நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பையனுக்கு சென்னையிலிருக்கும் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐ ஐ டி) படிக்க வாய்ப்புக் கிடைத்தால் எப்படியிருக்கும்? அவனும் அவன் குடும்பத்தினரும் கொண்டாடி தீர்த்திருப்பார்கள்தானே?. ஆனால் நாகவரா ராமாராவ் நாராயண மூர்த்தியின் வாழ்க்கையில் அப்படி நடக்கவில்லை. உயர்நிலைப் பள்ளி ஆசிரியரான அவனது அப்பாவின் பொருளாதர நிலைமை ஐஐடி-யில் இடம் கிடைத்தும் அங்கு சேர்ந்து படிக்கும் வாய்ப்பைக் கொடுக்கவில்லை. எனவே அவன் மைசூரில் இருக்கும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜீனியரிங்கில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தான். 

ஆனாலும் நாராயண மூர்த்தியின் ஐஐடி கனவு அவரைத் துரத்தியது. இளங்கலை பொறியியல் பட்டத்தை மைசூர் கல்லூரியில் பெற்றவுடன் முதுகலைப் படிப்புக்காக ஐஐடி கான்பூரில் சேர்ந்து 1969 ஆம் ஆண்டு பட்டம் பெற்றார். 

அதன்பின், அவர் தனது பணி வாழ்க்கையை இன்னொரு பிரபலமான கல்விக்கூடமான ஐஐஎம் – அகமதாபாத்தில் அதனுடைய `தலைமை சிஸ்டம்ஸ் ப்ரோக்ராமராக’த் துவக்கினார். உலகத்திலேயே ஹார்வர்ட், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகங்களுக்கு அடுத்து time-sharing computer system ஐ நடைமுறைக்குக் கொண்டுவந்த மூன்றாவது கல்விக்கூடம் ஐஐஎம் அகமதாபாத் ஆகும். இந்தத் திட்டத்தில் மூர்த்தி மிகவும் தீவிரமாகப் பங்கு கொண்டார். 

1970 ஆம் ஆண்டு பாரீஸிலிருக்கும் சார்லஸ் டி காலே விமானநிலையத்தில் ஏர் கார்கோ-வை கையாளுவதற்கான ஆப்பரேட்டிங் சிஸ்டம் சம்பந்தமான திட்டத்தில் பணியாற்றி விட்டு இந்தியா திரும்பிய மூர்த்தி `சாஃப்ட்ரானிக்ஸ்’ என்கிற நிறுவனத்தை ஆரம்பித்தார் ஆனால் அதற்கு பதினெட்டாவது மாதத்திலேயே மூடுவிழா நடத்தப்பட்டது. பின்னர், பூனாவைச் சேர்ந்த `பாட்னி கம்ப்யூட்டர் சிஸ்டம்’ என்கிற நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்ற ஆரம்பித்தார்.

ஆனால் சாஃப்ட்ரானிக்ஸ் ஆரம்பித்தபோது இருந்த தொழில்முனைவோருக்கான துடிப்பு அவரை விடவில்லை. விளைவு, அவரது மனைவி சுதா மூர்த்தியிடமிருந்து ரூ 10,000 பெற்று அதை முதலீடாகக் கொண்டு இன்ஃபோசிஸ் என்கிற நிறுவனத்தை 1981 ஆம் ஆண்டு ஆறு நண்பர்களுடன் ஆரம்பித்தார். 2008 ஆம் ஆண்டு தொலைக்காட்சி பேட்டியின்போது அவர், `ஆரம்பத்திலிருந்தே நேர்மை, வெளிப்படைத்தன்மை ஆகிய இரண்டையும் அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டது இன்ஃபோசிஸ்’ என்றார். 

இன்ஃபோசிஸின் வளர்ச்சிக்கு இன்னொரு காரணம் 1990களில் ஏற்பட்ட பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையுமாகும். தனது நிறுவனத்தின் சேவையை உலகமெங்கும் விரிவுபடுத்த வேண்டுமென தனது குழுவினரைக் கேட்டுக் கொண்டார். தனிப்பட்ட முறையில், இவர் Global Delivery Model ஐ வடிவமைத்து அதை நிறைவேற்றினார். இது இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒரு மைல்கல்லாகும். 

1999 ஆம் ஆண்டு யு.எஸ். பங்குச் சந்தையில் பட்டியிலிடப்பட்ட முதல் இந்திய நிறுவனம் என்கிற பெருமையும் இந்நிறுவனத்துக்கு உண்டு. மார்ச் 11 அன்று இன்ஃபோசிஸின் பங்கு பட்டியலிடப்பட்ட சில மணி நேரத்தில் பங்கொன்றின் விலை 37 டாலரிலிருந்து 52 டாலருக்குச் சென்றது. 1981 முதல் 2002 ஆம் ஆண்டு வரை இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த மூர்த்தி துணை நிறுவனரான நந்தன் நிலகேனிக்கு வழிவிட்டாலும் தொடர்ந்து நிறுவனத்தின் சேர்மனாக இருந்து வந்தார்.  

2006 ஆம் ஆண்டு அவர் நிறுவனத்தின் பதவியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டபோது அதன் வருமானம் சுமார் 3 பில்லியன் டாலர். பணியாளர்களின் எண்ணிக்கை சுமார் 70,000. இன்றைக்கு இந்நிறுவனத்தின் வருமானம் சுமார் 11.8 பில்லியன் டாலர், பணியாளர்களின் எண்ணிக்கை சுமார் 2,28,000!!

