கொரோனா வைரஸ் உலகெங்கும் பரவியதால்  பல கம்பெனிகள் நீங்கள் வீட்டிலிருந்தே  அலுவலக வேலைகளை செய்யலாம் என பச்சைக் கொடி அசைத்து விட்டனர். எனவே  முழு இயக்கமும் நின்றுவிடாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. வீட்டிலிருந்து வேலை செய்வதால் பல அசௌகரியங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. குறிப்பாக அலுவலகங்களில் நடைபெறும் மீட்டிங், பிரசன்டேஷன் போன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க வாய்ப்புகள் உண்டு.

பல ஸ்டார்ட் அப் கம்பெனிகள், வீட்டிலிருந்தே மீட்டிங்குகளை நடத்தும் வகையில் பலவித செயலிகளை கொண்டு வந்திருக்கின்றன.  அவற்றில் ஸூம் மீட்டிங் ரூம் (Zoom Meeting Room) மிகப் பிரபலமான ஒரு செயலி ஆகும்.

இந்தச் செயலியில் நீங்கள் பதிவு செய்துகொண்டால் உங்கள் நட்பு வட்டாரத்தில் அல்லது அலுவலக வட்டாரத்தில் நீங்கள் வீடியோ கான்பிரன்ஸ், வெப் செமினார்கள், பவர்பாயிண்ட் பிரசண்டேஷன் போன்றவற்றை எளிதாக நடத்தலாம். இது தவிர ஆசிரியர்கள், டியூஷன் ஆசிரியர்கள் தங்களது மாணவர்களுடன் வீடியோ கான்பிரன்ஸில் பாடங்கள் நடத்தலாம்.

ஒரு மீட்டிங்கில் ஒரே நேரத்தில் 100 பேர் வரை கலந்து கொள்ளும் வகையில் மீட்டிங் அறைகளை அமைக்கலாம்,  கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளலாம்.

100 பேர் வரை கலந்து கொண்டால் கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை. அதிகமானவர்கள் (சுமார் 1000 பேர் வரை) கலந்து கொள்ளலாம், நீங்கள் பேசுவதை ரெகார்ட் செய்ய வேண்டும் என்றால் கட்டணத்துடன் கூடிய ப்ளான்களும் இருக்கின்றன.

பல வசதிகள் கொண்ட இந்த ஸூம் மீட்டிங் ரூம், இந்த ஊரடங்கு காலத்தில், உலக அளவில் மிகவும் பிரபலமாகிவிட்டது.  எந்த அளவுக்கு  பிரபலம்  என்றால் டிசம்பர் 2019 வரை, உலகில் தினமும் ஒரு கோடி பேர்தான் இதைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். 2020 மார்ச் மாதத்தில் இந்த ஸூம்  மீட்டிங் ரூமை தினமும் 20 கோடி பேர் பயன்படுத்துகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஸூம் மீட்டிங் ரூம் மட்டுமல்லாமல் மேலும்  பல செயலிகளும் இருக்கின்றன. ஸ்கைப் (SKYPE), கூகுள் ஹாங்க்அவுட் (GOOGLE HANGOUT), மைக்ரோசாப்ட் டீம்ஸ்  (MICROSOFT TEAMS),  தமிழ்நாட்டின் சாப்ட்வேர் கம்பெனியின் சோஹோ (ZOHO) ஆகியவையும் இருக்கின்றன.

லாக்டவுன் காலத்தில் இது போன்ற மீட்டிங் ரூம்கள் நாம் ரூம் போட்டு யோசிக்க உதவியாக  இருக்கின்றன என்றே கூற வேண்டும். 

Spread the lovely business news