சென்னை ஆதம்பாக்கத்தில் ஒரு வீட்டில் இயங்குகிறது ‘ஸ்பெஷாலிட்டி ஃபுட்ஸ்’ என்னும் அந்த சிறு உணவுத் தொழிற்சாலை. பகல் வேளையில் பம்பரமாகச் சுழன்று  மணக்க மணக்க சேவை, பொடி இட்லி, மினி இட்லி மற்றும் கொழுக்கட்டை வகைகளை தயாரிக்கின்றனர். பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் அந்த பலகாரங்கள் பிற்பகலில் ‘பேக்கிங்’ செய்து, நகரின் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் கேட்டரிங் துறைகளுக்கு அனுப்புகின்றனர்.

15 ஆண்டுகளுக்கு முன் இதைச் சிறிய அளவில் தொடங்கி, இன்று சந்தையில் தக்க இடம் பிடித்திருக்கும் ஸ்ரீதரிடம் இந்தத்தொழில் தொடங்கிய விதம் பற்றிக் கேட்டோம். 

‘‘நான் எலெக்ட்ரிகல் அண்டு எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயர். திருச்சியில் எங்களுடைய குடும்பத் தொழிலான ‘திருச்சி கஃபே’ 1952ல் தாத்தாவால் தொடங்கப்பட்டது. நான் வேலை பார்த்துக்கொண்டே ஹோட்டலையும் நிர்வகித்தேன்.என் மாமனார் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்தார். அவருடைய கம்பெனியிலிருந்து நண்பர்களை வீட்டுக்கு சாப்பிடக் கூப்பிட்டிருந்தார். வழக்கமான மெனு ரெடி செய்யாமல், வித்தியாசமா ஏதாவது நம்ம பாரம்பரிய உணவை தயாரிக்கலாமேன்னு சேவை செய்தோம். நிறைய பேருக்கு அதைச் செய்றப்ப கையால பிழியறது சிரமமா இருந்தது. அதனால என்னையே அதுக்காக ஒரு மெஷின் வடிவமைக்கச் சொன்னார். வெற்றிகரமாக மெஷினை வடிவமைச்சதும்,‘மெஷினை விற்பனை செய்வதற்கு பதிலாக புராடக்டை விற்பனை செய்வோமே’ என மாமனார் ஐடியா கொடுத்தார்.   

முதலில் சிறிய அளவில் எலுமிச்சை சேவை, தக்காளி சேவை என பல விதமான  சேவைகளை செய்து மாம்பலத்தில் ஒரு உறவினர் வீட்டு வாசலில் வச்சு சேல்ஸ் பண்ணினோம். நல்லா வித்துச்சு. உயர் மற்றும் நடுத்தரவர்க்க மக்கள் அதிகம் வரும் பெசன்ட் நகர் பீச்சில் ஞாயிற்றுக்கிழமை காலையில்  மட்டும் காரில் கொண்டு போய் வச்சு சேல்ஸ் பண்ணினோம். நிறைய பேர் விரும்பி வாங்கினாங்க. அது ‘வேர்டு பை மவுத்’ பரவி, எங்க தயாரிப்புக்கு நல்ல பெயர் கிடைச்சது. அதைத் தொடர்ந்து ‘அடையார் டைம்ஸ்’ பேப்பரில் எங்களைப் பற்றி பெரிய ஆர்டிகிள் வந்தது. அதுக்குப் பிறகு நிறைய கடைகள் டீலர்ஷிப் கேட்டாங்க. இப்போது நாங்க சென்னையில் முக்கியமான இடங்களில் 20, 25 கடைகளுக்கு சப்ளை பண்றோம்’’ என்கிறார் ஸ்ரீதர்.

