கிராமங்களில் பசுமாடு வளர்ப்பவர்கள் சீம்பால் பற்றி நிச்சயம் அறிந்திருப்பார்கள். ஆனால் நகரவாசிகள் பெரும்பாலானவர்களுக்கு சீம்பால் மற்றும் அதன் நன்மைகள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பசு கன்று போட்டதும் முதல் மூன்று நாட்கள் வரும் பாலைத்தான் சீம்பால் என்று அழைப்பார்கள். அதில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் பதப்படுத்தி தூளாக்கி சந்தைப்படுத்தும் ஸ்டார்ட் அப் தொழிலைத் நடத்தி வருகிறார் சென்னையைச் சேர்ந்த எஸ். முரளி.
‘ஹில்சன் ஹெல்த் புராடக்ட்ஸ்’ என்னும் நிறுவனத்தைக் கடந்த ஆண்டு தொடங்கி, ‘ஃபோர்லாக்ட்’ என்னும் பிராண்டில் பசுவின் சீம்பால் பவுடர் (Cow colostrum) தயாரித்து விநியோகிக்கிறார்.
‘‘இந்தத் தொழிலை எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள்?’’ என முரளியிடம் அலைபேசியில் கேட்டேன்.
‘‘வேதியியல் பட்டதாரியாகிய நான், பிரபல மருந்து தயாரிக்கும் நிறுவனங்களில் 33 வருடம் வேலை பார்த்த அனுபவத்தை வைத்து சொந்தமாகத் தொழில் தொடங்க நினைத்த சமயத்தில் சீம்பாலை தூளாக்கி விற்கலாமே என யோசித்தேன். காரணம் இயற்கை நமக்குக் கொடுத்திருக்கும் பல அரிய ஆரோக்கிய உணவுகளில் சீம்பாலும் முக்கியமான ஒன்று. நம்முடைய உடல் வளர்ச்சிக்கும் நலனுக்கும் சீம்பால் செய்யும் நன்மைகள் ஏராளம். ஆன்டி வைரல், ஆன்டி பாக்டீரியல், ஆன்டி ஃபங்கல் தன்மைகளைக் கொண்ட சீம்பால், நோய் எதிர்ப்பு சக்தியைஅதிகரிக்க செய்கிறது. எனவே இதன் மூலம் சமுதாயத்துக்கும் நன்மை செய்யலாம் என எண்ணி இந்தத் தொழிலைத் தேர்ந்தெடுத்தேன்.’’
‘‘சீம்பால் உங்கள் தொழிலுக்கு அதிக அளவில் தேவைப்படுமே எப்படிக் கிடைக்கிறது? அதை பவுடர் வடிவில் செய்யும் முறையை விவரிக்க முடியுமா?’’
‘‘பசு கன்று போட்ட 3 நாட்களில் 43 லிட்டர் சீம்பால் கறக்கும். அந்த மூன்று நாட்களில் கன்றுக்குத் தேவையானது 11 முதல் 12 லிட்டர் மட்டும்தான். மீதம் உள்ள சீம்பாலை நாங்கள் வாங்கி உற்பத்திக்கு பயன்படுத்துகிறோம். கன்றுக்கு போதிய பால் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். 

நீங்கள் சொன்னது போல்  அதிக அளவில் பால் தேவைப்படும் என்பதால் பால்வளம் அதிகமுள்ள  குஜராத் மாநிலத்தைத் தேர்ந்தெடுத்து, அகமதாபாத்தில் ஒரு பிளான்ட் போட்டு 250 கிராமங்கள் மூலம், வீட்டுக்கு ஒரு மாடு குறைந்தபட்சம் என்ற கணக்கில் ரசாயனம் கலக்காத  இயற்கை தீவனங்களை கொடுத்து வளர்ப்பவர்கள் மூலம் சீம்பால் சேகரிக்கிறோம். ஆயிரக்கணக்கில் இருக்கும் மாடுகளில் தினசரி பத்து மாடுகளாவது கன்று ஈனும். தினமும் சேகரிக்கப்படும் சீம்பாலை குளிர்பதனம் செய்யப்பட்ட வண்டி மூலமாக  கிடங்குக்கு கொண்டுவந்து அதை  முறைப்படி பதப்படுத்தி, தூள் வடிவில் மாற்றி பேக் செய்கிறோம். GMP விதிகளின்படி, தூள் வடிவிலும் கேப்ஸ்யூல் வடிவிலும் ‘ஃபோர்லாக்ட்’ (Forelact) என்கிற பிராண்டில் சந்தைப்படுத்துகிறோம். சீம்பால் தூளில் வேறு எதுவும் சேர்க்கப்படுவதில்லை. 100% சீம்பால் மட்டுமே!’’ என்று செய்முறையை விளக்கினார் முரளி.

‘‘ஒருவருக்கு சீம்பால் தூள் எவ்வளவு தேவை? அதனுடைய பலன்கள் என்ன?’’
‘‘ஒருவருக்கு ஒரு நாளைக்கு 2 கிராம் சீம்பால் தேவைப்படும். அதை பால், தண்ணீர், ஜூஸ், யோகர்ட் போன்றவற்றில் கலந்து குடிக்கலாம். காய்கறி, கீரை சாப்பிடுவதைப் போல இந்த சீம்பால் தூளை தினசரி சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு திறனும் வலிமையும் கூடும். முதியவர்களுக்கு வரும் மூட்டு வலி, எலும்பு அடர்த்தி குறைவு, மலச்சிக்கல், ஞாபகமறதி, தூக்கமின்மை போன்ற பிரச்னைகள் குறைவதற்கு சீம்பால் தூள் உதவும். இதில் எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படுவதில்லை!
விளையாட்டு வீரர்கள் இந்த சீம்பாலை சாப்பிட்டால், அவர்களின் ஸ்டாமினா அதிகரிப்பது நிரூபணமான உண்மை’’ என்றார் அழுத்தமாக.
‘‘சாதாரண பால் போல் சீம்பால் அதிக அளவில் கிடைக்காததால் இதன் விலை கொஞ்சம் அதிகம். ஆனால் சீம்பாலால் கிடைக்கும் பலன்களுடன் ஒப்பிடும்போது அந்த விலை ஏற்றுக்கொள்ளக் கூடியதே..’’ என முரளி நிறைவாகக் கூறியதோடு…
‘‘எல்லா வயதினரும் இதை எடுத்துக் கொள்ளலாம். பிறந்தவுடன் தாய்ப்பால் கிடைக்காத சூழ்நிலையில் இருக்கும் குழந்தைகளுக்கு இந்த சீம்பால் தூளை உபயோகிக்கலாம். தாயிடமிருந்து வரும் சீம்பாலில் உள்ள புரதத்தை விட 20 மடங்கு அதிகமான புரதம் இதில் இருக்கிறது,  எனவே  இது மிகச் சிறந்த துணை உணவு. குழந்தை நல மருத்துவர்கள் இதைப் பரிந்துரை செய்கிறார்கள்!’’
‘மதர் ஆஃப் சப்ளிமென்ட்ஸ்’, ‘வொயிட் கோல்டு’, ‘யுனிவர்ஸல் டோனர்’ என்றெல்லாம் அழைக்கப்படும் பசுவின் சீம்பாலைத் தூளாகத் தயாரிக்கும் முரளியின் நிறுவனம், இது போல மேலும் பல ஹெல்த் புராடக்டுகளைத் தயாரிக்கும் முனைப்பில் இருக்கிறது.
கூடிய விரைவில் அவற்றையும் எதிர்பார்க்கலாம்!
Hilson Health Products

Mob :  95000 70628

What:  94889 65128                     

Spread the lovely business news