கட்டுரையாளர் : சேதுராமன் சாத்தப்பன் 

மருத்துவத்தின் தந்தை, ஹிப்போகிரட்டீஸ், கழுதைப் பாலின் நன்மைகளைப் பற்றி முதலில் எழுதியவர். புராதன எகிப்தின் ராணியான கிளியோபாட்ரா தனது தோலின் அழகையும், இளமையையும் பாதுகாக்க 700 கழுதைகளின் பாலில் குளித்ததாக வரலாறு உண்டு. நெப்போலியனின் சகோதரி, பவுலின் போனபார்ட்டும் கழுதைப் பாலை தோல் பராமரிப்புக்காகப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. கழுதைப் பால் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதோடு ஆஸ்துமா, எக்சிமா, சொரியாசிஸ் உள்ளவர்களுக்கு உதவும் என்று கருதப்படுகிறது.

கழுதைப்பால் நோய் எதிர்ப்பு ஆற்றல் கொண்டது,          மருத்துவ குணம் நிறைந்தது என்ற நம்பிக்கை                 நிலவுகிறது.அதாவது குழந்தைகளை அதிகம் பாதிக்கும்  வயிறு மந்தம், சூடு, காய்ச்சல், சளி,இருமல், ஆஸ்துமா போன்ற நோய்கள் கழுதைப் பாலால் குணமாகும் என     நம்பப்படுகிறது. இதனால் சிலர் கழுதைப்பாலை வாங்கி குழந்தைகளுக்கு கொடுக்கின்றனர். ஒரு சங்கு கழுதைப்பால் ரூ.50 வரை விற்கப்படுகிறது. ஒரு     கழுதையிடமிருந்து ஒரு வேளைக்கு 250 மில்லி பால்       கறக்க இயலும்.

இதில் லாக்டோஸ், வைட்டமின் ஏ, பி -1, பி -2, பி-6, வைட்டமின் டி மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை உள்ளன. கழுதைப் பாலில் இருந்து தயாரிக்கப்படும் சோப், கிரீம், மற்றும் மாய்ஸ்சரைசர்க்கு இன்று இந்தியாவில் நல்ல சந்தை உள்ளது. பல பெண்கள் கழுதைப் பாலில் இருந்து தயாரிக்கப்படும் இந்த தயாரிப்புகளைப் பயன்படுத்துகின்றனர்

ஆர்கானிக்கோ…

டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சயின்ஸில் எம்.ஏ  படித்த பின், டெல்லியைச் சேர்ந்த பூஜா கெளல் கழுதைப் பாலில்       இருந்து தோல் பராமரிப்புப் பொருட்களை    தயாரித்து விற்கும் “ஆர்கானிக்கோ” (https://organiko.in) என்ற பெயரில் ஒரு ஸ்டார்ட் அப் கம்பெனி தொடங்கியிருக்கிறார்.

முறையாக வளர்க்கும் கழுதைகள் மூலம் கிடைக்கும் பால் தற்போது லிட்டருக்கு ரூ. 2,000 மும் அதற்கு அதிகமும் இருக்கிறது. கழுதை பாலால் செய்யப்பட்ட சோப், மாய்ஸ்ச்சரைசர்,  கிரீம்  ஆகியவை அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட்      போன்ற ஏராளமான ஆன்லைன் ஸ்டோர்களில் காணப்படுகின்றன,     ஆனால் நீங்கள் அதன் விலையை பாரத்தால் ஆச்சரியப்படுவீர்கள்.100 கிராம் சோப்புக்கு   500 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

கழுதை பாலின் விலை, லிட்டருக்கு 2000  ரூபாய்க்கு   மேல்      இருக்கும்போது, கழுதைகளின் எண்ணிக்கை கிட்டதட்ட  வெறும் ஒரு லட்சமாக குறைந்துள்ளது. 2012 ஆண்டுடன் ஒப்பிடும்போது கழுதைகளின் 

எண்ணிக்கை 61% குறைந்துள்ளது. 2012 ஆம் ஆண்டில் விலங்குகளின் தொகை                    கணக்கெடுப்பில்  கழுதைகளின் எண்ணிக்கை 3.2           லட்சமாக இருந்தது, இது 2019ஆம் ஆண்டின்                 கணக்கீட்டில் 1.2 லட்சமாக குறைந்து விட்டது. தற்போது வளர்ப்பு கழுதை விலை சுமார் ரூபாய் 80,000 முதல் 100,000 வரை இருக்கிறது.

கேரளாவிலும்….

இது போல பிரபலமான ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அபி தன்னுடைய வேலையை உதறி விட்டு கழுதை பண்ணை வைக்க கிளம்பினார். பின்னர் பல வருடங்கள் ஆராய்ச்சி செய்து கேரளாவில் 2 ஏக்கரில் 36 கழுதைகளுடன் பண்ணையை துவங்கினார். தற்போது இவர் கழுதைப் பாலில் இருந்து தயாரிக்கும் சோப், கிரீம்கள் ஆன்லைனில் மிகவும் பிரபலமாக இருக்கிறது. 44 கிராம் எடையுள்ள கிரீம் சுமார் 5000 ரூபாய் முதல் 7000 ரூபாய் வரை விற்கப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது. இவரின் ஸ்டார்ட் அப் கம்பெனியின் இணையதள முகவரி www.dolphiniba.com

இதிலிருந்து என்ன தெரிகிறது….நீ கழுதை மேய்க்க தான் லாயக்கு என்று யாரும் இனி கூற முடியாது.

Spread the lovely business news