இப்போது சேவை மட்டுமல்லாமல், பூரணக் கொழுக்கட்டை (இனிப்பு மற்றும் காரம்), அம்மிணி கொழுக்கட்டை, பொடி இட்லி, மினி இட்லி, மோர்க்கூழ் ஆகியவற்றையும் சுவையுடன்  தயாரித்து கடைகள் மற்றும் கார்ப்பரேட் அலுவலகங்களுக்கு விநியோகிக்கிறார். வயிற்றுக்குத் தீங்கு செய்யாத, சத்தான உணவு என்பதால் இவ் வகை ஸ்நாக்ஸ் வகைகளுக்கு கூடுதல் வரவேற்பு கிடைத்துள்ளது.  இந்தத் தொழிலில் ஸ்ரீதருக்கு அவருடைய மனைவி அருணா உறுதுணையாக இருக்கிறார். 7, 8 பணியாளர்களுடன் இயங்கும் அவர்களின் நிறுவன தயாரிப்புகளில் ‘பிரிசர்வேடிவ்’ சேர்ப்பது இல்லை. இரவுக்குள் சாப்பிடவில்லையெனில் கெட்டுப்போய்விடும். எனவே குறிப்பிட்ட அளவுதான் தயாரிக்கின்றனர். இவர்களின் ஸ்நாக்ஸ் வகைகளுக்கு எப்போதுமே நல்ல ‘டிமாண்ட்’ இருக்கிறது.  

‘‘இந்தத் தொழிலில் நீங்க சந்திச்ச தடைகள்..?’’

‘‘ஆரம்பத்தில் நிறையவே சந்தித்தோம்.எங்கள்  புராடக்டான ‘சேவை’ என்னும் உணவை, மக்களுக்கு என்னன்னு புரியவச்சு, அதை அவர்களிடம் நிலைநிறுத்துறதுக்கே ரொம்பச் சிரமப்பட்டோம். அதன் பிறகு ஆள் கிடைக்கிறது ரொம்பக் கஷ்டமா இருந்துச்சு. சின்ன கம்பெனிதானேன்னு ஆட்கள் வரமாட்டாங்க. அவங்க கேட்கும் சம்பளத்தைக் கொடுத்து வேலைக்கு வச்சுக்கிற அளவுக்கு எங்க நிலைமையும் அப்போது இல்லை. அதனால மாவு அரைக்கிறது, பிழியறது, பேக்கிங் எல்லாமே குடும்ப உறுப்பினர்களாகிய நாங்களே கவனிச்சுக்கிட்டோம்.            

நல்ல சுவையாலே பின்னர் நல்லா விற்பனை ஆரம்பிச்ச பிறகுதான், ஆட்களை வேலைக்கு வைத்தோம். இப்போதும் மோர்க்கூழ் கிளறுவது, கொழுக்கட்டை பிடிக்கிறது எல்லாம் கைகளால்தான். மெஷின் இல்லை. சுவையும் தரமும் எப்போதும் சிறப்பா இருக்கணும்,அதில் சமரசம் செய்துக்கிறதே இல்லை’’ என்கிறார் ஸ்ரீதர். 

அதிக அளவில் இட்லி, கொழுக்கட்டை வேண்டும் என்பவர்கள் முன்னாலேயே ஆர்டர் செய்கிறார்கள். கல்யாணங்களுக்குக் கூட இப்போது கேட்டரர்ஸ் ஆர்டர் செய்வதாகக் குறிப்பிட்டார். ஏதேனும் விழாக்கள், பிறந்த நாள் கொண்டாட்டங்கள் என்றால் முன்கூட்டியே ஆர்டர் செய்யவேண்டும். பொடி இட்லி, மினி இட்லி எல்லாம் ‘பல்க்’ ஆர்டராக, குறைந்தபட்சம் 2000 முதல் 6000 இட்லிகள்  வாங்குகின்றனர்.

‘‘எதிர்காலத் திட்டம் எதுவும் இருக்கிறதா?’’

‘‘இப்போதைக்கு எதுவும் இல்லை.. இதையே ஒழுங்காக, சுகாதாரமாக மக்களுக்குக் கொடுக்கணும். வேறு ஏதாவது செய்றேன்னு சொல்லி, இந்தத் தொழிலைக் கெடுத்துடக் கூடாதுன்னு கவனமாக இருக்கேன். உணவில் என்றும் நிலையான தரத்தைக் கொடுக்கணும். இதுவே எனக்குப் போதுமானதாக இருக்கு.‘ஒன்றே செய்.. அதையும் நன்றே செய்’ என்ற கோட்பாட்டில் உறுதியாக இருக்கோம்’’ என்று புன்னகையுடன் கூறும் ஸ்ரீதரின் இந்த ‘சேவை’, ஸ்நாக்ஸ் உலகுக்கு தேவை!

specialityfoods.co.in 

For enquiries: nanasridhar@gmail.com

Mobile: 9444402749

Spread the lovely business news