சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலிருந்து 15 கிமீ தொலைவில் பாரம்பரிய பெருமை கொண்ட கல்லல் அமைந்துள்ளது. இங்குள்ள மக்களின் காவல் தெய்வமாக விளங்கும் சுந்தரரேஸ்வரர் சௌந்தரநாயகி கோயில் தேருக்கு 100 வயது. இது போன்ற பல சிறப்புகள் கொண்ட கல்லலில்  மேலும் ஒரு சிறப்பு  “வெஸ்பா டெக்ஸ்டைல் மில்ஸ்”.  இதன் உரிமையாளர் திரு. பாண்டியராஜன். 

இங்கு ஆடவர், பெண்டிர், குழந்தைகளுக்கான உள்ளாடைகள் தயாரிக்கின்றனர்.   விவசாய குடும்பத்தில் பிறந்த  பாண்டியராஜன்,  கிராமத்தில் வசிக்கும் ஏழை எளியோரின் வளர்ச்சியை லட்சியமாகக் கொண்டு ஆக்கபூர்வமான பல பணிகளை செய்து வருகிறார்.  இவரிடம் பேட்டி எடுத்தபோது, பல அரிய அனுபவங்களை அறிந்துக் கொள்ள முடிந்தது. 

சொந்த ஊரிலேயே தொழில் தொடங்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை.  அதிலும்,  குக்கிராமம் என்றால் தொழிலுக்கான அடிப்படை வசதிகளை கூட தாங்களே உருவாக்கிக்கொள்ள வேண்டியிருக்கும்.  இது போன்ற நிலையில் உள்ளாடை  உற்பத்தி தொழிலுக்கு சம்பந்தமே இல்லாத தன் கிராமத்தில் உள்ளாடைகள் உற்பத்தி தொழிலை தொடங்கினார் பாண்டியராஜன்.

பல சவால்களை வெற்றிகரமாக கடந்து வந்த இவர்,  பலருக்கு முன்மாதிரியாக இருக்கிறார். இவரது நிறுவனத்தில்  இந்த பகுதியை சேர்ந்த சுமார் 140 பெண்கள் பணிபுரிகின்றனர். இவர்களில்  பெரும்பாலானோர்,  கணவனால் கைவிடப்பட்டவர்கள்,  விதவைகள். 

ராம்ராஜ் காட்டன் போன்ற முன்னணி ஜவுளி நிறுவனங்களுக்கு கான்ட்ராக்ட் அடிப்படையில் உள்ளாடைகள் தயாரித்து வழங்குகிறார்கள்.  

இவர் தனது ஆரம்ப காலம்  பற்றி குறிப்பிடுகையில், 

தனது குடும்ப பாரத்தை சுமக்க ஹோட்டலில் மாதம் ரூபாய் 15 சம்பளத்துக்கு  வேலையில் சேர்ந்தார். பின்னர்,  திருப்பூரில் பனியன் கம்பெனி வேலை. அங்கு பார்த்த வேலை அனுபவத்தை வைத்து பனியன் வாங்கி விற்கும் தொழிலை தொடங்கினார். திருப்பூரில் பனியன்களை பீஸ் கணக்கில் வாங்கி வந்து திண்டுக்கல், கோவில்பட்டி, காரைக்குடி என பல ஊர்களுக்கு தலையில் சுமந்து சென்று விற்பனை  செய்தார்.  பிறகு திருப்பூரில் சொந்தமாக சிறிய அளவில் பனியன் தயாரிக்கும் தொழிலைத் தொடங்கினார். அப்போது, இவருக்கு மார்க்கெட்டிங் தந்திரங்கள் எதுவும் தெரியாது. 150 கடைகளில் ஏறி இறங்கினால் ஒரு கடையில் ஆர்டர்  கிடைக்கும். 

பெரிய நிறுவன பிராண்டுகளுக்கு மத்தியில், சிறிய அளவில் தொழில் செய்பவர்களும் தரமாக கொடுக்க முடியும் என்பதை நிரூபித்தார். இந்த நிலையில், இந்த தொழிலை தனது  சொந்த ஊருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது. சிவகங்கை மாவட்டம் வானம் பார்த்த பூமி. மழை பெய்தால்மட்டுமே வேளாண் பணிகள் நடைபெறும். பனியன் தொழிலை இங்கு நடத்த, இந்த தொழிலில் அனுபவம் உள்ள ஆட்கள் கிடைப்பது சிரமமாக இருந்தது. ஆனாலும் மனம் தளரவில்லை இவர். அனுபவம் இல்லாதவர்களை,  துணிந்து வேலைக்கு எடுத்தார்.  அவர்களுக்கு, மத்திய அரசின் திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தின் மூலம், பயிற்சி அளித்தார்.  இயந்திரங்களை  தாங்களே பழுது பார்ப்பது வரை கற்றுக்கொண்டனர். 

ஆரம்பத்தில் மிகவும் கடினமாக இருந்தாலும் படிப்படியாக வளர்ச்சி கண்டார். “இப்போதைய சூழ்நிலையில் வருமானம் போதுமானதாக இருப்பதுடன், சொந்த ஊரில், அதுவும் கிராமங்களில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்துள்ளோம்” என்ற திருப்தி உள்ளது என்கிறார் பாண்டியராஜன்.

தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு, அவர்கள் விரும்பினால்,  ஐடிஐ (ITI) யில் சேர்ந்து  தொழில் கல்வி படிக்கவும், பாலிடெக்னிக்கில் டிப்ளமோ படிக்கவும் உதவி செய்கிறார். படித்து முடித்தவர்களுக்கு,  அதற்கேற்ற வேலையும் அதிக சம்பளமும் தருகிறார். இதற்காகவே, ஐடிஐ, பாலிடெக்னிக்குகளில் அரசு இவர்களுக்கு இருபது இடங்களை ஒதுக்கி கொடுத்துள்ளது.. 

சிவகங்கை மாவட்ட  தொழில் மையம், நல்ல ஒத்துழைப்பும் கொடுத்து  புதிதாக தொழில் தொடங்குவோருக்கு கடனுதவி பெறுவதற்கு பெரிதும் உதவியாக இருக்கிறது என குறிப்பிட்டார்.

”எனது நிறுவனத்தில் பணிபுரிவோர் பலரும், சொந்தமாக புதிய நிறுவனம் தொடங்க வேண்டும். இதன் மூலம், கல்லல் ஊரும் மக்களும் சிறக்க வேண்டும்  என்பதே  எனது விருப்பம்” என்று சொல்கிறார் பாண்டியராஜன்.   

இளைஞர்கள், மகளிர் சுய உதவி குழுக்கள் தொழில் தொடங்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் நிதி உதவி வழங்கிவருகின்றன.  அதைப் பயன்படுத்தி கிராமங்களை  சேர்ந்த இளைஞர்கள் தொழில் தொடங்க முன்வர வேண்டும். அவ்வாறு தொடங்குவதன் மூலம் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் “இப்போது தொழில் பழக வரும் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய இலவச பயிற்சி வழங்கப்படுகிறது.  இதுபோன்று தொழில் தொடங்க முன்வரும் இளைஞர்களுக்கு வெஸ்பா டெக்ஸ்டைல் மில்ஸ் நிறுவனம் சார்பில் பயிற்சி மட்டுமின்றி முழு ஒத்துழைப்பு வழங்கப்படும்” என உறுதியளித்தார். 

இவரை பாராட்ட : 94433 42075

Spread the lovely business news