இந்தியாவில் 70 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் கிராமப்புறங்களில் வசிக்கிறார்கள். அதேநேரம் 70 சதவீதத்துக்கும் மேலான டாக்டர்கள் நகரங்களில் வசிக்கின்றனர். இந்த இடைவெளியைப் போக்கவும், கிராமங்களிலும் மற்றும் சிறு நகரங்களில் தீவிர சிகிக்சை பிரிவுகள் (ஐ.சியூ.,) போன்ற சிறந்த வசதிகள் கிடைக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ’ஸ்டார்ட் அப்’தான் சிபாகா (CIPACA) என்ற நிறுவனம். தீவிர சிகிச்சை நிபுணத்துவத்தில் சிறந்த மருந்துவரான டாக்டர் ராஜா அமர்நாத் அவர்களால் இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

தீவிர சிகிக்சை பிரிவு என சொல்லப்படும் ஐசியூ படுக்கைகள் இந்தியாவில் 80 சதவீதத்துக்கும் மேல் நகரங்களில் மட்டுமே இருக்கின்றன. சிறு நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிக்சை பிரிவு படுக்கைகளை நிர்மாணித்து அவற்றை சிறப்பாக பாராமரிப்பதே இந்த ஸ்டார்ட் அப் கம்பெனியின் முக்கியமான குறிக்கோள்.  

அந்த ஐ.சி.யூ.வுக்கு தேவையான டாக்டர்கள், நர்ஸ், பாராமெடிக்கல் ஊழியர்களையும் இந்த கம்பெனி கொடுக்கிறது. இது தவிர, அங்கு அனுமதிக்கப்படும்  நோயாளிகளை சி.சி.டி.வி., மூலமாக கண்காணித்து, தேவைப்படும்போது, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவர்களின் ஆலோசனைகளை வழங்கி, சிறப்பான சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்கின்றனர்.

இதுவரை நான்கு மாநிலங்களில் 13 மருத்துவமனைகளில் 240 ஐசியூ படுக்கைகளை நிர்மாணித்திருக்கின்றனர்.  இதன் மூலம் 38 ஆயிரத்து 157 நோயாளிகளுக்கு இதுவரை தீவிர மருத்துவ சிகிச்சை வசதிகள் கிடைக்க உதவி இருக்கிறார்கள். இவர்களின் சேவை பெரும்பாலும் இப்போது தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. இந்த 240 ஐசியூ படுக்கைகளும் நகரங்களுக்கு வெளியே உள்ள மருத்துவமனைகளில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு தாலுகாவிலும் ஐசியூ படுக்கை வசதிகளை அமைப்பதுதான் இவர்களுடைய குறிக்கோள். அதாவது அந்த ஊர்களில் இருக்கும் மருத்துவமனையுடன் இணைந்து இந்த வசதியை செய்து தருவதுதான் இவர்களுடைய நோக்கம்.

முன்னேறிய நாடுகளில் ஒரு லட்சம் மக்களுக்கு 10 ஐசியூ படுக்கை வசதிகள் உள்ளன. இந்தியாவில் ஒரு லட்சம் மக்களுக்கு 2.5 ஐ.சியூ.,  படுக்கை வசதிதான் இருக்கிறது.  

தேவைப்பட்டால் வெளிநாடுகளில் இருக்கும் மருத்துவர்களின் ஆலோசனைகள், உதவிகள் கிடைக்கவும் ஏற்பாடு செய்கின்றனர்.  இப்போது அரசு மருத்துவமனைகளிலும் ஐசியூ வசதிகளை செய்து தர முன் வந்திருக்கின்றனர்.  

சென்னை போன்ற பெரிய நகரங்களில் ஐசியு படுக்கை வசதிகள் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற ஒரு நாளைக்கு 60 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் வரை செலவாகிறது. இதே சிகிச்சை வசதிகளை, கிராமங்கள், சிறு நகரங்களில் உள்ள மக்களுக்கு ஒரு நாளைக்கு 10,000 முதல் 20 ஆயிரம் ரூபாயில் கிடைக்கச் செய்கின்றனர்.  

இவர்களுடைய வசதிகளை நோயாளிகள் எப்படிப் பெற முடியும்? நோயாளியோ அவரது உறவினரோ CIPACA என்ற செயலியை பதிவிறக்கம் செய்தால், அதில், இவர்களின் தீவிர சிகிச்சை பிரிவு அருகில் எங்கே இருக்கிறது எனபதைக் காணலாம். அதன் மூலம் உதவிகளைப் பெறலாம்.  அல்லது இவர்களுடைய இணையதளத்தில் (www.cipaca.com) உள்ள எமர்ஜென்சி மொபைல் நம்பர்களை தொடர்பு கொண்டால் அவர்களும் வழிகாட்டுவார்கள்.

Spread the lovely business news