வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறுவது கடினம். ஆனால் இழப்பது எளிது. உங்களுடைய வணிகம் என்ன என்பதை உருவாக்க வாடிக்கையாளர்களை அனுமதிக்கும்பட்சத்தில் அவர்கள் உங்களுக்கு விசுவாசமாக இருப்பார்கள். அதாவது, உங்களைவிட இன்னொருவர் சிறப்பாக சேவை வழங்கும்வரை. வாடிக்கையாளர்கள் மிகவும் உணர்வுப்பூர்வமானவர்கள், ஸ்மார்ட்டானவர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். சரியான விஷயத்தை செய்ய, தொடர்ந்து கடினமாக உழைப்பதன்மூலம் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை நாங்கள் சம்பாதிக்கிறோம். கடினமான விஷயங்களை – சரியான நேரத்தில் டெலிவரி செய்வது, ஒவ்வொரு நாளும் குறைந்த விலை, வாக்குறுதி அளித்து அதைக் காப்பது, சாதகமாக இருக்காது என்றாலும் கொள்கை ரீதியாக முடிவெடுப்பது, குடும்பத்துடன் அதிக நேரம் ஷாப்பிங் செய்ய வசதி ஏற்படுத்தித் தருவது, வாசிப்பது, அவர்களுடைய வீடுகளை தானியக்கம் செய்வது ஆகியவற்றைத் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் வாடிக்கையாளரின் நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக நீங்கள் பெற முடியும். 1997 ஆம் ஆண்டு என்னுடைய முதலாவது பங்குதாரர்களுக்கான கடிதத்தில் குறிப்பிட்டது போல, வாடிக்கையாளர் தேவைகளைப் அறியும்போது, அவற்றை நிறைவேற்ற நீண்டகால அனுபவத்தின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கிறோம். அந்தத் தெரிவுகளுக்காக நாங்கள் விமர்சிக்கப்படும்போது அதைக் கேட்பதோடு எங்களைக் `கண்ணாடி’யிலும் பார்த்துக் கொள்கிறோம். விமர்சகர்கள் கூறுவது சரி என நாங்கள் நினைத்தால் அதை மாற்றிக்கொள்கிறோம். நாங்கள் தவறு செய்தால் மன்னிப்புக் கேட்கிறோம். ஆனால் கண்ணாடியைப் பார்க்கும்போது, விமர்சனத்தை மதிப்பீடு செய்யும்போது, நீங்கள் செய்வது சரிதான் என நம்பினால், எந்தவொரு சக்தியாலும் உங்களை மாற்ற முடியாது.

அதிர்ஷ்டவசமாக, எங்களுடைய அணுகுமுறை வேலைசெய்து வருகிறது. அமெரிக்கர்களில் 80 சதவிகிதத்தினர் அமேசான் மீது சாதகமான எண்ணத்தைக் கொண்டிருப்பதாக முன்னணியில் உள்ள, சுதந்திரமான ஆய்வு நிறுவனம் நடத்திய ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. அமேசானை விட `சரியாகச் செய்வதாக’ அமெரிக்கர்கள் யாரை நம்புகிறார்கள்?  அவர்களது மருத்துவர்களையும் ராணுவத்தையும் என்று, கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்ட மார்னிங் கன்சல்ட் சர்வே தெரிவிக்கிறது. நிறுவனம் மற்றும் ப்ராண்ட் மீதான நம்பிக்கையைப் பொருத்தவரையில் அமேசானுக்கு முன்னால் இருப்பது ராணுவம் என 2018 ஆம் ஆண்டு ஜார்ஜ்டவுன் மற்றும் நியூயார்க் பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த ஆய்வாளர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். குடியரசு கட்சியைச் சேர்ந்தவர்களிடம் அமேசானுக்கு முன்னால் இருப்பது ராணுவமும் உள்ளூர் காவலர்களும். ஜனநாயகக் கட்சி அனுதாபிகளைப் பொருத்தவரை நாங்கள்தான் முதலில் இருக்கிறோம். 2020 ஆம் ஆண்டு ஃபார்ச்சூன் தரவரிசைப்படி, உலகளவில் மிகவும் போற்றப்படும் நிறுவனங்களில் ஆப்பிளுக்கு அடுத்த இடத்தில் நாங்கள் இருக்கிறோம். வாடிக்கையாளர்களின் சார்பாக நாங்கள் செய்து வரும் கடினமான வேலைகளை அவர்கள் கவனித்து அதன் வெகுமதியாக எங்கள் மீது நம்பிக்கை வைத்திருப்பதை நினைத்து நாங்கள் பெருமிதம் அடைகிறோம். இந்த நம்பிக்கையைப் பெறுவதற்காக உழைப்பதுதான் அமேசான் `முதல் நாள்” கலாச்சாரத்துக்கான உந்து சக்தியாக இருந்து வருகிறது.

