மாறுபட்ட பின்னணியை கொண்ட ஐந்து  வெற்றி பெற்ற குஜராத்தி தொழிலதிபர்களைப் பற்றிய  புத்தகம்தான் இது. எழுத்தாளர் ஷோபா பாண்ட்ரே முதலில் மராத்தியில் எழுதி பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது . குஜ்ஜு என்றழைக்கப்படும் குஜராத்திய வணிகர்களின் கூர்மையான புத்திசாலித்தனத்தை கொண்டாடும் இந்த புத்தகம் அனைத்து இந்தியர்களுக்கும் ஒரு உத்வேகம் அளிக்கக் கூடியதாகும். இந்தியில் “தந்தா” என்றால் வணிகம், வியாபாரம் என்று பொருள். 

இப்புத்தகத்தில் குஜராத்திகளின் வணிக எண்ணம், விடாமுயற்சி, அவர்களின் வாழ்க்கை முறை, வியாபாரத்தில் அவர்களின்  குடும்பத்தினரின் பங்கு,   மற்றும் , எதிர்கொண்ட சவால்கள்,  சந்தித்த தோல்விகள்,கஷ்டங்கள் போன்ற பலவற்றை விளக்கமாக காணலாம்.

பிரபல வைர வியாபாரி பீம்ஜி பாய்  பட்டேல், அமெரிக்காவில் ஒரு நகரத்திற்கு மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட மோட்டாலியர் தல்பத் பாய்  பட்டேல், பற்பசைகளை பேக்கிங் செய்ய உபயோகப்படுத்தும் மடக்கக் கூடிய அலுமினிய டியூப்களை (COLLAPSIBLE ALUMINIUM TUBE) தயாரித்த மோகன் பாய் பட்டேல், அமெரிக்காவில் நூற்றுக்கணக்கான ஓட்டல்களை நிறுவியிருக்கும்  ஹாசு மற்றும் ஹெர்ஷா  ஷா, லட்சக்கணக்கான டாலருக்கு ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை விற்ற ஜெய்தேவ் பட்டேல்  ஆகிய ஐவரும் தான் இந்த புத்தகத்தின் கதாநாயகர்கள். 

இந்தியாவின் பெரிய வைர வியாபாரியாக திகழ்ந்த பீம்ஜி பாய்  பட்டேல் இங்கிலாந்து செல்ல விசாவுக்கு விண்ணப்பித்த போது ஆங்கிலம் தெரியவில்லை என அவரது விண்ணப்பத்தை நிராகரித்தனர்.இந்தி தெரியாமல் ஒரு விசா அதிகாரி இந்தியாவில் பணி புரிய முடிந்தால் ஆங்கிலம் தெரியாமல் என்னால் இங்கிலாந்தில் வியாபாரம் செய்ய முடியும் என சுட்டிக்காட்டி விசாவை பெற்றார்.

இரண்டாவதாக வெளி நாட்டு கம்பெனிகளின் அச்சுறுத்தல்களுக்கு பயந்து சோர்ந்துவிடாமல் விடாப்பிடியான மன உறுதியுடன் மடக்கக்கூடிய பற்பசை அலுமினிய டியூப்களை உற்பத்தி செய்யும் மோகன் பாய் பட்டேல், பட்டேல் எக்ஸ்ட்ருஷன் கம்பெனியை நிறுவினார். 

மூன்றாவதாக அமெரிக்காவில் படித்த தல்பத் பாய்  பட்டேல் சிறிய அளவில் ஆரம்பித்த மோட்டல் தொழில் படிப்படியாக வளர்ந்து பின்னர் அவரே மேயரான கதை.

நான்காவதாக ஜெயதேவ் ஒரு ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கி கெமிஸ்ட் ஆகி, பின்னர் விடா முயற்சியால்  நியூயார்க் ஆயுள் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் ஏஜெண்டுகளில் சிறந்த முகவர் என்ற அந்தஸ்தைப் பெற்றார்.  அதற்க்கு அவரது மனைவி மிகப்பெரிய பக்கபலமாக இருந்தார்.  

