அவசியம் அறியவேண்டிய
ரொக்க பரிவர்த்தனை!

வருமான வரிச் சட்டத்தில், ரொக்க செலவுகள் முறைப்படுத்தும் நடைமுறை நீண்ட காலமாகவே உள்ளது.  1961ம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்தை நாம் இதுவரை கை வைக்காமல், அவ்வப்போது திருத்தங்களுடன் பயன்படுத்திக்  கொண்டிருக்கிறோம்.

வருமான வரிச் சட்டத்தின்படி  பணத்தை ரொக்கமாக செலவு செய்வதிலும், கடன் பெறுவதிலும், கடனை திருப்பித் தருவதிலும் வரம்பு நிர்ணயிக்கப்பட்டு  அது நடைமுறையில் உள்ளது. இதுவரை வரம்பு மட்டும் அடிக்கடி மாற்றங்களை கண்டு வருகிறது. இப்போது பண மதிப்பு இழப்பு  நடவடிக்கைகுப் பின்னர்  இதுகுறித்த விதிகள் கடுமையாக்கப்பட்டு சட்டமாகியுள்ளது. 

ஒரு நிறுவனத்தின் கணக்குகளைப் பராமரிக்கும் பொறுப்பில் இருப்பவர்களும், வணிகர்களும், தொழிலதிபர்களும் ரொக்கப் பரிவர்த்தனையின் நடைமுறைகள் குறித்தும் அறிந்து வைத்துக் கொள்வது அவசியம் மட்டுமல்ல, அத்தியாவசியமும் கூட.

விதி –1

வியாபாரத்தில், ரொக்கமாக, 10 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக செலவு செய்ய அனுமதி இல்லை. அப்படி செலவு செய்தால், அந்த செலவு  வருமான வரிக் கணக்கில் கழித்துக் கொள்ளப்படமாட்டாது. மாறாக, அந்த செலவு வருமான வரி அதிகாரிகளால் வருமானமாக எடுத்துக் கொள்ளப்பட்டு, அதற்கும் வரி செலுத்தும் நிலை வரலாம். இதற்கு வருமான வரிச்சட்டத்தின் 40(A)(3)படி இது பொருந்தும்.

விதி – 2

ரொக்கமாக கடன் பெறுதல்; இதிலும் கூட வரையறை உள்ளது. வருமான வரிச்சட்டம் பிரிவு 269 SS என்ன சொல்கிறதென்றால், ரொக்கமாக வாங்கும் கடனின் அளவு 20 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக இருக்கக்கூடாது. அவ்வாறு கடன் பரிவர்த்தனையாகி இருந்தால், நீங்கள் எந்தளவு தொகையை கடனாக பெற்றீர்களோ, அந்தளவு தொகையை அபராதமாக விதித்து, அதை வசூல் செய்யும் அதிகாரம் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு உள்ளது.

விதி  – 3

கடன் பெறுவதில் எப்படி 20 ஆயிரம் ரூபாய் என்ற உச்சவரம்பு உள்ளதோ, அதேபோல், கொடுத்தக் கடனை வட்டியுடன் திரும்பப் பெறுவதில் உச்சவரம்பு  உள்ளது. எவ்வளவு தெரியுமா? 

நீங்கள் கொடுத்த கடனில்  20 ஆயிரம் ரூபாயை  அதிகபட்சமாக ரொக்கமாக பெறலாம். அதற்கு அதிகமான தொகையை நீங்கள் பெற்றது தெரியவந்தால், வருமான வரிச்சட்டம் பிரிவு 269D யின்படி,  பெற்றத் தொகை அளவுக்கு அபராதத்தை போட்டு தீட்டிவிடுவார்கள்.   இந்தத் தொகையில் திரும்பப் பெற்ற வட்டியும் அடங்கும்

விதி – 4

ரொக்கமாக, ரூபாய்  2 லட்சத்துக்கு மேல் பெறுதல் 269 ST. இது பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின்னர் அமலுக்கு வந்துள்ள சட்டம். அதாவது, ஒரே நாளில் 2 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக ரொக்கமாக பெறுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இது ஒரே நாளில், ஒரே நேரத்தில் பெறும் தொகைக்கும் பொருந்தும். அல்லது ஒரே நாளில் பல பரிவர்த்தனைகள் மூலம், 2 லட்சம் ரூபாய் ரொக்கம் என்ற இலக்கை எட்டும் வரைக்கும் பொருந்தும். ஒன்றுக்கு மேற்பட்ட பரிவர்த்தனைகள் செய்தாலும், ரொக்கத்தின் அளவு 2 லட்சம் ரூபாய்க்கு அதிகமாகி விடாமல் கவனமாக இருக்க வேண்டும். எந்தளவுக்கு கூடுதலாக பரிவர்த்தனை நடந்ததோ, அதே அளவுக்கு அபராதம் இருக்கும். 

இது வியாபாரத்தின் மூலம் கிடைத்த ஒரே  விற்பனை தொகைக்கும், சேவையின் மூலம் பெறப்படும் பணம், சொத்து விற்பனை மூலம் பெறப்படும் பணத்துக்கும் பொருந்தும்.

உதாரணமாக, லட்சம் ரூபாய் ஒரே நாளில் பில்லாகவும் ஆகவும்,  1.2 லட்சம் இன்னொரு பில்லாகவும் இருந்தாலும் பொருந்தும். 

ஒரு இன்வாய்ஸ் 3 லட்சத்து 20 ஆயிரம் பில், 2 நாட்களில் பணமாக பெற்றாலும் பொருந்தும்.

திருமண செலவுகள்,  2 லட்சத்துக்கு அதிகமாக பிரித்துக் கொடுத்தாலும் பொருந்தும்.

விதி –5 

ரொக்கத்தில் இயந்திரங்கள் / தளவாடங்கள் வாங்குவது ; ரொக்கத்தில் சொத்து வாங்கும்போது, அதற்காக நீங்கள் கொடுக்கும் தொகை, 10 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக இருக்கக் கூடாது. அப்படி கூடுதல் தொகைக்கு சொத்து வாங்கும்போது, வருமான வரி சட்டத்தில் அந்த சொத்தின் மீது தேய்மானம் செலவாக எழுத அனுமதிக்கப்படாது. 

உதாரணமாக, நீங்கள்  ரொக்கத்தில் ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு ஒரு கம்ப்யூட்டர் வாங்குவதாக எடுத்துக் கொள்ளலாம். அவ்வாறு வாங்கும்போது, அந்த சொத்து அதாவது கம்ப்யூட்டருக்குரிய தேய்மானத்தை வருமான வரியில் கழித்துக் கொள்ள முடியாது.

விதி –  6

பண அன்பளிப்பு; அரசிடம் பதிவு பெற்ற டிரஸ்ட்கள் மற்றும் அமைப்புகளுக்கு ரொக்க அன்பளிப்புகள் வழங்கும்போது, அவை 2 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக இருக்கக் கூடாது. அத்துடன், ரொக்க அன்பளிப்புகள் 2 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்கும்போது, அதை வருமானவரிச் சட்டம் 80 G யின்படி கழித்துக் கொள்ளலாம். இதற்கு அதிகமான தொகையை வழங்கினால், கழித்துக் கொள்ள முடியாது. 

அதேநேரத்தில், தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் வழங்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும்போது, ரொக்கமாக  எந்த தொகையும் அனுமதிக்கப்படாது. அவ்வாறு நீங்கள் வழங்கும் அன்பளிப்பை அரசியல் கட்சிகள் ஏற்றுக் கொள்ளும்போது, அது வரிக்கு உட்பட்ட வருமானமாக கருதப்பட்டு, அதற்கும் வரி செலுத்த வேண்டியிருக்கும்.

இது கூடுதல் தகவல்கள்; வருமான வரிச் சட்டத்தின் சில நுாதனமான தண்டனைகளும் உள்ளன. அதாவது கேஷ் கிரிடிட் என்ற பிரிவின் கீழ், இந்த தண்டனைகள் வருகின்றன. கணக்கில் வராத பணப் பரிவர்த்தனைகள், கணக்கில் வராத தொகை ஆகியவற்றை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டு பிடித்தார்கள் என்றால், வருமான வரிச்சட்டம் பிரிவு 68ன் கீழ், அதிகபட்சமாக 82.5 சதவீதம் வரை வரி விதிக்கும் அதிகாரம், அதிகாரிகளுக்கு உள்ளது.

எனவே, வருமான வரிச்சட்டத்தின் முக்கிய அம்சங்களாக, ரொக்கப் பரிவர்த்தனை முறையை கவனத்தில் கொள்ள வேண்டும். நிறைய சட்டப்பிரிவுகள் அழுத்தமாக அமல்படுத்தப்படுவதில்லை. எனவே , ரொக்கமாக பணத்தை கையாள்வதில் கவனம், விழிப்புணர்வு தேவை.

குறிப்பு: வாசக வணிகர்களே உங்கள் சந்தேகங்களை எழுத வேண்டிய இமெயில்: karthi@gkmtax.com – தொழில் சுகம் தொடரும்

Spread the lovely business news
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •