அவுரி இன்க் நிறுவனம்

தமிழகத்தின் பின்னலாடை நகரம் திருப்பூரில்  இயற்கை சாயங்கள் தயாரிக்கும்  ஸ்டார்ட் அப் பிசினஸ் செய்து வருகிறார் இளைஞர் திவாகர். இவர் இயற்கை சாயங்கள் கொண்ட ஆடைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்பவர். 

கைத்தறி ஆடையாக  இருந்தாலும், அந்தத் துணிகளுக்கு ஏற்றப்படும் சாயங்கள் செயற்கை ரசாயனச் சாயங்களாக (Synthetic dyes) இருந்தால், கண்டிப்பாக சுற்றுச்சூழலுக்கு மாசு உண்டாக்கும். அவை மக்காமல் இருந்து மண்ணுக்கு மாசை உண்டாக்கும். இயற்கைச் சாயங்கள் தயாரித்து, அவற்றைத் துணிகளுக்கு ஏற்றுவது சிறிது கடினமான பணிதான். ‘அவுரி இன்க்’ என்ற இயற்கை சாயம் கொண்டு தயாரிக்கப்படும் இவரது ஆடைகள் மற்றவர்களின் தயாரிப்பை விட வித்தியாசமாக மார்க்கெட்டில் வலம் வருகின்றன.

ஆம்.. அனைத்தும் இயற்கை மூலப் பொருட்களால் உருவாக்கப்படும் ‘இயற்கை சாயங்கள்’ (Organic dyes).  

‘‘மிக நூதனமான இந்த எண்ணம் எப்படி வந்தது?’’ என்று திவாகரிடம் கேட்டேன்.

‘‘நான் இன்ஜினீயரிங் முடித்து சென்னையில் தொழில்முனைவோர் மேம்பாட்டு மையத்தில் இன்டர்ன்ஷிப் செய்யும்போதே, எனக்கு ஏற்றுமதி & இறக்குமதி தொழிலில் ஆர்வம் இருந்தது. டெக்ஸ்டைல் தொடர்பான ஏற்றுமதியில்தான் அதிகமான ஈடுபாடு. குறிப்பாக  சமையலறையில் உபயோகப்படுத்தும் ஏப்ரன், நாப்கின், டவல் மாதிரி ‘ஹோம் டெக்ஸ்டைல்ஸ்’  ஏற்றுமதி செய்ய உறுதியாக இருந்தேன். காரணம் இவைகளின் பயன்பாடு மிக அதிகம்.  குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இத்தகைய துணிகள் அதிகம் பயன்படுத்துகின்றனர். 

2016 ல் முதன் முதலில் ‘பயோ ஃபேப்ரிக்ஸ்’தான் ஏற்றுமதி செய்தேன். இலங்கை மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பினேன். சணல் போன்ற  இயற்கை மூலப்பொருட்களை இறக்குமதி செய்து, துணிகளைத் தயாரித்தேன். அப்போது மனதில் உதித்ததுதான் இந்த இயற்கை சாயம்.  திருப்பூர், கரூர் போன்ற நகரங்களில் ஜவுளி ஆலைகளிலிருந்து வெளியேறும் சாயக் கழிவுகளால் நீர் ஆதாரங்கள் ரொம்பவே மாசுபடுகிறது. தயாரிக்கிற துணிகள் ‘ஆர்கானிக்’ ஆக இருந்தாலும் அதற்கு  போடும் சாயங்கள் செயற்கையாகவே  இருந்தது.

“எங்கள் கம்பெனியில் தயாராகும் துணிகள் அனைத்தும்  100 சதவிகிதம் இயற்கைச்

சாயங்களில் (ஆர்கானிக் டையிங்) உருவாகி  அதை ஏற்றுமதி செய்கிறோம்’’ என்கிறார் திவாகர்.

‘‘இந்த இயற்கைச் சாயங்களுக்கு மூலப்பொருட்கள் என்ன?’’

