பிரதமர் மோடி தனது சமீபத்திய “மான் கி பாத்” வானொலி பேச்சில் உள்ளூர் பொம்மைகள் உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.  இப்போதைய நிலவரப்படி, இந்திய பொம்மைத் தொழிலில் சீனா 75 சதவீதம் ஆதிக்கம் செலுத்துகிறது. எல்லா  ஸ்டார்ட் அப்களையும்  ஒன்றிணைத்து ஒட்டுமொத்த உலகிற்கும் பொம்மைகளை உள்நாட்டிலேயே தயாரிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

குழந்தைகளின் கற்பனைத் திறன்களை வளர்க்க பொம்மைகள் உதவுகின்றன. பொம்மைகள் குழந்தைகளின் வாழ்வில் ஒரு அங்கம். ஒரு குழந்தையின் எதிர்காலத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது. எதிர்கால  கல்வி, கனவுகள் சார்ந்த பொம்மைகளை குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.  அந்த பொம்மைகள் குழந்தைகளை  புத்திசாலித்தனமாக மாற்ற உதவும்.

உலக பொம்மை சந்தை 90 பில்லியன் டாலர் (சுமார் 6,75,000 கோடிகள்) என மதிப்பிடப்பட்டுள்ளது, இதில் இந்தியாவின் பங்கு 0.5% மட்டுமே. 

இந்திய பொம்மைகள் என எடுத்துக்கொண்டால் மர பொம்மைகளுக்கு நாம் காலங்காலமாக அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்.  ஆந்திராவில் உள்ள கொண்டபள்ளி என்ற ஊரில் பரம்பரையாக மர பொம்மைகளை குழந்தைகளுக்காக  தயாரித்து வர்ணம் தீட்டுவதையே தொழிலாக கொண்டுள்ளனர். 

வாரணாசியில் மரத்தில் செய்யப்பட்ட பொம்மைகள் மிகவும் பிரபலம். இங்கு  பறவைகள், விலங்குகள், சமூகம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து பொம்மைகள் செய்யப்படுகின்றன. 

அஸ்ஸாம் மாநிலத்தில் மூங்கிலால் செய்யப்படும் பொம்மைகள், மேற்கு வங்கத்தில் டெரகோட்டா பொம்மைகள், ராஜஸ்தான் மாநிலத்தில் சுடப்படாத களிமண் பொம்மைகள் மிகவும் பிரபலம்.

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் உலகப்  புகழ் பெற்றவை. ஒரு காலத்தில் இவை இல்லாத வீடே இல்லை எனக் கூறலாம். இந்த பொம்மைகள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர் காலத்தில்  உருவாக்கப்பட்டவை  என கூறப்படுகிறது. இவை மரவள்ளி கிழங்கு மாவு, பிளாஸ்டர் ஆப் பாரீஸ் ஆகியவைகளை கொண்டு தயாரிக்கப்படுகின்றன. இது தவிர தென்னிந்தியா குறிப்பாக தமிழகம் மரப்பாச்சி பொம்மைகளுக்கு மிகவும் புகழ் பெற்றது. ஒரு காலத்தில் தலையாட்டி மற்றும் மரப்பாச்சி பொம்மைகளை வைத்து விளையாடாத தமிழக குழந்தைகளே இல்லை எனக் கூறலாம்.

கர்நாடகாவில் உள்ள சென்னபட்டனா என்ற ஊர் மரபொம்மைகளுக்கு உலகப்புகழ் பெற்றது. இன்னும் சொல்லப்போனால் திப்பு சுல்தான் அவரது ஆட்சிக் காலத்தில் மர பொம்மைகள் செய்யும் கலைஞர்களை ஆதரித்தார். இதனால் சென்னப்பட்னாவில் மர பொம்மை செய்யும் கலைஞர்கள் அதிகம் இருந்தனர் என்று கூறப்படுகிறது. பின்னர் அழிந்து வந்த இந்த கலைக்கு, 1950ம் வருட வாக்கில் அரசாங்கம் புத்துயிர் கொடுக்க முயற்சிகள் எடுத்தது. எனினும் அது வெற்றிகரமாக செயல்படவில்லை. இப்போது கார்த்திக் வைத்தியநாதன் என்ற தமிழர்,  தன்னுடைய முயற்சியால் சென்னப்பட்டனா கலைஞர்களை ஒன்றினைத்து அங்கு செய்யப்படும் உயிரோட்டமான பொம்மைகளை ஒரு ஸ்டார்ட் அப் கம்பெனி மூலமாக விற்கத் தொடங்கியிருக்கிறார். நவராத்திரி கொலு நேரத்தில், தீபாவளி சமயத்தில் பரிசு கொடுக்கவும் இந்த பொம்மைகளை அதிகம் வாங்குகின்றனர் என்று கூறுகிறார் கார்த்திக். குழந்தைகள் விளையாடுவதற்காக வாங்குவதை விட வீட்டின் ஷொகேசில் வைப்பதற்காகவே அதிகம் வாங்குகின்றனர்.

இவர்களின் இணையதளம் www.varnamstore.in  

Spread the lovely business news