடை அன்றும் இன்றும் மிகவும் பிரபலம். “வடையால் வளர்ந்த கடை” என்று வாடிக்கையாளர்களின் பாராட்டை பெற்றது” என்றார்.

“அப்பாவுடன் அம்மாவும் வியாபாரத்தில் இணைந்து செயல்பட்டார்.  அதுபோக தனது கடைக்கு தேவையான மூலப் பொருட்களான வெங்காயம், பச்சை மிளகாய் போன்ற காய்கறிகள் ஆகட்டும் பருப்பு வகைகள் ஆகட்டும் எதுவானாலும் தனது கடைக்கு என்ற எண்ணத்தோடு வாங்காமல் தனது  வீட்டுக்கு வாங்குவது போலவே மிக நல்ல தரமான பொருட்களையே வாங்குவது வழக்கம்” என  கணேஷ் கூறினார். 

”நாம் பணத்தை தேடி சென்றால் அது கிடைக்காத பட்சத்தில், மீண்டும் பழைய நிலைக்கு சென்றுவிடுவோம். எனவே நமது மனதுக்கு பிடித்தமான நிறைவான ஒன்றை செய்தோமானால் நாம் எந்த நிலையிலும் தள்ளாடாமல் சரியான முடிவுகளை எடுத்து சரியான போக்கில் நமது சிந்தனைகளை செலவிட்டு தொழிலை சரியாக நடத்த முடியும். இதுவும் எங்கள் வெற்றியின் ரகசியம்” என்றார். 

சமீபகாலமாக எல்லா வியாபாரங்களிலும் ஒரு ஆரோக்கியமற்ற போட்டி நிலவுகிறது.  நீ 10 ரூபாய்க்கு கொடுத்தால் நான் 9 ரூபாய்க்கு தருவேன். இதுதான் இன்றய போட்டி நிலை. வியாபாரத்தில் ஏற்ற இறக்கம் இருக்கும். அதை சமாளித்து நிற்கும் திறன் வேண்டும். அப்படி இல்லாமல் யார் முதலில் திவால் ஆவது (Race to Bankruptcy) என்பது போல போட்டி போட்டுக்கொண்டு ஓடுவதைப் பார்க்க முடிகிறது. 

உலகையே மிரட்டும் கொரொனாவை தடுக்க உங்கள் பங்காக அனைவருக்கும் மூலிகை பானம் தருகிறீர்கள், வேறு ஏதாவது நடவடிக்கை உண்டா என்றேன். 

“கொரொனாவை கட்டுப்படுத்த முடியாமல் உலகமே திணருகிறது. நமது உணவு பழக்க வழக்கமே நோய் எதிர்ப்பாற்றல் தரும் என்பதை பாரம்பரிய மருத்துவம் இந்த நெருக்கடி தருணத்தில் நமக்கு உணர்த்தி இருக்கிறது.  இந்த அசாதாரண நிலையில் இத்தகைய மூலிகைப் பானம் அளிப்பது எங்களுக்கு மிகவும் மன திருப்தியை அளிக்கிறது” என்றார்.

உறுதுணையாளர்கள் காலையில் வேலை தொடங்கும் முன், ஆவி பிடிக்கின்றனர்.  நொச்சித்தழை, துளசி, கற்பூரம், இஞ்சி, மிளகு, மஞ்சள், எலுமிச்சை போன்ற அனைத்தையும் போட்டு கொதிக்கவைத்து அதன் நீராவியை கட்டாயமாக சுவாசிக்க வேண்டும். (நமது வாசகர்களுக்கு பயன்படும் என்பதால் இந்த கட்டுரையில் விளக்கமாக மூலிகைகளின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளோம்)

வாடிக்கையாளர்களின் நலன் கருதி எவ்வித  அதிகப்படியான கட்டணமும் இல்லாமல் திண்பண்டங்கள் வீட்டுக்கே டெலிவரி செய்யப்படுகிறது. விற்பனையை மட்டும் கருத்தில் கொள்ளாமல் தனது ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் உடல் நலனில் அக்கறை கொண்ட இந்நிறுவனத்தின் செயல் சிதம்பரம் பகுதி மக்களால் பெரிதும் பாராட்டப்படுகிறது.

”தந்தையார் நினைவு தினத்தையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் சனிக்கிழமை “வடை தினம்” என எங்கள் வாடிக்கையாளர்களுடன் சேர்ந்து கொண்டாடுகிறோம்” என்றார். 

வாடிக்கையாளர்களாக உள்ளே வந்தவர்கள் நண்பர்களாகி வெளியே செல்லும் அளவுக்கு இனிமையான புன்னகை கலந்த பேச்சு ஒரு அலாதி அழகு.

மக்களுக்கு தொண்டு செய்வது இறைவனுக்கு தொண்டு  செய்வதற்கு  சமம் என்பார்கள். (Service to Mankind is Service to God). இவர்கள் இனிப்பகத்துக்கு நமது சார்பிலும் நகர் வாழ் மக்கள் சார்பிலும் நன்றிகள் கூறி பரஸ்பர வாழ்த்துகள் பரிமாறி விடை பெற்றோம். 

தொடர்புக்கு :   93449 45713

Spread the lovely business news