2009 ஆம் ஆண்டு சமூகத்துக்கு திருப்பி ஏதாவது செய்ய வேண்டுமென்ற நோக்கத்தில் `பெருங்குழும சமூகப் பொறுப்பு (Corporate Social Responsibility – CSR)’ நடவடிக்கைகளை இந்நிறுவனம் முன்னெடுத்தது. அதில் ஒன்று `Infosys Science Foundation’ ஆகும். இது ஒரு லாபநோக்கற்ற ட்ரஸ்ட். ஆறு துறைகளில் ஆய்வுகளை ஊக்குவிக்கும் பொருட்டு ரூ 100 கோடி ஒதுக்கப்பட்டு, ஆண்டுதோறும் சிறப்பாக ஆய்வு செய்யும் ஆறு பேரைத் தெரிவு செய்து ஒவ்வொருவருக்கும் ரூ 55 லட்சத்தை பரிசாக வழங்கி வருகிறது. மூர்த்தியின் மனைவியும், பொறியியலாளரும், சிறந்த எழுத்தாளருமான சுதா மூர்த்தியின் தலைமையில் 1996 ஆம் ஆண்டு `இன்ஃபோசிஸ் ஃபவுண்டேஷன்’ ஆரம்பிக்கப்பட்டு கல்வி, ஆரோக்கியம் ஆகிய துறைகளில் பல சமூக சேவைகளை செய்து வருகிறது. 

ரூ 10,000 முதலீட்டில் ஆரம்பித்த நிறுவனத்தின் இந்த விஸ்வரூப வளர்ச்சிக்குக் காரணங்கள் என்ன? மூர்த்தி கூறியது போல நேர்மை, வெளிப்படைத்தன்மை ஆகியவற்றோடு சரியான நேரத்தில் வாய்ப்புகளைக் கண்டறிந்து அதில் கவனம் செலுத்தி அடுத்த நிலைக்கு நகர்த்திச் சென்ற அவரது தலைமைப் பண்பும் முக்கியமான காரணமாகும். 

நிறுவனத்தின் பண்பாடு, கலாச்சாரம் பற்றி “நீங்கள் நீண்ட காலமாக தொழிலில் இருந்து வரும்போது, நல்ல நேரங்களையும் மோசமான நேரங்களையும் எதிர் கொள்ள வேண்டியிருக்கும். நீங்கள் மோசமான நேரங்களை கடந்து செல்லும்போது, செலவுகளைக் கட்டுப்படுத்தவும், வாடிக்கையாளர்களையும், பணியாளர்களையும் சிறப்பாக திருப்திப்படுத்தவும் வெளிப்படையாக  மாறவும் கற்றுக்கொள்கிறீர்கள். இதன் மூலமாக, நீங்கள் நிறுவனத்துக்கென்று ஒரு குணாதிசியத்தை உருவாக்குகிறீர்கள்’ என்கிறார் எளிமைக்கு உதாரணமான மூர்த்தி.   

நாராயண மூர்த்தி பற்றி சில தகவல்கள்:

• 1974 ஆம் ஆண்டு இவர் பல்கேரியாவில் இருந்தபோது கம்யூனிச அரசை எதிர்த்து பேசியதற்காக உணவு, தண்ணீர் இல்லாமல் குளிர் அறையில் 72 மணிநேரம் காவலில் வைக்கப்பட்டார். 

• இவருடைய தனிபட்ட சொத்து மதிப்பு சுமார் 2.5 பில்லியன் டாலர். 

• இவருக்கு இந்திய அரசு 2000 வது ஆண்டில் `பத்மஸ்ரீ’யும், 2008 ஆம் ஆண்டு `பத்ம விபூஷணும்’ கொடுத்து கெளரவித்தது. இது தவிர இவர் பெற்ற பட்டங்களும், விருதுகளுமென ஒரு நீண்ட பட்டியல் உண்டு. 

• இவருடைய மகன் ரோஹன் மூர்த்தி, மகள் அக்ஷதா மூர்த்தி. மருமகன் ரிஷி சுனாக். இவர் இரண்டு வாரங்களுக்கு முன்பு இங்கிலாந்து நாட்டின் நிதி மந்திரியாக அந்நாட்டு அரசால் நியமிக்கப்பட்டார் ரிஷி சுனாக். 

• இந்நிறுவனம் முதல் பில்லியன் டாலர் வருவாயை எட்ட 23 வருடங்கள் ஆனது (1981 முதல் 2004 ஆம் ஆண்டு வரை), அடுத்த பில்லியனுக்கு எடுத்துக் கொண்ட கால அவகாசம் 23 மாதங்கள் (2004-2006) மட்டுமே!! 2008 ஆம் ஆண்டு 4 பில்லியன் டாலர், 2010 ஆம் ஆண்டு 5 பில்லியன் டாலர், 2016 ஆம் ஆண்டு 10 பில்லியன் டாலர். 2019 ஆம் நிதியாண்டில் இதன் வருவாய் 11.8 பில்லியன் டாலராகும்.

• நிறுவனத்தின் பங்குகளை பணியாளர்களுக்கு வழங்குவதன் மூலம் பல கோடீஸ்வரர்களை உருவாக்கி வரும் நிறுவனம் இன்ஃபோசிஸ்!!

• இவர் எழுதியிருக்கும் நூல்கள்: A Better India: A Better World, A Clear Blue Sky: Stories and Poems on Conflict and Hope, The Wit and Wisdom of Narayan Murthy. 

(நாராயண) மூர்த்தியின் `கீர்த்தி’யைப் பற்றியும், அவர் உருவாக்கிய இன்ஃபோசிஸ் பற்றியும் `ரீம் ரீமாக’ எழுதிக் கொண்டே இருக்கலாம்.

Spread the lovely business news