உலக அளவில் நொறுக்குத்தீனிகள் மார்க்கெட் கிட்டத்தட்ட 170 பில்லியன் டாலராக (ரூபாய் 12,75,000 கோடி) இருக்கிறது. ஆண்டுதோறும் இந்தத் துறை 7% வளர்ச்சி அடைவது குறிப்பிடத்தக்கது. கொரோனா காலத்திலும் அதிகம் பாதிக்காத துறைகளில் இதுவும் ஒன்று. 

நமது அம்மா,பாட்டிகள் எவ்வளவுதான் அருமையாக சமைத்தாலும், நொறுக்குத்தீனிகள் செய்தாலும் கடையில் வாங்கி சாப்பிடுவதில்தான் பலருக்கு திருப்தி. கடையில் விற்கும் நொறுக்குத்தீனிகள் எந்த அளவுக்கு தரமாக செய்யப்படுகின்றன என்பதில் பலருக்கு ஒரு கவலை இருக்கும். தரமான நொறுக்குத்தீனிகளை தயாரிக்க, இப்போது பல ஸ்டார்ட் அப் கம்பெனிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவர்கள் செய்யும் நொறுக்குத்தீனிகள் சுவையாக இருப்பதுடன், உடல் ஆரோக்கியம் கெடாத வகையில், சத்தான, தரமான மூலப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இந்த நொறுக்கு தீனிகளை கலோரிகள் குறைவாகவும், ஊட்ட சத்து நிறைந்ததாகவும் தயாரிக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவற்றில் சில ஸ்டார்ட் அப் கம்பெனிகளை பார்ப்போம்.

ஸ்நாக் எக்ஸ்பர்ட்ஸ் (Snack Experts)

ஸ்நாக் எக்ஸ்பர்ட்ஸ் என்ற கம்பெனி கிட்டத்தட்ட 40 வகையான நொறுக்குத் தீனிகளை ராகி, மில்லட், லவங்கப்பட்டை, ஓட்ஸ், நட்ஸ் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கின்றன. இவர்கள் தயாரிக்கும் நொறுக்குத் தீனிகளில் எந்தவிதமான பிரிசர்வேட்டிஸும் சேர்க்கப்படுவதில்லை என்பது முக்கியமானது. இதுவரை 500 டன்களுக்கு மேலான நொறுக்குத்தீனிகளை செய்து விற்று உள்ளனர் என்கிறது இவர்களது இணையதளம். இதை வைத்தே  இவர்களின் தீனிகள் எவ்வளவு சுவையாக இருக்கும் என்பதை கணிக்க முடிகிறது. ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்து வருகிறார்கள்.

இவர்களின் இணையதளம் www.snackexperts.com

பேப் பாக்ஸ் (Fab Box) 

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் பார்த்துக் கொண்டிருந்த நல்ல வேலையை உதறிவிட்டு ஊட்டச்சத்து நிறைந்த நொறுக்கு தீனி வகைகளை தயாரிக்க ஆரம்பித்தார் நிறுவனர் தேவாங் ஷா. இவர் இந்தியா வந்தவுடன் செய்த முதல் வேலை சிறந்த ஊட்டச் சத்தாளர்கள், டயட்டீஷியன்கள், நல்ல சமையல்காரர்கள் (ஷெஃப்) ஆகியோரை சேர்த்து கொண்டதுதான். அவர்களை வைத்து நொறுக்குத்தீனி கம்பெனியை ஆரம்பித்தார்.. இவர் இப்போது 52 வகை நொறுக்குத் தீனிகள் தயாரித்து வருகிறார். இவருடைய கம்பெனி தயாரிக்கும் நொறுக்குத் தீனிகளில் நட்ஸ், ஹெல்தி பார் ஆகியவை பிரபலமானவை. இந்த கம்பெனியில் நீங்கள் வாங்கும் நொறுக்குத் தீனியில்,உங்கள் விருப்பத்துக்கெற்ப ஹெல்த் ஆப்ஷனையும், டேஸ்ட்டையும் மாற்றிக் கொள்ளலாம். இவர்களுடைய இணையதளம் www.fabbox.in.

தி கிரீன் ஸ்நாக் கம்பெனி (The Green Snack Company)

பஞ்சாபை சேர்ந்த ஜஸ்மின் கவூர் இந்த கம்பெனியை ஆரம்பித்தார். கலோரிகள் அதிகமாக இருக்கும் உணவுகளையே சாப்பிட்டு பழக்கப்பட்ட பஞ்சாபியான அவருக்கு உலக அளவில் பலராலும் விரும்பி சாப்பிடப்படும் ஹெல்தி ஸ்னாக்ஸ் வகைகளை இந்தியாவிலும் தயாரித்தால் என்ன என்ற ஆசையால் உருவானதுதான் இந்த ஸ்டார்ட் அப் கம்பெனி. அமெரிக்காவில் அதிகளவில் சாப்பிடப்படும் காலே சிப்ஸ் தயாரிக்க ஆரம்பித்தார். இது அதிகளவு புரோட்டின், கால்சியம், அயன், போலிக் ஆசிட் ஆகியவை கொண்டது. அதேசமயம் குறைந்த கலோரிகள் கொண்டது. மேலும் கொய்னா, அமராந்த், ராகி, சோயா ஆகியவவற்றிலிருந்தும் நொறுக்கு தீனிகள் தயாரித்து வருகிறார். 

இவர்களுடைய இணையதளம் www.thegreensnackcom.com

இவர்களுடைய இணையதளங்களுக்கு சென்று பாருங்கள். உங்களுக்கு பல ஐடியாக்கள் கிடைக்கும். இதுபோன்ற ஊட்டச்சத்து நிறைந்த பலவகை நொறுக்குத் தீனிகளை நீங்கள் உங்கள் வீட்டில் செய்து கொண்டிருக்கலாம், அவற்றையும் வியாபார ரீதியாக தயாரித்து விற்பனை செய்ய முயற்சிக்கலாம். 

Spread the lovely business news