சுருக்கு பை என்றாலே நமது பாட்டிகளின் நினைவுதான் நமக்கு வரும். அந்த அளவுக்கு பழங்காலம் தொட்டே  பாட்டிகளை  தொட்டு உறவாடும் சுருக்கு பைகள். வெற்றிலை பாக்கு, மூக்கு பொடி, பணம் போன்றவற்றை வைத்து பாட்டிகள் இடுப்பில் சொறுகி வைத்திருப்பார்கள். அத்தகைய சுருக்கு பைகளை கண்கவர் பொருளாக மாற்றி கல்லூரி பெண்களையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார்கள் “சுருக்கு பை சகோதரிகள்” என கோவை பெண்களால் அன்பாக அழைக்கப்படும் சகோதரிகள் திருமதி. சுவாதி லக்ஷ்மி, குமாரி. சுருதி.

2014 ல் கோவையில் “தி சுருக்கு பை ஷாப்” நிறுவனம் சுவாதி லக்ஷ்மியால் தொடங்கப்பட்டது. காலப்போக்கில் வடிவமைப்பில் பல மாற்றங்கள், புது வடிவமைப்புகள், வண்ணங்கள் கொண்ட பலவிதமான சுருக்கு பைகள் கோவையில் மட்டுமல்லாமல் தமிழகம் முழுதும் வலம் வருகின்றன. சமீப காலமாக திருமணம் போன்ற  வைபவங்களில் இந்த சுருக்கு பைகள் தாம்பூல பைகளாகவும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்கள்.  

உங்கள் பட்ஜெட்டுக்கு தக்கவாறு பலவிதமான பிரத்யேக வடிவமைப்புகள் கொண்ட சுருக்கு பைகளை இவர்கள்  மலிவு விலையில்  வழங்குகிறார்கள். வெளிநாட்டு சுற்றுல்லா பயணிகள் அதிகமாக விரும்பி வாங்குகிறார்கள்.  

பட்டு, பருத்தி, சணல் போன்றவற்றை கொண்டு இவை தயாரிக்கப்படுவதால், பாலித்தின் விரும்பாதவர்கள் இந்த சுருக்கு பைகளை பெரிதும் விரும்புகிறார்கள்.  

அடிப்படையில் சுவாதி எலெக்ட்ரானிக் இஞ்சினீயர்.  தன் குடும்பத்தாரின் உடைகளை ஆல்டர் செய்ய தையல் மெஷின் வாங்க எண்ணிய சுவாதிக்கு,  அவரது கணவரால் அன்பளிப்பாக கிடைத்தது. மெஷினில் ஊசி நூல் கோர்க்கக் கூட தெரியாமல் இருந்தவர் யூடியூப் (Youtube) மூலம்  கற்று பின்னர் படிப்படியாக முன்னேறிய சமயத்தில்,  பலரும் விரும்பி கேட்டுக்கொண்டதால் இந்த சுருக்குப்பை உண்டானது.   ஃபேஸ்புக் மூலம் மற்றவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்ல, கொஞ்சம் கொஞ்சமாக விளம்பரம் ஆகி இன்று கோவையில் சுருக்கு பை தொழிலில் முதல் இடத்தையும் முக்கியத்துவத்தையும் பெற்றுள்ளது. 

“மற்றவர்களை விட நீங்கள் எந்த அளவில் வித்தியாசப் படுத்தி காட்டுகிறீர்கள்” என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில், “இந்த தொழிலில் ஒருவருக்கொருவர் மாடல்களை காப்பி செய்து தயார் செய்வார்கள்.  நாங்கள் அப்படியில்லை. எங்களது கிரியேட்டிவ் அனுபவத்தை வைத்து நாங்களே புது புது டிசைன்கள் செய்து அதில் எங்களுக்கான தனி முத்திரையை பதித்து வருகிறோம்” என்றவர் மேலும்,  “சாதாரணமாக இப்போது சந்தையில் மற்றவர்களின் பொருட்களை வாங்கி தங்களின் பிராண்ட் பெயரில் விற்பனை செய்வது வழக்கம்  உள்ளது. ஆனால்  நாங்கள் அப்படி செய்வதே இல்லை எங்கள் கைகளால் உருவாக்கப்பட்டதை  மட்டுமே விற்பனை  செய்கிறோம் .  

எங்களின் வேலைத் திறனை பாராட்டி மகிழ்ந்தவர்கள் இப்போது அவர்களின் விசேஷங்களில் தரும் தாம்பூலம்,  பரிசு இவற்றில் எங்களது படைப்புகளையும் சேர்த்துக்கொள்ள ஆரம்பித்துள்ளது மிகவும்  மகிழ்ச்சியாக உள்ளது” என்றார். 

“எங்கள் கைகளில் இருந்து வாடிக்கையாளர்களின் கைக்கு எங்கள் சுருக்கு பைகள் நேரடியாக கைமாற வேண்டும் என்பதில் கண்டிப்புடன் இருக்கிறோம்.  காரணம் சில்லறைக் கடைகள் மூலம் விற்பனை செய்யும்போது வாடிக்கையாளர்கள் அதிக விலை தர வேண்டி வரும்.  எனவே கடைகளுக்கு நாங்கள் விற்பனை செய்வதில்லை என்பதில் கண்டிப்புடன் இருக்கிறோம். எனவேதான் எங்கள் தாயாரிப்புகள்  “எகனாமிக் பிராண்ட்”  என மற்றவர்களால் பாராட்டப்படுகிறது” என்றார். 

தனது வீட்டுக்குள் தங்களின் உடைகள் ஆல்டர் செய்யத்  தொடங்கி, இன்று 15 பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். வருங்காலத்தில் பேக்கேஜிங் தொழிலில் ஈடுபட சுவாதி எண்ணியுள்ளார். 

“உங்கள் தொழிலில் உங்கள் தங்கையின் பங்கு எந்த அளவுக்கு உள்ளது” என கேட்டபோது, “தங்கை சுருதி… பெயருக்கேற்றவாறு எங்கள்  தொழிலுக்கு சுருதி சேர்ப்பவர். நான் உதிரிப் பூக்களை சேகரிக்கிறேன் என்றால் அதை தொடுத்து மலர் மாலையாக மாற்றுவது என் தங்கை சுருதிதான்” என தனது பாசமலரை பாராட்டினார். 

“நானிருக்க பயமேன்” என எப்போதும் தோள் கொடுத்து துணை நிற்கும் தன் துணைவரையும் சுவாதி வெகுவாக பாராட்டினார்.  

“சுருக்கு பை ராசியான பை” என பாராட்டி விடை பெற்றேன். 

தொடர்புக்கு : 96779 42130 / 99409 91944

Spread the lovely business news