சிம்கோ (SIMCO) – கடந்த எண்பது வருடங்களாக நெறிமுறையிலான மருந்துகளைத் (ethical medicines) தயாரித்து விற்பனை செய்து வரும் முன்னணி நிறுவனம். இது மதுரைக்கு அருகே சாத்தமங்கலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு சப்தமில்லாமல் இயங்கி வருகிறது. கிராமப்புறங்களில் அப்போதெல்லாம் `சிவப்பு டப்பா’ என அழைக்கப்பட்ட மருந்துதான் `சைபால் (Saibol)’ இங்குதான் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. சுதந்திரத்துக்கு முன்பு வெளிநாட்டிலிருந்துதான்  பெரும்பாலான மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டு வந்தன. சுதேசி பொருட்கள் பற்றிய காந்திஜியின் பேச்சுக்கள் இளைஞனாக இருந்த சுப்பிரமணியனை ஈர்க்க அவரும் அவருடைய சகலையும் (மனைவியின் சகோதரியின் கணவர்) சேர்ந்து தரமான மருந்தை பொருளாதார நிலையில் அடிமட்டத்தில் இருப்பவரும் வாங்கி உபயோகிக்க வேண்டுமென்கிற நோக்கில் `செளத் இண்டியன் மேனுஃபேக்சரிங் கம்பெனி (SIMCO)’ என்கிற பெயரில் நிறுவனத்தை ஆரம்பித்தனர். 

ஆரம்பத்தில் மருந்தரைக்கும் குழவியைக் கொண்டு மருந்து தயார் செய்து அதற்கு `சைபால்’ என நாமகரணம் சூட்டி தலை மேல் சுமந்து சென்று விற்றார்கள். அவர்களுக்குக்கென்று மூதாதையர் சொத்து எதுவும் இல்லை. அவர்களின் சம்பாத்தியத்திலான சேமிப்பைக் கொண்டே இத் தொழிலை ஆரம்பித்தனர். தோல் சம்பந்தமான வியாதிகளான பித்த வெடிப்பு, வெட்டுக் காயம், சொறி சிரங்கு ஆகிய அனைத்துக்கும் ஏற்ற சர்வரோக நிவாரணியாக இது சந்தையில் நிலைப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. மக்களிடமும் இதற்கு நல்லதொரு வரவேற்பு இருந்தது.

விற்பனை சூடுபிடிக்க ஆரம்பித்தவுடன் நவீன இயந்திரங்களை இறக்குமதி செய்து அதன் உதவியால் மருந்து தயாரித்து சந்தைப்படுத்தினர். விற்பனை நன்கு இருந்தாலும் ஒழுங்கான அமைப்பு முறை இல்லாததால் நஷ்டத்தில் இயங்க ஆரம்பித்த வேளையில் 1972 ஆம் ஆண்டு சிம்கோவின் நிறுவனர் சுப்பிரமணியன் திடீரென்று மரணம் அடைய படித்துக் கொண்டிருந்த அவரது மகன் சங்கரநாராயணன் வீட்டு சொத்துக்களையும் நகைகளையும் அடமானம் வைத்து முடிந்தவரைக்கும் கடனை அடைத்தார்.     

படிப்போடு தொழிலையும் சங்கரநாராயணன் கவனித்து வர 1980களின் ஆரம்பத்தில் தனது இளங்கலைப் படிப்பையும் அதன்பின் பட்டயக் கணக்காளர் படிப்பையும் முடித்தார். இவருடைய நிர்வாகத்தில் கடன்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு, செயல்பாடுகளும் ஒரு சீரான நிலைக்கு வந்தது.

அதன் பின் நிர்வாகத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, நிர்வாகத்தின் கூட்டாண்மையை கலைக்க வேண்டுமென்று சங்கரநாராயணன் மதுரை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.  18 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 2009 ஆம் ஆண்டு நீதிமன்றம் ஒழுங்கமைத்த ஏலம் மூலம் நிறுவனத்தை வாங்கி அதன் உரிமையாளர் ஆனார். 

2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சங்கரநாராயணன் மரணிக்க அவரது விருப்பப்படி அவருடைய இரண்டு மகன்களான சுப்ரமணியன், பாலாஜி ஆகியோருக்கு நிறுவனத்தின் சொத்தும், பொறுப்பும் சென்று சேர அவர்கள் இப்போது இந்நிறுவனத்தைத் திறம்பட நடத்தி வருகின்றனர். அன்றைக்கு ஒரு batchக்கு 140 கிலோ தயாரித்து வந்த நிலை மாறி 2018 ஆம் ஆண்டு ஒரு batchக்கு 1100 கிலோ தயாரிக்கும் அளவிற்கு தனது உற்பத்தியை சந்தையில் அதற்கிருக்கும் தேவைக்கேற்ப அதிகரித்திருக்கிறது. 

இந்நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான சுப்ரமணியன் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பத்திரிகையில், `எங்களுக்கான மிகப்பெரிய சந்தைகள் தமிழகம் தவிர்த்து ஆந்திரா, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா ஆகியவை ஆகும். வயலில் வேலை செய்யும் விவசாயிகள் தங்களை நீர் சம்பந்தமான தோல் நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள சைபாலை பெரிதளவில் உபயோகப்படுத்தி வருகிறார்கள். சென்னையிலும், கேரளாவிலும் வெள்ளம் வந்தபோது கூட இதற்கான தேவை / கிராக்கி அதிகமானது. வெகுவிரைவில் பருக்களை குணமாக்கும் மருந்தாகவும் இதை நகர்ப் புறங்களில் அறிமுகப்படுத்தவிருக்கிறோம்’ எனக் கூறியிருக்கிறார். 

இன்றைக்கு இந்நிறுவனம் Alkasim, Alumag, Alumag Bellodonna, Simopex என்கிற பெயரில் வேறு மருந்துகளையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

Spread the lovely business news