சமையலில் கமகமக்கும் நம் தென்னகத்து மசாலாக்களை ‘சதர்ன் ஸ்பைசஸ்’ என்ற பெயரில் தயாரித்து, சந்தைப்படுத்தி வருபவர்கள் சென்னையைச் சேர்ந்த ஜெயமீனாட்சி மற்றும் வள்ளியம்மை. இன்ஸ்டன்ட் தோசை மாவு, இன்ஸ்டன்ட் இட்லி, சாம்பார் பொடி, இன்ஸ்டன்ட் ரசப்பொடி, இன்ஸ்டன்ட் குழம்பு பொடி, பருப்பு மிளகு பொடி, இட்லிப் பொடி, மிளகாய்பொடி, சுக்குப்பொடி, மஞ்சள்பொடி என்று ‘பிரிசர்வேடிவ் மற்றும் செயற்கை நிறம்’ சேர்க்காத இவர்களின் தயாரிப்புகள், இப்போது வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரிபவர்களுக்கு  ஒரு வரப்பிரசாதம்.

கல்லூரியில் டிகிரி படித்து முடித்ததும் திருமணமாகி, 12 வருடங்கள் இல்லத்தரசியாக இருந்தவர்தான் ஜெயமீனாட்சி. அதன் பிறகுதான் ‘நாமும் வீட்டில் இருந்தபடியே ஏதாவது பிசினஸ் பண்ணலாமே!’ என்ற எண்ணம் தோன்ற, அந்தச் சமயத்தில் மிகப் பரவலாகப் பிரபலமாகியிருந்த ‘ஸ்கிரீன் பிரின்ட்டிங்’ தொழிலைக் கற்றுக்கொண்டு, புடவைகள் ஆர்டர்கள் எடுத்து, கடைகளுக்குச் செய்துகொடுத்தார். கல்லூரிகளில் வொர்க்க்ஷாப்  நடத்தி, மாணவிகளுக்கு ‘ஏப்ரன்’களில் ஸ்கிரீன் பிரின்ட் செய்யக் கற்றுக்கொடுத்தார். அதன் மூலம் ஏப்ரன் பிரின்டிங் ஆர்டர் கிடைக்க, ‘கஸ்டமைஸ்டு’ ஏப்ரன் பிரின்ட் நிறையச் செய்துகொடுத்தார். இவர் பிரின்ட் செய்த ஏப்ரன்கள் வெளிநாட்டுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன.

ஸ்கிரீன் பிரின்ட் தொழிலை விட்டு, ‘சதர்ன் ஸ்பைசஸ்’ என்ற பிராண்டில் சமையல் பொடிகள் தயாரிக்கும் தொழிலுக்கு இவர் மாறியதற்குக் காரணம் ஒரு விபத்து!

அதை விவரிக்கிறார் ஜெயமீனாட்சி.    

‘‘ஸ்கிரீன் பிரின்டிங் பிசினஸ் நல்லா பிக்கப் ஆகும் நிலைமையில், ஒருநாள் டூவீலரில் போறப்போ ஆக்சிடன்ட் ஆகி, எனக்கு இடது கையில் எலும்புமுறிவு! எதுவுமே செய்ய முடியல.. வெளியில் வாங்கிச் சாப்பிட்டால் உடம்புக்கு ஆகாதுன்னு, எங்க அம்மாதான் என் கூட வந்து இருந்தாங்க. அவங்களே நல்ல ருசியான உணவைச் செய்து தந்தாங்க. எனக்கு உணவு மேல ஒரு இன்ட்ரஸ்ட் வந்தது அந்தச் சமயத்தில்தான். உணவுப் பொருள்கள் பத்தியும், அதன் தயாரிப்பு முறைகள் பத்தியும் சுவாரஸ்யமாகப் படிக்க ஆரம்பிச்சேன். நிறைய தகவல்கள் கிடைத்தது. எங்களுக்கு சொந்த ஊர் செட்டிநாட்டுப் பகுதி என்பதால், சமையலில் இயற்கையாகவே நல்ல ஆர்வமும் திறமையும் இருந்தது. இதை வச்சே ஏதாவது பிசினஸ் பண்ணலாமேன்னு யோசித்தேன். என்னுடைய நாத்தனார் வள்ளியம்மை என்பவரும் நானும் 2018ல் இதைத் தொடங்கினோம். 

சமையல் பொருட்களில் எதைத் தயாரிக்கலாம்னு யோசிச்சப்ப, வெளியூர்களில் போய் வேலை பார்க்கும் நம் பிள்ளைகள், அதிலும் குறிப்பாக ஐ.டி. துறையில் இருக்கும் இளம் பொறியாளார்களுக்கு அவசியமாகத் தேவைப்படுவது சாம்பார், ரசம், கிரேவி தயாரிக்கும் இன்ஸ்டன்ட் பொடிகள்தான். இனிமேல் வரும் காலங்களில் பிள்ளைகளும் சரி.. புதிதாய் திருமணமாகிப் போகும் பெண்களும் சரி.. சமைக்க ரொம்பவே சிரமப்படுவாங்க. தினம் வெளியே ஆர்டர் பண்ணி வாங்கிச் சாப்பிடுவதும் சாத்தியமில்லை. 

இப்போ மார்க்கெட்டில் கிடைக்கும் இன்ஸ்டன்ட் பொடிகள் எல்லாத்திலுமே அவை கெட்டுப் போகாமல் இருக்க பிரிசர்வேடிவ் சேர்க்கிறாங்க. அந்த செயற்கை நிறங்கள் மற்றும் ரசாயனப் பொருட்கள்தான் புற்றுநோய் வர்றதுக்கான காரணங்களில் ஒண்ணு. ‘நாம ஏன் ஆரோக்கியத்தைக் கெடுக்காத நல்ல உணவுப் பொருளைத் தயாரிக்கக் கூடாது’ன்னு யோசிச்சோம். இன்ஸ்டன்ட் சமையல் பொடிகளையே செயற்கை நிறம், பிரிசர்வேடிவ் இல்லாம கொடுக்கமுடியுமான்னு முயற்சி செய்து பார்த்தோம். நிறைய ஆராய்ச்சி செய்தோம். பல மாதிரியான காம்பினேஷனில் பொடிகள் தயாரிச்சு, அதை நாங்களே சமையலில் உபயோகப்படுத்திப் பார்த்தோம். 8, 9 மாதங்கள் செய்த தீவிர முயற்சிக்குப் பிறகுதான் ஃபைனல் புராடக்ட் திருப்தியாகக் கிடைச்சுது. எங்க நண்பர்கள், உறவினர்களுக்கு சாம்பிள் கொடுத்துப் பார்த்தோம். எல்லோரும் திருப்தியான அபிப்ராயம் சொன்னபிறகுதான் மார்க்கெட்டிங் செய்ய முன்வந்தோம். முறையாக பிராண்ட் செய்து, லைசென்ஸ் எல்லாம் வாங்கினோம். டிசைனிங், ஸ்டிக்கரிங் போன்ற வேலைகளில் பல நல்ல மனிதர்கள் உதவினாங்க.

மார்க்கெட்டிங் என்னும் மாயாஜால உலகுக்குள் போனதும்தான் தெரிஞ்சுது, புதியதாக ஒரு தயாரிப்பை மார்க்கெட் பண்றது எவ்வளவு கடினம் என்று! அதுவும் சமையல் பொடிகள் சாம்ராஜ்யத்தில் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொடி வகைகள்… ஆனால் நம்ம தமிழ்நாட்டில் குறிப்பாக ரெண்டு பிரபலமான பிராண்டுகளின் பாக்கெட் சரங்கள்தான் எல்லாக் கடைகளிலும் முன்னால் தொங்கும். நம்ம பிராண்டு பாக்கெட்டை போடறதுக்குக் கூட இடம் கிடைக்காது. பெரிய பிரயத்தனத்தனங்களுக்குப் பின்னர் கடைகளில் போட இடம் கிடைச்சது. பெங்களூரில் சாஃப்ட்வேர் துறையில் வேலைபார்க்கும் என் மகள் இந்தப் பொடிகளை எல்லாம் எடுத்துட்டுப் போய் சமைக்க ஆரம்பிச்சதும், அவளுடைய நண்பர்கள் எல்லோரும் வாங்க ஆரம்பிச்சாங்க. வயசான பெரியவங்களுக்கும் இது உபயோகமாக இருக்கு. அப்படியே வாய்மொழியாகப் பரவி, பல பேர் கேக்கத் தொடங்கினாங்க. கடைகளிலும் கொஞ்சம் போக ஆரம்பிச்சுது.. 

