பேட்டி, கட்டுரையாளர்  – அ. ஹூமாயூன், சிதம்பரம்

வித்தியாசமான பெயரில் விசித்திரமான முறையில்  ஒருங்கிணைந்த இயற்கை வேளாண் பண்ணையை  குவைத்தில் இருந்தபடியே வழி நடத்துகிறார் திரு. குமரேசன். 

சிவகங்கை மாவட்டம், படமாத்துர்-சித்தாலங்குடி கிராமத்தில் விவசாயம் மற்றும் கால்நடை சார்ந்த தொழில் செய்து வருகிறார்கள்.  வெள்ளாடு,  செம்மறி ஆடு,  முயல், வான்கோழி மற்றும்  வாத்து வளர்ப்பு என பல உயிரினங்களை இங்கு பண்ணையில் வளர்த்து வருவதோடு,  வாழை,  தீவன பயிர்கள் என எல்லாம் சேர்ந்து ஒட்டு மொத்தத்தில்  “கருவேலங்  காட்டுக்குள்ளே ஒரு பசுஞ்சோலையாக காட்சியளிக்கிறது”.

விஞ்ஞானம் வளர்ந்தது.. புதுநாகரிகம் பிறந்தது.. இப்படி எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. ஆனால் சில வழிமுறைகள் மட்டும் நம் பாரம்பரியத்தில் பின்னி பிணைந்து நம்மை தொடர்ந்து வருகின்றன. அதில் கால்நடை வளர்ப்பும் ஒன்று. 

குவைத்தில் பணிபுரியும் குமரேசனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினோம். “தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தில் உள்ள ஆட்டுப் பண்ணையை குவைத்திலிருந்து இயக்குவது எப்படி சாத்தியம்” என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில்…. பெருமை தனது மனைவி சரண்யாவையும்  சாரும் என்றார்.  குவைத்திலிருந்து கொண்டே கேமரா, ஆண்ட்ராய்டு போன் மூலமாக பண்ணையை கண்காணிக்கிறார். சரண்யா எம்.சி.ஏ., படித்து ஐடி கம்பெனியில் வேலை பார்த்த இவர் ஒரு பள்ளியில் ஆசிரியையாகவும் இருந்திருக்கிறார். வேலையை விட்டு விட்டு பின்னர் கணவருக்கு  துணையாக பண்ணையை கவனிக்க ஆரம்பித்துள்ளார். குமரேசன் எம்.எஸ்சி.,  படித்தவர். ஒரு தனியார் உர உற்பத்தி ஆலையில் வேலை செய்ய வாய்ப்பு கிடைத்த போதுதான் ரசாயன உரத்தின்  பாதிப்பு முழுமையாக அவருக்கு தெரியவந்தது,  இயற்கை விவசாயத்துக்கு மாற வேண்டும் என்ற எண்ணம் வந்தவராக வேலையை உதறிவிட்டு இந்த பசுமை பண்ணையை தொடங்கி இருக்கிறார். 

ஆடு வளர்ப்பை பிரதான தொழிலாக செய்து வருகிறார்கள்.  தலச்சேரி, போயர், ஜமுனாபாரி, நாட்டு வெள்ளாடு, செம்மறி, வெள்ளாடு போன்ற இனங்களை வளர்க்கிறார்கள். ஆடுகள் இறைச்சிக்காக விற்பதோடு, பண்ணை தொடங்குவதற்கு ஏற்றவாறும் எல்லா வயதிலும் ஆடுகள் விற்பனை செய்கின்றனர். 

ஆடுகள் தளதளவென வளர பசுந்தீவனம், அடர்தீவனம்,  உலர் தீவனம், தாது உப்பு, தண்ணீர் இவை அனைத்தும்  முக்கியம்.  ஆட்டுக்கு தேவையான பச்சை பயிர்களை இவர்களே பண்ணையில் பயிரிட்டுக் கொள்கிறார்கள். குறிப்பாக  நாட்டு அகத்தி,  முருங்கை,  சுபாபுல்,  காய்ந்த கடலைக்கொடி,  மல்பெரி, வேலி மசால்,   அசோலா மற்றும் பச்சைபயிறு போன்றவை. 

ஆடுகளுக்கு காய்ந்த கடலைக் கொடி மிக முக்கியமான தீவனம். அடிக்கடி வாயில் மென்றுக் கொண்டிருக்கும் ஸ்நாக்ஸ் இதுதான்.   மல்பெரி இலையில் கொழுப்பு அதிகமாக இருக்கும் என்பதால் அதை தாய் ஆடுகளுக்கு, சினை ஆடுகளுக்கு  கொடுக்கக்கூடாது என்றார். 

பரண் அமைத்து ஆடு வளர்ப்பதில்  இவருக்கு விருப்பம் இல்லை.  காரணம் அந்த காலத்தில் நமது முன்னோர்கள் அப்படி எல்லாம் பரண் அமைக்காமல் மேய்ச்சலுக்கு விட்டு வளர்த்தார்கள். ஆடுகளும் அதை சாப்பிட்டவர்களும் திடகார்த்திரமாக இருந்தார்கள். ஒருவேளை  கொட்டில் முறையில் ஆடுகள் வளர்க்கப்பட்டாலும் தினமும் வெளியே சென்று மேய்ந்து வரவேண்டும்.  காலார நடப்பதால்தான் அவற்றை கால்நடை என அழைக்கிறோம். வெளியே மேய்ச்சலுக்கு சென்று  மண்ணிலும் கல்லிலும் நடப்பதால்  ஆடுகளுக்கு சில என்சைம்கள் சுரக்கின்றன. அதுமட்டுமல்ல ஆடுகளுக்கு தேவையான மூலிகை இலைகளும் அவைகளுக்கு கிடைத்து விடுகின்றன.  உதாரணம் ஆடுகளுக்கு  குடல் புழு இருந்தால் அவற்றிற்கு ஒருவித குறுகுறுப்பு தொடங்கி  வேப்பந்தழை போய் சாப்பிடும்.  அதனால் வெளியே மேயும் ஆடுகளுக்கு பெரிய நோய்கள் வருவதில்லை. 

ஆடு வளர்ப்பு குறித்து பேசுகையில், வளர்க்க வாங்கும்போது ஆட்டுக்குட்டிகளாக வாங்காமல் தாய் ஆடும் அதை சார்ந்த குட்டிகளையும் வாங்கினால்தான் விரைவில் வருவாய்க்கு வழி பிறக்கும் என்றார். 

 “நமக்கு விருந்து படைக்கும் ஆடுகளை எங்களிடம் வளரும் வரை தினமும் தடல்புடல் விருந்து கொடுத்துதான்  வளர்க்கிறோம்” என்றார்.  

“அடேங்கப்பா இந்த அளவுக்கு அக்கறையும், பாதுகாப்பும் கொடுத்து,  ஆக மொத்தத்தில் ஆடுகளை ஆடுகளாக வளர்க்காமல் ஆட்களாக வளர்க்கிறீர்கள்” என நான் பாராட்டி விடை பெற்றேன். 

தொடர்புக்கு : 98651 95286

வாட்ஸ்அப்   : 98944 33930

Spread the lovely business news