ராஜஸ்தான் – பிகானீர் என்ற ஊரில் சிறிய அளவில் தொடங்கப்பட்ட “ஹல்திராம்” இன்று இந்தியாவில் தலைசிறந்த நொறுக்குத்தீனி பிராண்டுகளில் ஒன்றாகும்.

நம் ஊர் ஓமப்பொடி  போன்ற ஒரு நொறுக்குத் தீனி வகைதான்  புஜியா என்று அழைக்கப்படுவது. இதை மிகவும் ருசியாக தயாரிப்பதில்  கங்கா பீஷன் அகர்வால் ஹல்திராம் என்ற இளைஞர் பெயர் பெற்றிருந்தார் . இப்போது  ஹல்திராமின் சாம்ராஜ்யம் மெக்டொனால்டு மற்றும் டோமினோவின் ஒருங்கிணைந்த வருமானத்தை விட மிகப் பெரிய வருவாயைக் கொண்டுள்ளது.

ஆரம்பத்தில் டின் தகரத்தில் சல்லடை  ஓட்டை இட்டு அதன் மூலம் உருவான காராச்சேவை, காகிதத்தை மடித்து கூம்பு போன்ற வடிவத்தில் பொட்டலாமாக கட்டி ஆரம்பிக்கப்பட்ட வியாபாரம்தான் இன்று ஆலமரமாக விரிந்திருக்கும் “ஹல்திராம் “. 

நொறுக்குத்தீனியில் ஆரம்பித்து  பின்னர் ஸ்வீட் ஸ்டால், சைவ உணவகங்கள், பாஸ்புட் என இந்தியாவின் பல நகரங்களுக்கும்  பரந்து விரிந்தது. பின்னர் 1982 இல் சகோதரர் சிவ் கிஷென் (நாக்பூர்), பேரன் மனோகர்லால் (பிகானேர்) டெல்லியில் கிளைகளை தொடங்க எண்ணிய சமயத்தில், காந்தேவாலா, கன்வர்லால்ஜி, சினாராம் சிந்தி, அன்னபூர்ணா மற்றும் பிகானேர்வாலா போன்ற நொறுக்குத்தீனி விற்பனையாளர்கள் மிகப்பிரபலம். இது  ஹல்திராம் சகோதரர்களுக்கு ஆச்சரியம். இருப்பினும் டெல்லி என்பது தேவைகள் மிகுந்த மாநகரம். தனது  தயாரிப்புக்கு போதுமான இடவசதி தன்னிடம் இருப்பதை உணர்ந்து கொண்டதும்  ராஜபாட்டை தொடங்கியது .

புதுடெல்லியில் கடை உதயம். 1984 இல் நடந்த கலவரத்தில் கடைக்கு தீ வைக்கப்பட்டது. மனோகர்  தன் வாழ்நாளில் சேர்த்த அனைத்து சொத்தும், எதிர்காலமும் கண்ணுக்கு முன்னே கனலாகிப் போனதை உணர்ந்தார்.  பின்னர் தொடர்ந்து வந்த சோதனைகளை எதிர்கொண்டு சாம்பலில் இருந்து உயிர்த்தெழும்  ஃபீனிக்ஸ் பறவை போல எழுந்தார். 

ஹல்திராம் அகர்வால் ஒரு வணிக குடும்பம். தங்கள் வணிக சாம்ராஜ்யத்தை  நற்பண்பு, பணிவு மற்றும் உண்மைத் தன்மை கொண்டு  நிர்வாகம் செய்கிறார்கள்.  அதே நேரத்தில் அனைத்து நடவடிக்கைகளின் கட்டுப்பாட்டையும் தங்களின் கைகளில் இறுக்கமாக வைத்திருக்கிறார்கள்.   சமீபத்தில் அங்கிள் சிப்ஸ் நிறுவனத்தின் யூம்கீன் என்கிற பிராண்டை நிறுவனம் கையகப்படுத்தியது.  அசாதாரண வெற்றிகளை அடைந்த சாதாரண மனிதர்கள் இவர்கள். 

ஹல்திராம் குடும்பத்தினர் தொழிலுக்கு ஆதரவாக இருந்த தங்கள் ஊரைச் சேர்ந்த தொழிலாளர்களை மற்ற பெரிய நகரங்களுக்குச்  சென்றபோது உடன் வைத்துக்கொண்டனர். ஆஷிஷ் அகர்வால் நினைவு கூறும்போது,  இந்த வணிகம் வலுவான உறவுகளின் அடித்தளத்தில் கட்டப்பட்டது என்கிறார். 

அங்கிள் சிப்ஸ் நிறுவனத்தில் இருந்த டாக்டர் தியாகி என்பவரை நிர்வாக இயக்குனராக ஹல்திராம்  குடும்பம் நியமனம் செய்தது. குடும்பத்தைச் சாராத ஒருவர் நிர்வாகத்தின் தலைமை பொறுப்பில் நுழைந்தது இதுவே முதல் முறை. இவர் நிறுவனத்தை ஒரு ப்ரொபஷனல் நிறுவனமாக மாற்றுவதற்கு மிகவும் சிரமப்பட்டார். 

 “70% குடும்ப நிறுவனங்கள்  மூன்றாவது தலைமுறையை தாண்டி நிறுவனத்தை தக்கவைத்துக் கொள்ள முடிவதில்லை” என்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வை மேற்கோள் காட்டும் பங்கஜ் அகர்வால், தானும் குடும்பத்தாரும் ஒன்று சேர்ந்து  குடும்பத்தின் மரபு உரிமையை பாதுகாக்க அடுத்தடுத்த திட்டத்தை உருவாக்கி செயல்படுத்த முடியும் என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளார்.

‘உங்களைத் தூண்டுவது எது?’ என பங்கஜ் அகர்வாலிடம் கேட்டதற்கு, ‘Passion-பேஷன். 

நான் ஒவ்வொரு நாளும் ‘எங்களின் நிறுவனத்தின் மீது ஆர்வமாக இருக்கிறேனா’ என்று என்னை நானே தினமும் கேட்டுக் கொள்வேன். எனது பதில் எப்போதும் ஆம் என்றுதான் இருக்கும் என்கிறார் . இந்த உத்வேகம் ஒவ்வொரு தொழில் முனைவருக்கும் இருந்தால் வெற்றி நமதே.

இந்த ஹல்திராம்  பேரரசு மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது: 

  • பழமையோடு இணைந்த புதுமை. 
  • தோல்வி கண்டு துவளாமை. 
  • நற்பண்பு, பணிவு மற்றும் உண்மைத் தன்மை. 
  • நிரந்தரமான தரமும் சுவையும்.  
  • தீவிர சந்தை கண்காணிப்பு. 
  • காலத்துக்கேற்ற தொழில்நுட்ப  வளர்ச்சியை பயன்படுத்திக் கொள்ளுதல்.
  • திறமையானவர்களை இனம் கண்டு தங்களுடன்  இணைத்து கொள்ளுதல்.
  • குடும்ப உறவுகளை பேணி காத்தல். 
  • அடுத்த தலைமுறையை தொழிலில்  ஈடுபடுத்தல்.

அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் கிடைக்கும் இந்த புத்தகத்தை படித்துப் பார்த்தால்  ஹல்திராம்  நிறுவனம் கடந்து வந்த பாதையும் வெற்றிக்கான ரகசியமும் புரியும். 

Spread the lovely business news