இப்போ டெல்லி, கூர்கான், ராஜஸ்தான், குஜராத் மாதிரி மாநிலங்களுக்கு எல்லாம் அனுப்புறோம். வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கும் நிறைய அனுப்புறோம். இப்போ எங்க தயாரிப்புகளை தொடர்ந்து வாங்கும் 700க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்காங்க. 

எங்க புராடக்டை வாங்கினால், தாளிக்கக் கூட வேணாம் அப்படியே தண்ணியில் கரைச்சு கொதிக்க விட வேண்டியதுதான். ரொம்ப சுலபமாக இருப்பதால், பணியில் இருக்கும் பலர் விரும்பி வாங்குறாங்க. இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமாக சரவணா ஸ்டோர்ஸ், நீல்கிரீஸ் (சில கடைகள்), அமேஸான் மற்றும் சில ஆன்லைன் போர்ட்டல்களில் விற்பனை செய்றோம். இதுவே எங்களுக்குக் கிடைச்ச பெரிய வெற்றி! நாங்க பிளாஸ்டிக் பைகளைத் தவிர்த்து, ‘மெட்டாலிக் ஃபாயில்’&ல தான் பேக் பண்றோம். வேறு எந்த பிராண்டுமே இது போல பேக்கிங்கில் வருவதில்லை. பொடிகள் தயாரிப்பில் எதிலுமே கை படறதே கிடையாது. ‘ரோஸ்ட்டர்’ல தான் வறுக்கிறோம்.. பிளெண்டரில்தான் கலக்குறோம். அதனாலதான் பிரிசர்வேடிவ் சேர்க்காமலேயே, கெட்டுப்போகாமல் இருக்கு..

ஆனா பாக்கெட் மேல் குறிப்பிட்டிருக்கும் காலம் வரைதான் வச்சிருக்க முடியும். அதற்கு மேல் ‘ஷெல்ஃப் லைஃப்’ கிடையாது. பிரிசர்வேடிவ் சேர்க்காததால், குறிப்பிட்ட நாளுக்கு மெல் வச்சிருந்தா காலாவதி ஆயிடும். எங்க தொழிலின் பெரிய சவாலே அதுதான். சீக்கிரம் கெட்டுப் போகக் கூடிய பொருள் என்பதால், அதற்குள் (அதிகபட்சம் 8 மாதங்கள்) விற்றாக வேண்டும். அப்புறம் அடிக்கடி ஏறி இறங்கும் மூலப் பொருட்களின் விலை.. நாம் ஆதுக்கேத்த மாதிரி விலையை கூட்டவோ குறைக்கவோ முடியாது. இன்னொரு சவால், மலிந்து கிடக்கும் மசாலா பொடிகள்.. அவை எல்லாத்துடனும் போட்டி போட்டி ஜெயிக்கணும்னா, சுவை, மணம், தரம் எல்லாம் இருந்தால்தான் முடியும். அதனால், அந்த மூன்று விஷயங்களில் ரொம்ப கவனமாகவும் உறுதியாகவும் இருக்கிறோம். எங்க தயாரிப்புகளை ஏற்றுமதி செய்வதற்கும் சான்றிதழ் வாங்கிட்டோம். அடுத்த கட்டமா ஏற்றுமதி செய்யப்போறோம். எங்கள் தயாரிப்புகளை ஃப்ரான்ச்சைஸ் எடுத்து விற்பனை செய்ய முன்வரும் பெண்களை வரவேற்கிறோம்.   

இதுதான் ஆரம்பம். இப்போதான் தொழில் சூடு பிடிக்க ஆரம்பிச்சிருக்கு. 

இன்னும் எங்க அடிகளை நிதானமாகவும் அழுத்தமாகவும் எடுத்து வைத்து ஏறணும்.. அடி மேல் அடி வைத்துத்தான் இந்த ‘ஸ்டார்ட் அப்’ பிசினஸின் சிகரத்தைத் தொடணும்… தொடுவோம் என்கிற நம்பிக்கை நிறையவே இருக்கு!’’ என்று முடித்தபோது, ஜெயமீனாட்சியின் குரலில் தெறித்த உறுதி, அவர்களுடைய வெற்றிக்கான முதல் படி!  

‘சதர்ன் ஸ்பைசஸ்’ பொடிகள் உலகை வலம் வரும் நாள் விரைவில் வரும்! 

southernspices100@gmail.com 

+91 7200019299

+91 9025195770

Spread the lovely business news
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •