முன்பெல்லாம் கர்ப்பமான பெண்கள், பிரசவ நாள் வரையும் நன்றாக குனிந்து நிமிர்ந்து வேலை செய்வார்கள். பிரசவமும் சிக்கலில்லாமல் சுகப்பிரசவமாக இருக்கும். ஆனால் இப்போது எல்லா வேலைகளையும் மெஷின்கள் செய்வதால், பெண்களுக்கு உடல் உழைப்பு குறைந்துவிட்டது. பெரும்பாலான பெண்கள் வேலைக்குச் செல்வதால், வீட்டில் வேலை செய்யவோ, உடற்பயிற்சி செய்யவோ இயலாத நிலை. இதனால்  இப்போதெல்லாம் சுகப்பிரசவம் என்பதே அரிதாகிவிட்டது. இந்தக்குறையைத் தீர்க்கிறது, உமையாள் சம்பந்தம் என்பவரால்  திருச்சியில் தொடங்கியுள்ள ‘கர்ப்ப ரக்ஷா’ என்னும் மகப்பேறு பயிற்சி மையம். இங்கே கர்ப்பம் தரிப்பதற்கு முன், கர்ப்பம் தரித்த பின், குழந்தை பிறந்த பின் மற்றும் குழந்தை வளர்ப்பு என்ற நான்கு காலகட்டங்களில் பெண்களின்  உடல்நலன் மற்றும் மனநலனுக்குத் தேவையான அனைத்து பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.

‘கர்ப்ப ரக்ஷா’ மையத்தைப் பற்றி உமையாளிடம் பேசினோம். 

‘‘நான் பி.காம்., எம்.பி.ஏ. முடிச்சிட்டு, சேலத்தில் என் அப்பாவின் ஸ்டேஷனரி பிசினஸில் ஒன்றரை வருஷம் அவருக்கு உதவியாக இருந்தேன். திருமணமாகி சென்னை போனோம். நான் தாய்மை அடைந்தபோது, கர்ப்பிணி பெண்களுக்கு உபயோகமான விஷயங்கள் என்னவெல்லாம் இருக்குன்னு பார்த்துட்டிருந்தேன். ஒரு பெண் கர்ப்பமாக இருக்கிற போது, அவளுடைய மனநிலை, பழக்கவழக்கம் போன்ற எல்லா விஷயங்களின் தாக்கமும் கருவில் இருக்கும் குழந்தையிடம் இருக்கும். நான் கேள்விப்பட்ட ஒரு விஷயம் இன்னும் ஆச்சர்யத்தைத் தந்தது. குழந்தை வயிற்றில் இருக்கும்போது, அந்தத் தாய் என்னவெல்லாம் படிக்கிறாங்களோ, அதில் குழந்தையும் கவனம் செலுத்துமாம். பிறந்த பிறகு குறிப்பிட்ட அந்தத் துறையில் நல்ல அறிவுடன் வளருமாம். இதற்கு காந்திஜி, அப்துல் கலாம் போன்றவர்கள் உதாரணம். அவ்வளவு ஏன்? நான் வயிற்றில் இருக்கும்போது எங்க அம்மா தினமும் அபிராமி அந்தாதி படிப்பாங்களாம். அதனாலதான் எனக்கு நல்லா படிப்பு வந்ததுன்னு சொல்வாங்க.

ஸோ, நல்ல தலைமுறை வேண்டும் என்றால், நாம கொஞ்சம் கவனமாகவும் தீவிரமாகவும் உழைக்கவேண்டும் என்பது எனக்குப் புரிந்தது.. நாமும் இதை முயற்சி செய்து பார்ப்போமேன்னு நினைச்சேன். வீட்டில் எல்லோருமே ஆன்மிகப் பற்றுள்ளவங்க. தினமும் விஷ்ணு சகஸ்ரநாமம் படிக்கும் பழக்கம் உண்டு.. நான் கர்ப்பமாக இருக்கும்போது, கணபதி புராணத்தில் தொடங்கி, நாராயணீயம், சுந்தரகாண்டம்னு எல்லாமே படிச்சேன். எனக்குப் பெண் குழந்தை பிறந்தது. அதிகாலை எழுந்துக்கறதிலிருந்து நிறைய நல்ல பழக்கங்கள் அவளிடம் சின்ன வயசிலேயே பார்க்கமுடிந்தது. 

மும்பையில் கர்ப்பிணிப் பெண்களுக்கான கோர்ஸ் ஒண்ணு பண்ணினேன். அதன் உள்ளடக்கத்தை வச்சுத்தான் இந்த ‘கர்ப்ப ரக்ஷா’ தொடங்கி இருக்கேன்’’ என்றார் உமையாள்.

இங்கே வரும் கர்ப்பிணிப் பெண்களுக்குக் கற்பிக்கப்படும் விஷயங்கள்:

மூச்சுப் பயிற்சி, யோகசனப் பயிற்சி, வானவில் மூச்சுப் பயிற்சி (Rainbow breathing techniques), கர்ப்பகாலத்தில் தேவையான ஊட்டச்சத்து, அக் காலகட்டத்தில் உடலில் வரும் பிரச்னைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள், கர்ப்பகாலத்தின் 3 முக்கியமான கட்டங்கள், வலியைச் சமாளிக்கும் வழிகள், கருவிகள், குழந்தைப்பேற்றுக்குப் பின்னான பராமரிப்பு, குழந்தை பராமரிப்பு, தாய்ப்பாலின் முக்கியத்துவம், குழந்தை வளர்ப்பு கலை, தம்பதிகளுக்கான வகுப்புகள், குழந்தையுடனான பிணைப்பு போன்றவை.

‘‘கர்ப்ப காலம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் முக்கியமான தருணம். மிக மகிழ்ச்சியாக இருக்கவேண்டிய காலகட்டம். அப்போது பெண்ணின் உடலிலும் ஹார்மோன்களிலும் பல மாற்றங்கள் நிகழும். மனநிலை மாறுபாடுகள் இருக்கும். எனவே அப்போது தன்னையும் கருவில் இருக்கும் குழந்தையையும் பாதுகாத்துக்கொள்ள இப் பயிற்சிகள் உதவும். கர்ப்பகால மன அழுத்தத்தைத் தடுப்பது மற்றும் கையாள்வதையும் இங்கே கற்கலாம். ஏனெனில் பேறுகாலத்தில் உடல் வலிமையைப் போல மன வலிமையும் முக்கியமானது. மேலும் சுகப்பிரசவத்துக்கான நிலைகள் மற்றும் இயக்கம், வலியைச் சமாளிக்கவும் எளிதாக்கவும் மசாஜ் தெரபி, ரிலாக்சேஷன் டெக்னிக்ஸ் போன்ற எல்லாமே கற்பிக்கப்படுகின்றன’’ என்று கூறும் உமையாள், இப் பயிற்சியால் கிடைக்கும் சில நன்மைகளைப் பட்டியலிட்டார்.

• வலியைக் குறைத்து, பிரசவத்தை எளிதாக்க சில comfort measures

• தன் கோரிக்கைகளை கணவரிடமும் மருத்துவமனையிலும் நிறைவேற்றிக்கொள்ளத் தேவையான தகவல்தொடர்புத் திறன்

• அறுவைசிகிச்சை பற்றிய தகவல்கள், அதை எப்படி சுகப்பிரசவம் ஆக்கலாம் என்ற உத்திகள்

• தாய்ப்பாலின் நன்மைகள், பயணத்தின்போது தாய்ப்பால் கொடுக்கும் முறை, பணிக்குச் செல்லும்போது தாய்ப்பாலைச் சேமிக்கும் முறை, தாய்ப்பால் தானம் போன்ற விஷயங்கள்.

• பச்சிளம் குழந்தை பராமரிப்பு

• கர்ப்பகாலம் மற்றும் பிரசவ நேரத்தில் தந்தையின் பங்கு, அதனால் ஏற்படும் பிணைப்பு

• கருவுற்ற நாளிலிருந்து குழந்தை வளர்ப்பு – அதாவது தாயின் ஒவ்வொரு செய்கையும் எவ்வாறு குழந்தையிடம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது,  அது குறித்த சரியான விழிப்புணர்வு தருதல் (எந்த வாரத்திலிருந்து குழந்தையுடன் பேச வேண்டும், எவ்வாறு பேசவேண்டும், குழந்தையிடம் பதிலுக்கு என்ன விளைவு ஏற்படும் போன்றவை) 

‘‘இவை எல்லாமே என்னுடைய பயிற்சிக்கு வருபவர்களுக்கு முறையாக அளிக்கப்படும். இவ்வகுப்புகளில் தரப்படும் ஆக்டிவிடீஸ் குழந்தைக்கு சரியான அனுபவங்களைக் கொடுத்து, தாய்க்கும் குழந்தைக்கும் நல்ல பிணைப்பை ஏற்படுத்தும். இப் பயிற்சிகளை 27வது வாரத்திலிருந்து 36வது வாரத்துக்குள் எடுத்துக்கொள்வது சிறந்தது. 12 நாள் வகுப்புகள். தினமும் 2 மணி நேரம். சமீபத்தில்தான் ஒரு பேட்ச் பெண்கள் பயிற்சியை நிறைவு செய்தாங்க. அவர்களுள் ரெண்டு பேருக்கு சுகப்பிரசவம்.. இதுதான் என் முயற்சியின் வெற்றி’’ என்று மகிழ்ச்சியோடு குறிப்பிடும் உமையாள், ஆன்லைன் வகுப்புகளும் எடுக்கிறார். 

இளம் அன்னையருக்கு, கருவிலேயே திருவைத் தரும் மிக உபயோகமான இப் பயிற்சியை, ஒரு ‘ஸ்டார்ட் அப்’ பிசினஸாகத் தொடங்கி வெற்றிகரமாக நடத்திவரும் உமையாளுக்கு, இனி எல்லாம் சுகமே! 

Contact: 95666 83230

Email: garbharakshapcc@gmail.com

Spread the lovely business news