சுவக்கி, ஜோமோட்டோ, உபர் ஈட்ஸ்  என்று பல கம்பெனிகள்  வந்ததால் வீட்டில் சமைப்பது குறைந்துவிட்டது.  சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் உணவு வகைகளுக்கு இந்த கம்பெனிகளை நாடுவது சர்வ சாதாரணமாகிவிட்டது. 

பல உணவகங்கள் மேலே உள்ள கம்பெனிகளின் செயலிகளில் தங்களை பதிவு செய்து கொண்டு தங்களது விற்பனைகளை கூட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் தோன்றிய ஒரு புதிய முயற்சிதான் “கிளவுட் கிச்சன்”  (Cloud Kitchen). இதில் நீங்கள் போய் உட்கார்ந்து சாப்பிட முடியாது, ஆர்டர் மட்டுமே பண்ண முடியும். 

இந்த வகை கிச்சன்கள்  ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கமே ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து  இருக்கும் இடத்தில் வாங்கி சாப்பிட வேண்டும் என்ற எண்ணம்தான்.  இதனால் நடைமுறை செலவுகள்  குறைவதால்  உணவுகளின் விலையும்  குறைகிறது . இதனால் கிளவுட் கிச்சன் உணவகங்கள் தற்போது பெருகிவருகிறது.

இம்முறையிலான கிளவுட் கிச்சன் அமைக்க குறைந்த அளவிலான இடம் (Physical Space) இருந்தால் போதுமானது. நகரங்களின் முக்கிய இடங்களில் வாடகை அல்லது இடத்தின் விலை மிக அதிகமாக இருக்கும். அந்த முக்கிய இடங்களில், முகப்பு தெரியாத இடங்கள் வாடகை குறைவாக இருக்கும். விலை குறைவாக இருக்கும். அப்படியான இடங்களை தேர்வு செய்யும் போது சுமார் 2000 சதுர அடி இடம் 1000 சதுர அடி வாடகையில் கிடைக்கும். 1000 சதுர அடிக்கான வாடகை சேமிக்கப்படுகிறது.

இந்த கிளவுட் கிச்சன்கள் மூலம் பல ப்ராண்டுகளின் (Brand) உணவு வகைகளை ஒரே இடத்தில் தயாரிக்கலாம்.  Rebel Foods என்ற நிறுவனம் இந்தியாவின் ஒரு குறிப்பிடத்தக்க இணைய உணவகம்    (Internet Restaurant). இந்த  நிறுவனம் Faasos, Behrouz Briyani, Lunch Box, The Oran Story, Mandarin Oak, SweetTruth, The 500 Calorie Project, Firangi Bake, The Good Bowl, Navarasam, Slay Everyday என்று மொத்தம் 11 ப்ராண்டுகளில் கிளவுட் கிச்சன் மூலமாக வியாபாரம் செய்து வருகிறது. 

எந்த  நகரப் பகுதிகளில் எந்த  உணவு அதிகம் விற்பனையாகுமோ அந்த வகைகளை, அந்த பகுதியிலேயே, சுமார் 2500 சதுரடி இடத்தில் 6 – 8 ப்ராண்டுகளில்  தயாரித்து விற்பனை செய்கிறார்கள். 

உணவின் தரம் மற்றும் சுவை அனைத்து இடங்களிலும் ( நாடு முழுவதிலும் ) ஒரே மாதிரியாக இருக்குமாறு மைய சமையலறையில் ( Centralised Kitchen ) மூலப் பொருட்களை தயார் செய்து நாடு முழுவதும் உள்ள கிளவுட் கிச்சன்களுக்கு கோல்ட் செயின் சப்ளை (cold chain supply) மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. அதனால் நாடு முழுவதும் ஒரே தரம் மற்றும் சுவை தர இயலுகிறது.

உணவகத் தொழிலுக்கு ( Restaurant Industry ) ஒரு முக்கியமான தேவை நல்ல சமையல் கலைஞர் (Chefs). கிளவுட் கிச்சனுக்கு உணவு தொழில் நுட்பம் அறிந்த வல்லுனர்கள் தேவையும் அதிகரித்து விட்டது. ஆனால் உணவு பரிமாறுவோர், சாப்பாடு மேசைகள் சுத்தம் செய்வோர்களின் தேவை குறைந்து விட்டது.

தற்போதைய கிளவுட் கிச்சன்களில் நல்ல தொழில் நுட்ப தளங்களின் (Technology Platform) மூலம்  தொலைவில் இருந்தபடியே சரக்கு இருப்பு (Inventory), உணவு தயாரித்தல், பதப்படுத்துதல் (Food Processing) மற்றும் பாக்கிங் போன்ற அனைத்தையும் கண்காணிக்க முடிகிறது. இன்றைய நிலையில் கிளவுட் கிச்சன்களில் முதலீடு அதிக அளவு தேவைப்பட்ட போதிலும் Swiggy,  Zomato, Uber Eats, Freshmenn, Rebel Foods என்று பல நிறுவனங்கள் கிளவுட் கிச்சன்களை நிறுவி உள்ளனர்.

இந்தியாவில் உணவு வினியோக கலாச்சாரம் கடந்த 5 ஆண்டுகளில் பெருக்கெடுத்து விட்டது. Swiggy, Zonato போன்ற நிறுவனங்கள் சுமார் 500க்கும் மேற்பட்ட  நகரங்களில் உள்ளனர். உணவுப் பிரியர்கள் இருக்கும் வரை கிளவுட் கிச்சன்கள் காலூன்றி நிற்கும்.மேலும் விபரங்கள் அறிய  www.cloudkitchens.com  சென்று பாருங்கள்.

Spread the lovely business news