அமேசான்.காம் என்கிற ஸ்டார்ட்-அப்புக்கான ஆரம்ப முதலீடு பிரதானமாக என்னுடைய பெற்றோர்களிடமிருந்து கிடைத்தது.  அவர்களுடைய சேமிப்பிலிருந்து பெருமளவு தொகையை நான் செய்யப்போவது என்னவென்று புரிந்து கொள்ளாமலே முதலீடு செய்தனர். அவர்கள் அமேசான் மீது அல்லது இணையத்தில் புத்தகக்கடை என்கிற கருத்தியலின் மீது பணயத் தொகைக் கட்டவில்லை. நான் அவர்களிடம், `உங்கள் முதலீட்டை இழப்பதற்கு 70 சதவிகித வாய்ப்பு இருக்கிறது எனக் கூறினாலும் அவர்கள் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை’. முதலீட்டாளர்களிடமிருந்து 1 மில்லியன் டாலர் திரட்டுவதற்கு சுமார் 50 சந்திப்புகளை மேற்கொண்டேன், அப்படிப்பட்ட சந்திப்புகளில் முதலீட்டாளர்களால் பிரதானமாக கேட்கப்பட்ட கேள்வி, `இணையதளம்’ என்றால் என்ன?’ என்பதுதான். 

நாம் வாழும் இந்த நாட்டில் தொழில்முனைவோர் எடுக்கும் ரிஸ்க்கை ஆதரிப்பதோடு அவர்களை உலகத்திலிருக்கும் பெரும்பாலான நாடுகளைப் போல களங்கப்படுத்துவதில்லை. என்னுடைய நிலையான வேலையை ராஜினாமா செய்து விட்டு சியாட்டலில் இருக்கும் கராஜுக்கு ஸ்டார்ட்-அப்பை ஆரம்பிக்கும் நோக்கத்துடன், அது வெற்றி பெறாமலும் போகலாம் என்று தெரிந்தே, செல்ல ஆரம்பித்தேன். ஒரு நாள் நாம் `ஃபோர்க் லிஃப்ட்’ வாங்குவதற்கான வசதி வரும் என நினைத்துக் கொண்டே நான் பார்சல்களை எடுத்துக்கொண்டு தபால் அலுவலகத்துக்குச் சென்றது நேற்று நடந்தது போன்ற ஓர் உணர்வை ஏற்படுத்துகிறது. 

அமேசானின் வெற்றி முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டிருந்தது என நினைக்கிறேன். ஆரம்ப காலத்தில் அமேசானில் முதலீடு செய்வது என்பது மிகவும் `ரிஸ்க்’ எனக் கருதப்பட்டது. நாங்கள் ஆரம்பித்த நாளிலிருந்து 2001 ஆம் ஆண்டு வரை ஏற்பட்ட மொத்த நஷ்டம் சுமார் 3 பில்லியன் டாலர், அந்த ஆண்டு நான்காவது காலாண்டு வரையில் லாபம் என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்தது. மிகவும் `புத்திசாலியான’ பகுப்பாய்வாளர்கள், `பார்ன்ஸ் & நோபிள் எங்களை நசுக்கி விடும் என்றும், நாங்கள் `அமேசான்.டோஸ்ட்’ என்றும் முத்திரை” குத்தினார்கள். 1999 ஆம் ஆண்டு அதாவது நாங்கள் தொழில் ஆரம்பித்து ஐந்து ஆண்டுகள் கழித்து, பாரன் (Barron) பத்திரிகை `அமேசான்.பாம் (Amazon.bomb)’ என தலைப்பிட்டு நாங்கள் மரணிக்க இருப்பதாகச் சொல்லி கட்டுரையொன்றை வெளியிட்டது. பங்குதாரர்களுக்கான என்னுடைய வருடாந்திர கடிதம் `Ouch” என்கிற ஒரு சொல்லில் ஆரம்பித்தது. இணையதளம் சார்ந்த துறை `குமிழாக’ (உச்சத்தில்) இருந்தபோது எங்கள் நிறுவனத்தின் பங்கு 116 டாலரைத் தொட்டது, அந்தக் `குமிழ் வெடித்து’ பேரழிவைச் சந்தித்தபோது 6 டாலருக்குச் சரிந்தது. பங்குச்சந்தை பண்டிதர்களும், வல்லுநர்களும் நாங்கள் இந்தத் தொழிலிருந்து வெளியேறி விடுவோம் என நினைத்தனர். ஆனால் என்னோடு சேர்ந்து ரிஸ்க் எடுக்க ஸ்மார்ட்டான பலர் துணை நின்றனர். 

ஆரம்பகாலத்தில் மட்டுமல்ல. ஒரு சிறந்த நிறுவனமாக நாங்கள் வெற்றி பெறுவதற்கு அதிர்ஷ்டத்தோடு, சிறந்த பணியாளர்களும் தொடர்ந்து பெரிய அளவில் ரிஸ்க் எடுத்து வருவதும் காரணங்கள் ஆகும். கண்டுபிடிக்க வேண்டுமெனில் நீங்கள் பரிசோதனையில் ஈடுபட வேண்டும், அது நினைத்த பலனைத் தராது என ஆரம்பத்திலேயே நினைத்தால் அது பரிசோதனை கிடையாது. பாரம்பரியமான ஞானத்துக்கு எதிராக பணயம் வைக்கும் போது அது அபரிதமான விளைவைக் கொடுக்கும், ஆனால் பாரம்பரியமான ஞானம் பெரும்பாலும் சரியானதாகவே இருக்கும். நாங்கள் அமேசான் வெப் சர்வீசஸ் (AWS) ஆரம்பித்தபோது “கணக்கிடுதல், சேமிப்பகம் விற்பனைக்கும் புத்தகங்களின் விற்பனைக்கும் என்ன சம்பந்தம்?” இது மிகவும் ரிஸ்கான முன்னெடுப்பு என பல அவதானிகள் கூறினார்கள். ஆனால் உலகமே `க்ளவுட் கம்ப்யூட்டிங்’கிற்காகக் காத்திருக்கிறது என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. நாங்கள் AWS ஆரம்பித்தது சரிதான், ஆனால் அதோடு சேர்ந்து மிகப் பெரிய ரிஸ்கையும் எடுத்தோம் என்பதும் உண்மை. சொல்லப் போனால் அமேசான் பல பில்லியன் டாலர்கள் மதிப்புக்கு தோல்விகளைச் சந்தித்திருக்கின்றது. புத்தாக்கத்தோடும், ரிஸ்க் எடுப்பதோடும் தோல்வி என்பதும் வரும், அதனால்தான் உலகத்திலேயே தோல்விக்கு சிறந்த இடம் அமேசான் தான் என்பதை உருவாக்க முயல்கிறோம்.  

ஆரம்ப நாளிலிருந்து நாங்கள் `Day One’ என்கிற மனநிலையைப் பராமரித்து வருகிறோம். அதாவது நாங்கள் எதை அணுகினாலும் `முதல் நாள்” (Day One) எங்களிடமிருந்த அதே ஆற்றலுடனும், தொழில்முனைவாக்கம் என்கிற உணர்வுடனும்தான் அணுகி வருகிறோம். அமேசான் ஒரு பெரிய நிறுவனமாக இருந்தாலும் கூட நமக்குள் `முதல் நாளு’க்கான மனநிலையை பராமரிக்க வேண்டுமென்கிற கட்டுப்பாடு இருக்கும் பட்சத்தில் அது நம்முடைய டிஎன்ஏ-வின் ஒரு பகுதியாகி விடும். அதாவது பெரிய நிறுவனத்துக்கான நோக்கமும், திறனும் இருப்பதோடு சிறிய நிறுவனத்துக்கான உணர்வும் மனநிலையும் இருக்கும்.
என் பார்வையில், வாடிக்கையாளர் மீது அதீத கவனம் செலுத்துவது `முதல் நாளு’க்கான உள்ளுயிர் துடிப்பை அடைவதற்கு முக்கியமானதாகும். ஏனென்றால் வாடிக்கையாளர்கள் மிகவும் அழகாகவும், ஆச்சரியப்படும்படியும் அதிருப்தி அடைவார்கள், அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், வணிகம் சிறப்பாக நடந்து வருகிறது என சொன்னாலும் கூட! வாடிக்கையாளர்கள் இன்னும் சிறப்பானது வேண்டும் என விரும்பினாலும் அது அவர்களுக்கே தெரிவதில்லை, ஆனால் வாடிக்கையாளர்களைத் தொடர்ந்து குதூகலப்படுத்த வேண்டுமென்பதற்காக அவர்களின் சார்பில் நாங்கள் தொடர்ந்து ஏதாவது புதுமையாக செய்து கொண்டேயிருக்கிறோம். இதன் விளைவாக, நாங்கள் எங்களுடைய சேவையை மேம்படுத்துவது, பலன்களையும், அம்சங்களையும் கூடுதலாக்குவது, புதிய பொருட்களைக் கண்டுபிடிப்பது, குறைந்த விலை, பொருட்கள் அனுப்புவதை விரைவாக்குவது போன்றவற்றைச் செய்து வருகிறோம். `ப்ரைம் உறுப்பினர்’ திட்டத்தை ஆரம்பிக்க வேண்டுமென்று எந்தவொரு வாடிக்கையாளரும் கூறவில்லை, ஆனால் அவர்களுக்கு அது தேவைப்பட்டதாக இருந்திருக்கிறது. இது போல என்னால் பல உதாரணங்களைச் சுட்டிக்காட்ட முடியும். அனைத்துத் தொழில்களும் `வாடிக்கையாளர் முதன்மையானவர்’ என்கிற அணுகுமுறையைக் கொண்டிருப்பதில்லை. ஆனால் நாங்கள் அதை வைத்திருக்கிறோம். அதுதான் எங்களுடைய மிகப் பெரிய பலம். 

(ஆதாரம்: அமேசான் இணையதளத்தின் `DAY ONE’ Blog)

Spread the lovely business news