ஐந்தாவதாக கூர்மையான புத்தி, திடமான நம்பிக்கை ,கடின உழைப்பு இவற்றை  மட்டுமே மூலதனமாகக் கொண்டு பதினோரு அறைகளைக் கொண்ட சிறிய மோட்டலுடன் தொழில் தொடங்கி இன்று சுமார் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறைகளைக் கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட மோட்டல்களின் உரிமையாளர்கள் . ஹாசு மற்றும் ஹெர்ஷா  ஷா  என்ற இரட்டையர்களை பற்றியது. 

இந்தப் புத்தகத்தில் இருந்து ஒவ்வொரு தொழில் முனைவோரும் எடுத்துக் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள், மனஉறுதி,  விடாமுயற்சி, கடின உழைப்பு, தைரியம் மற்றும் வணிக உணர்வு. 

1. ALWAYS ASK –கேளுங்க,கேளுங்க- கேட்டுக்கிட்டே இருங்க – பொதுவாக நாம் எல்லோரும் நிறைய சிந்திக்கிறோம். ஆனால் எங்கு கேட்க வேண்டுமோ அங்கு கேட்காமல் விட்டு விடுகின்றோம். அலுமினியம் டியூப் தயாரிப்பதில் எந்தவிதமான அனுபவம் இல்லாத மோகன் பாய் அந்த ஆலையை இந்தியாவில் நிறுவுவதற்கு ஒரு ஜெர்மன் நிறுவனத்தின் உதவியை நாடிய போது அவர்கள் அதற்கு ஒத்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல் தேவையான தொழில்நுட்பத்தையும் பயிற்சியையும் வழங்கினார்கள். ஆகவே கேட்டால்தான் கிடைக்கும்.

2. VALUES ARE IMPORTANT – வெற்றிக்கு வழிகாட்டும் கொள்கைகளும் மதிப்புகளும் மிக முக்கியம்.  டாடா நிறுவனத்தில் பணிபுரிந்த மோகன் பாய் டாடாவிலிருந்து விலகிய பின்னர் தனது வியாபாரத்தில் டாடா நிறுவனத்தின் முக்கிய கொள்கைகளையே கையாண்டார். 

3. KEYS TO SUCCESS – வெற்றிக்குத் திறவுகோல் விடாமுயற்சி. இடையில் ஏற்படும்  தடங்கல்களுக்கு வருந்தி சோர்ந்து போகாமல் வலுவாக இருக்க வேண்டும்.

4. NO WORK IS A SMALL WORK -எந்த வேலையும் கேவலம் இல்லை.  ஒரு தொழில்முனைவோராக ஆக விரும்புபவர் கர்வத்தை விலக்கிவிட்டு எந்த வேலையானாலும் செய்ய தயாராக இருக்க வேண்டும்.

5. NO TOMORROW- ஒரு தொழில் முனைவரின் அகராதியிலிருந்து தவிர்க்கப்பட வேண்டிய சொற்கள்-TOMORROW – நாளை பார்த்துக் கொள்ளலாம், IMPOSSIBLE – இது நடக்காது என்பவைதான்.  உடனடியாக முடிக்கக்கூடிய பணிகளை ஒருபோதும் ஒத்தி வைக்கக் கூடாது. ஒத்தி வைப்பதை தவிர்ப்பது வெற்றியை உறுதி செய்வதற்கான சிறந்த வழியாகும். 

6. NOW WHAT – இப்ப என்ன ஆச்சு? இந்த கேள்வியை தனக்குத் தானே ஹாசு  கேட்டுக்கொண்டார். இருப்பதை வைத்துக் கொண்டு திருப்தி அடையாமல் மேலும் மேலும் முயற்சி செய்வதுதான் .அதனால்தான் அவர்களால் அமெரிக்காவில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓட்டல்களை நிறுவ முடிந்தது.

7. HARD WORK- கடின உழைப்பிற்கு ஈடு இணை ஏதுமில்லை. இந்த ஐந்து பேருமே பெரும்பாலான சமயங்களில் நாளொன்றுக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே தூங்கியிருக்கிறார்கள். அவர்களிடம் இருந்ததெல்லாம் வெற்றியடைய வேண்டும் என்ற வெறி தான்.

Spread the lovely business news
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •