கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள்  பல சமயங்களில் பலருடைய உதவியை எதிர்பார்த்து காத்திருக்க நேரிடும். அப்படிப்பட்ட உதவிகள் கிடைக்காத பட்சத்தில் அவர்கள் எரிச்சல் அடைய நேரிடலாம்.

இன்றைய தினம் மொபைல் போன் எல்லோராலும் பரவலாக உபயோகப்படுத்தப்படுகிறது, இதில் பார்வை குறைபாடு உள்ளவர்களும் விதிவிலக்கல்ல. இவர்களில் பெரும்பாலானவர்கள் மொபைல் போனை தங்களுக்கு வரும் அழைப்புகளை எடுக்கவும், தாங்கள் வேறு யாருக்காவது போன் செய்ய வேண்டியதிருந்தால் மட்டுமே பயன்படுத்துகிறார்கள். இவர்களின் மற்ற செயல்பாடுகளுக்கும் மொபைல் உதவும் விதமாக ஒரு செயலி இருந்தால் எப்படி இருக்கும்? உதாரணமாக உபர் புக் செய்ய, வாட்ஸப்-பில் உரையாட, யூடியூப் பார்க்க என்று… 

இன்றைய காலகட்டத்தில் ஸ்டார்ட் அப் கம்பெனிகள் எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு கண்டுபிடித்துக் கொண்டிருக்கின்றன.

பனாரஸ் ஹிந்து யுனிவர்சிட்டியில் ஐ.ஐ.டி., பின்னர் பெங்களூர் ஐ.ஐ.எம்.-மில் எம்.பி.ஏ., பயின்ற பிரமித் பார்கவா, ஏறக்குறைய 22 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவின் மிகப்பெரிய எப்.எம்.சி.ஜி., நிறுவனங்களில் ஒன்றான இந்துஸ்தான் யூனிலீவரில் பணிபுரியும் போது குறிப்பிட்ட வாதக் கோளாறுக்காக ஒரு மருந்து பரிந்துரைக்கப்பட்டார். இந்த மருந்தை உட்கொண்டவுடன், அவரது விழித்திரை சேதமடைந்தது, மற்றும் அவருக்கு  ஒரே இரவில் பார்வை குறைபாடு ஏற்பட்டது. இந்த மிக அரிதான நிலை எவ்வாறு சரியாகும்  என்பதற்கான சரியான சிகிச்சையை மருத்துவர்களால் அளிக்க இயலவில்லை.

அதன் பின்னர் 10 வருடங்களுக்கு மேலாக மோட்டோரோலா மற்றும் குவெஸ்ட் கண்டோரல் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை பார்த்து வந்தார். அதே சமயம் அவருடைய பார்வை குறைபாடு தொடர்ந்து மோசமாகிக் கொண்டு வந்தது.

தற்போது 53 வயதாகும் பிரமித் ஒரு கட்டத்தில் முழுப் பார்வையும் இழக்க நேரிட்டது. தற்போது கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் செயலிகளை இயக்கக்கூடிய வகையில் ஒரு செயலி (app) இவரது கம்பெனி “விசியோ ஆப்ஸ்” (Visio Apps) கண்டுபிடித்துள்ளது. இந்த செயலியின்பெயர் “லூயி வாய்ஸ்” (Louie Voice) என்று அழைக்கப்படுகிறது. குரல் கட்டளைகளைப் பயன்படுத்தி வாட்ஸ்அப்பில் ஒரு உரையை அனுப்ப அல்லது உபரில் ஒரு வண்டியை முன்பதிவு செய்ய போன்றவைகளை செய்ய அனுமதிக்கிறது.

எளிதாக கூறவேண்டுமானால், குரல் கட்டளைகளைப் பயன்படுத்துவதன் மூலம், பார்வைக் குறைபாடுள்ள ஒருவர் பல செயலிகளை உபயோகிக்க இயலும் மற்றும் அவர்களின் தொலைபேசிகளில் பல்வேறு அம்சங்களைப் பயன்படுத்தலாம். பார்வை குறைபாடுள்ளவர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்கள் மூலம் ஆன்லைன் செயல்பாட்டில் உலகத்தை அணுக உதவுவதில் “லூயி வாய்ஸ்” செயலி உபயோகமாக இருக்கிறது.

எப்படி இது சாத்தியமானது? பிரமித்திற்கு ஒரு நண்பருடன் சந்திப்பு இருந்தது, அவர் டெல்லியில் உள்ள தனது அலுவலகத்திற்கு அழைத்தார். கூட்டத்திற்குப் பிறகு, அவரது நண்பர் அவருக்காக உபேர் வண்டியை முன்பதிவு செய்ய முன்வந்தார்.

பிரமித்தின் கார் சவாரிக்கு முன்பதிவு செய்யும் போது, அவரது நண்பர் அவரை அலுவலக  முகவரியிலிருந்து, செல்லுமிடம் தேர்வு செய்ய, சவாரி வகை மற்றும் கட்டண விருப்பத்தை தேர்வு செய்ய,  சவாரி உறுதிப்படுத்த என்று உதவினார். உபெரில் வீடு திரும்பும் வழியில், திடீரென்று ஒரு எண்ணம் பிரமித் மனதில் தோன்றியது, நண்பரைப் போலவே எனக்கு உதவக்கூடிய ஒரு செயலி நண்பரை ஏன் நாம் உருவாக்க கூடாது என்று. அதன் கடின உழைப்பு தான் தற்போது இருக்கும் “லூயி வாய்ஸ்” என்ற செயலி.

இந்த கம்பெனியை ஆரம்பிப்பதற்கு முன்பு 9 மாதங்கள் வரை இரண்டு கம்பெனிகளில் பணிபுரிந்து இது போன்ற ஒரு செயலி உருவாக்குவதின் தொழில்நுட்ப சாத்தியங்களை பற்றி தெரிந்து கொண்டார். இரண்டரை வருடங்களுக்கு முன்பு ஜுன் 2018ல் தொடங்கப்பட்ட விசியோ ஆப்ஸ் கம்பெனி அக்டோபர் 2018 வரை தொழில்நுட்பம் மிகவும் சிக்கலானதாக இருந்ததால் அவர்களால் ஒரு வரி குறியீட்டை கூட எழுதவில்லை. பின்னர் படிப்படியாக வெற்றி கண்டு கடந்த நவம்பர் மாதம் இந்த செயலியின் பீட்டா வடிவம் கொண்டு வரப்பட்டது.

தற்போது 70 நாடுகளில் உள்ள 9000 பேர் வரை இந்த செயலியை உபயோகிக்கிறார்கள். இதில் பாதிக்கும் அதிகமானவர்கள் இந்தியாவில் வசிப்பவர்கள் ஆவர்.

தற்போது இந்த செயலி இலவசமாக தரவிறக்கம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. பிற்காலத்தில் கட்டண சேவையாக மாறலாம். இதை ப்ளே ஸ்டோர் (Play Store) மூலமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த செயலியை இன்னும் பல விதங்களில் உபயோகப் படுத்துவதற்கான முயற்சிகளும் நடைபெற்று கொண்டிருக்கின்றன என்பது குறிபிடதக்கது. பிராந்திய மொழிகளிலும் கொண்டு வர ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். இவர்களின் இணையதளம் www.visio-apps.com

Spread the lovely business news