‘‘அவுரி என்னும் தாவரம், மஞ்சள், மாதுளம்பழத் தோல் போன்ற இயற்கைப் பொருட்களிலிருந்து 24 நிறங்களில் சாயங்கள் தயாரிக்கிறோம். அதற்கென்றே இயந்திரங்களை நாங்கள்  ‘கஸ்டமைஸ்’ செய்து வைத்திருக்கிறோம். ஜவுளித் தொழிலில் நிறங்களுக்கென இருக்கும் ‘GOTS’ என்ற தரக்கட்டுப்பாட்டில் கூறப்படும் அளவுகோல்களுக்கு ஏற்ப சாயங்களின் தரத்தைக் கொண்டுள்ளோம். ‘GOTS’ தரவரிசை எண் 3க்கு மேல் இருந்தால் ஏற்றுமதி செய்யலாம். எங்க தயாரிப்புகள் 3க்கு மேல் இருப்பதால் ஏற்றுமதிக்கு பிரச்னையில்லை. எங்கள்  ஆலையின் சாயக் கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவதில்லை. அந்தத் தண்ணீரில் விவசாயமே செய்யலாம். இதனால் தண்ணீரைச் சேமிக்கலாம். அதோடு இயற்கைச் சாயங்கள் ஏற்றிய தூணிகள் மக்கினாலும் மண்ணின் தன்மை மாறாது என்பதுடன் மண்ணுக்கு உரமாகிவிடும்’’ என்று இயற்கைச் சாயங்களின் நன்மைகளை அடுக்கினார்  திவாகர். இது  ‘அவுரி இன்க்’ என்ற இயற்கைச் சாயங்களை உபயோகிக்கும் ஒரே நிறுவனம் .

‘‘இயற்கைச் சாயங்களில் நனைத்த துணிகள் நம் சருமத்துக்கும் தீங்கு விளைவிக்காது. முக்கியமாகக் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது’’ என்று கூறும் திவாகரின் அடுத்த இலக்கு, ஜெர்மனியில் ஒரு கிளை தொடங்குவதுதான்.

‘‘அயல்நாடுகளில் இந்த வகை துணிகளுக்கு நல்ல கிராக்கி இருக்கிறது.  இவர்களிடம் இயற்கை சாயங்கள் குறித்த விழிப்புணர்வு அதிகம். அவர்கள் ‘பயோ டீகிரேடபிள் புராடக்ட்ஸ்’ தான் எதிர்பார்க்கிறார்கள். நம் நாட்டில் அந்த அளவுக்கு விழிப்புணர்வு ஏற்படவில்லை.  

ஜெர்மனியில் இருக்கும் என் பள்ளி நண்பர் விஷ்ணுவுக்கு என்னைப் போலவே ஆர்கானிக் டையிங்கில் மிகுந்த ஈடுபாடு. எனவே அங்கே ஒரு கிளை அலுவலகம் ஆரம்பிக்க எல்லா   ஏற்பாடுகளும் செய்தாகிவிட்டது’’ என்கிறார்.

பல பள்ளிகள், கல்லூரிகளில் திவாகர்  குழுவினர் இயற்கைச் சாயங்கள் குறித்த பயிற்சிப்பட்டறை நடத்துகிறார்கள். எனவே இளைய தலைமுறையினரிடம் இயற்கை சாயங்கள் பற்றிய விழிப்புணர்வு உண்டாக அதிகம் வாய்ப்பு இருக்கிறது.

‘‘கோவிட் 19 பெருந்தொற்றால் உங்க தொழிலுக்கு ஏதும் பாதிப்புகள் ஏற்படவில்லையா?’’

‘‘கண்டிப்பாக இல்லை. சொல்லப்போனால் கோவிட் 19 க்கு பிறகு எங்கள்  தயாரிப்புகளுக்கு விசாரணைகள் அதிகமாகியுள்ளது. சாம்பிள் ஆர்டர்களும் அதிகரித்துள்ளது. மஞ்சளில் இருந்து எடுக்கும் இயற்கை சாயத் துணிகளில் தைக்கப்பட்ட முக கவசங்கள் அதிகம் விற்கின்றன.’’ என்கிறார் இந்த இளம் தொழிலதிபர்.

தன் நலத்துக்காக தொழில் தொடங்காமல், நாட்டின் நலனையும் சுற்றுச்சூழலின் நலனையும் கருத்தில் கொண்டு தொழில் தொடங்கி, வெற்றிகரமாகக் கொண்டு செல்லும் திவாகர், கண்டிப்பாக நம் இளைய தலைமுறைக்கு ஒரு ரோல்மாடல்! 

திவாகருக்கு நம் பாராட்டுகளும் வாழ்த்துகளும்! 

ஹாட்ஸ் ஆஃப் திவாகர்!

Spread the lovely business news