இன்றைய காலகட்டத்தில்  விற்பனைகளும்,  ஏற்றுமதிகளும்  குறைந்து வருகின்றன.  குறிப்பாக குறு, சிறிய மற்றும் நடுத்தர கம்பெனிகளின் விற்பனைகள் வெகுவாக குறைந்து விட்டன.  காரணம்  செலவழிக்க நினைப்பவர்கள் கூட இந்த செலவு தேவைதானா அல்லது தவிர்த்து விடலாமா என யோசிக்கத்  தொடங்கி விட்டதுதான்.  வங்கிகள் கடன் தர மறுப்பு, விற்பனை குறைவு, விற்ற சரக்குகளுக்கு பணம் கிடைப்பதில் தாமதம் இப்படியாக பல விதமான பிரச்சனைகளை வியாபாரிகள் எதிர்க் கொள்ள வேண்டிய நிலை.  இப்படிப்பட்டவர்களின் குறை  தீர்க்க டிசம்பர் மாதம் 7ம் தேதி முதல், ஜனவரி மாதம் 6ம் தேதி வரை  “வங்கி கடன் ஆலோசனை முகாம்”  நடந்து கொண்டிருக்கிறது.  

1980 களில்   மத்திய அமைச்சர் ஜனார்த்தன் பூஜாரி நடத்திய லோன் மேளா எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும். அது போல ஒரு லோன் மேளா நடத்தி குறு, சிறிய மற்றும் நடுத்தர கம்பெனிகளின் வங்கி சம்பந்தமான பிரச்சனைகளை (அதாவது நிதி சம்பந்தமான)  குறுகியகால – நீண்டகால கடன்கள்,  ஏற்றுமதி-இறக்குமதி கடன்கள், நடைமுறை கடன் தேவைகள் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்.  இது தேசியமயமாக்கப்பட்ட எல்லா வங்கிகளிலும் இந்த வழிகாட்டல் மாதத்தில் செய்யப்படுகிறது.

முன்னால் நடைமுறை கடன்கள் (வொர்க்கிங் கேப்பிடல்) வாங்கியிருப்பவர்களுக்கு இன்னும் தேவைப்பட்டால் 25 சதவீதம் வரை  அதிகப்படுத்த நடவடிக்கைகள், நீங்கள் வங்கியில் வாங்கியிருக்கும் கடன்கள் சரிவர கட்டப்படாமல் அவை காலம் கடந்த கடனாக ஆகியிருக்கும் பட்சத்தில் அவற்றை திருப்பி செலுத்தும் காலத்தை திருத்தியமைப்பது, நீங்கள் கடனுக்கு சரக்குகளை விற்றிருக்கும் பட்சத்தில் அவற்றின் பணம் வருவதில் தாமதமாக இருந்தால் அவற்றை விரைவில் பெற வழிகள் அல்லது அதை டிஸ்கவுண்ட் செய்து பணம் கொடுத்தல் போன்றவைகளில் வழிகாட்டப்படும்.

உங்களுடைய வங்கி தேசியமயமாக்கப்பட்ட வங்கியாக இருக்கும் பட்சத்தில் அவர்களை தொடர்பு கொண்டு உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம்.

Spread the lovely business news