அமேசான்தான் உங்களுடைய ஆன்லைன் ஆர்டரின் ப்ரெளன் நிற பெட்டிகளின் பக்கவாட்டில் புன்னகையை வைத்து அனுப்புகிறது என்பது உங்களில்பெரும்பாலனவர்களுக்குத் தெரியும். அங்கிருந்துதான் நாங்கள் ஆரம்பித்தோம், சில்லறை வணிகம்தான் இன்றைக்கும் எங்களுடைய மிகப் பெரிய தொழிலாக இருந்து வருகிறது. மொத்த வருவாயில் இதன்பங்களிப்பு சுமார் 80 சதவிகிதம். இந்தத் தொழிலின் இயல்பு என்னவெனில் வாடிக்கையாளர்களுக்குப் பொருட்களைக் கொண்டு சேர்ப்பதாகும். இந்த வேலை வாடிக்கையாளர்களுக்கு மிகவும் நெருக்கமானதாக இருக்க வேண்டும், இதை நாங்கள் சீனாவுக்கோ அல்லது வேறெந்த நாட்டுக்கும் அயலாக்கம் செய்ய முடியாது. இந்த நாட்டைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கான எங்களுடைய வாக்குறுதியை நிறைவேற்றவும் அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கான பொருட்களை அவர்களிடம் கொண்டு சேர்க்கவும் எங்களுக்கு அமெரிக்கப் பணியாட்கள் தேவை. அமேசானில் வாங்குவதன் மூலம், வாடிக்கையாளர்கள் அவர்களுடைய சமூகத்துக்கு வேலை வாய்ப்பை உருவாக்க உதவுகிறார்கள். இதன் விளைவாக, பத்து லட்சம் பேரை, அமேசான் நேரடியாக வேலைக்கு அமர்த்தியிருக்கிறது. இதில் பெரும்பாலனவர்களுக்கு ஆரம்பத்தில், அவர்கள் வேலை செய்யும் நேரத்துக்கு ஏற்ப சம்பளம் பெறுபவர்களாக இருக்கிறார்கள். நாங்கள் சியாட்டிலைச் சேர்ந்தவர்களையும், சிலிகான் வேலியைச் சேர்ந்த, அதிகம் படித்த கணினி அறிவியலாளர்களையும், மேலாண்மை படித்தவர்களையும் மட்டுமே பணிக்கு அமர்த்துவதில்லை. மேற்கு வர்ஜீனியா, டென்னஸ்ஸி, கன்சாச், இதாஹோ ஆகிய மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கானவர்களைப் வேலைக்கு எடுத்து பயிற்சி கொடுத்து நியமிக்கிறோம். இவர்கள் எல்லாம் பேக்கேஜை கையாள்பவர்கள், மெக்கானிக்குகள், தள மேலாளர்கள். பெரும்பாலனவர்களுக்கு இதுதான் முதல் வேலை. சிலருக்கு இது அவர்களின் பணி. வாழ்க்கைக்கான ஒரு படிக்கல். அவர்களுக்கு உதவுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.உடல் ஆரோக்கியம், போக்குவரத்து, மெஷின் லேர்னிங், க்ளவுட் கம்ப்யூட்டிங் போன்ற துறைகளில் சுமார் பத்தாயிரம் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க நாங்கள் 70 கோடி டாலருக்கும்மேல் செலவு செய்து வருகிறோம். இந்தத் திட்டத்தின் பெயர் `கேரியர் சாய்ஸ்” என்பதாகும். .இவர்களுக்கான கல்விக் கட்டணம், சான்றிதழுக்கான கட்டணம் ஆகியவற்றில் 95 சதவிகிதத்தை நாங்கள் செலுத்தி வருகிறோம். அமேசானில் அவர்கள் பார்க்கும் வேலைக்கு சம்பந்தம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்தப் பயிற்சிகளை அளித்து வருகிறோம்.

(ஆதாரம்: அமேசான் இணையதளத்தின் `DAY ONE’ Blog)

Spread the lovely business news