(அமேசானின் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான ஜெஃப்ரி பெசோஸ் (ஜெஃப்) பொறுப்பான்மைக்கு எதிரான (anti-trust), வணிக, நிர்வாக சட்டம் சம்பந்தமாக அமெரிக்க அரசின் பிரதிநிதிகள் சபையால் நியமிக்கப்பட்ட துணைக்குழுவுக்கு முன் ஜூலை 27 ஆம் தேதி சமர்ப்பித்த அறிக்கை. இந்தத் துணைக்குழு கூகுள், ஃபேஸ்புக், ஆப்பிள் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளையும் தங்கள் முன் ஆஜராகுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறது)

“நான் ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos), உலகத்தின்  அனைத்து பகுதியிலுள்ள  வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டு இயங்க வேண்டும் என்ற  நீண்ட கால நோக்கில் 26 ஆண்டுகளுக்கு முன் அமேசான் என்கிற நிறுவனத்தை ஆரம்பித்தேன். நியூ மெக்சிகோவில் அல்புகர்கி என்ற நகரில் என்னுடைய அம்மா ஜாக்கி, 17 வயதான உயர்நிலைப் பள்ளி மாணவியாக இருந்தபோது என்னை கர்ப்பத்தில் சுமந்திருந்தார். 1964 ஆம் ஆண்டில் பள்ளிக்கூட மாணவி கர்ப்பமாக இருப்பதெல்லாம் மிகவும் அரிதாக இருந்தது. எனவே அவரைப் பள்ளிக்கூடத்திலிருந்து நீக்க முடிவு செய்தபோது என் தாத்தா அவருக்காகப் பரிந்து பேசியதையடுத்து, பள்ளி முதல்வருடன் ஓர் உடன்படிக்கை ஏற்பட்டது. அதன்படி அவருக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அந்த ஆண்டு அங்கு படிப்பை முடித்தவுடன் அவருக்குக் கல்வியின் மீது இருந்த ஆர்வத்தால் ஓர் இரவுப் பள்ளியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தார், அங்கு பாடம் கற்பித்த ஆசிரியர்கள் அவரைக் குழந்தையுடன் பள்ளிக்கு வர அனுமதித்தனர். ஒரு பையில் புத்தகங்களும் இன்னொரு பையில் டயப்பர், பால் பாட்டில் ஆகியவற்றுடனும் சென்று கல்வி கற்றார்.

என்னுடைய அப்பா பெயர் மிகெல் (Miguel). கியூபா நாட்டில் காஸ்ட்ரோ பதவிக்கு வந்த பின், அங்கிருந்து தனது 16-வது வயதில் அமெரிக்காவுக்கு தனியாக வந்தவர். அப்போது அவரது அம்மா, அமெரிக்காவில் குளிராக இருக்கும் என  எண்ணி அந்த சமயத்தில் அவரிடமிருந்த சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் துணிகளைக் கொண்டு ஒரு ஜாக்கெட் செய்து அவரிடம் கொடுத்திருக்கிறார்.  அது இதுவரை  என் பெற்றோர்களின் டைனிங் அறையில் தொங்கிக் கொண்டிருக்கிறது. அவர் ஃப்ளோரிடாவில் இருந்த அகதிகள் முகாமில் இரண்டு வாரங்கள் தங்கியிருந்திருக்கிறார். அதிர்ஷ்டவசமாக, அங்கிருந்து வில்மிங்கடனில் இருக்கும் ஒரு கிறித்துவ மிஷனரிக்கு அனுப்பப்பட்டார். அவருக்கு ஆங்கிலம் தெரியாது ஆனால் அவரிடம் மன உறுதியும், நம்பிக்கையும் இருந்தது. அல்புகர்கியில் உள்ள கல்லூரியில் படிக்க அவருக்கு உதவித் தொகை கிடைத்தது. அங்குதான் அவர் என் அம்மாவை சந்தித்தார். ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் பல பரிசுகள் கிடைக்கும். அப்படி எனக்குக் கிடைத்த பரிசுதான் என் அம்மாவும் அப்பாவும். அவர்கள்தான் எனக்கும் என் உடன்பிறந்தவர்களுக்கும் வாழ்நாள் உதாரண புருஷர்கள்.

உங்கள் பெற்றோர்களிடமிருந்து கற்றுக் கொள்வதை விட நீங்கள் தாத்தா, பாட்டியிடமிருந்து பல்வேறு வகையான விஷயங்களைக் கற்றுக் கொள்ளலாம். என்னுடைய நான்கு வயதிலிருந்து பதினாறு வயது வரை கோடைகாலத்தில் டெக்ஸாஸில் இருந்த என்னுடைய தாத்தாவின் பண்ணையில்தான் என் பொழுதுகள் கழிந்தன. 1950 – 1960 களில் அவர் அணு ஆற்றல் ஆணையத்துக்காக விண்வெளி தொழில் நுட்பம், ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் ஆகிய துறைகளில் வேலை செய்து வந்தார். அவர் மிகவும் விஷய ஞானம் உள்ளவர். உதவிக்கு அக்கம் பக்கத்தில் யாரும் இல்லாத போது ஏதாவது பிரச்சனையென்றால் தொலைபேசி மூலம் யாரையும் அழைக்கவும் முடியாத சூழலில் அவரே கேட்டர்பில்லர் புல்டோசர்கள் பழுதேற்பட்டால் பழுது நீக்கம் செய்வது அல்லது கால்நடைகள் சம்பந்தமான பிரச்சனைகளையும் சரிசெய்வது என அனைத்து வேலைகளையும் செய்துவந்தார். என்ன பிரச்சனையென்றாலும் எதிர்கொள் எனவும், ஏதாவது பின்னடைவு ஏற்பட்டால் மீண்டும் முயற்சித்துப் பார் எனவும் எனக்குக் கற்றுக்கொடுத்தவர் அவர்.

எனக்கு இந்தப் படிப்பினைகள் மனதில் நன்றாக பதிந்ததோடு நான் என்னுடைய கராஜ் அறையிலிருந்தபடியே தானாக மூடிக் கொள்ளும் கேட், சூரிய ஒளி குக்கர் என ஒரு சில பொருட்களை செய்தேன்.

அமேசான் என்கிற கருத்தாக்கம் என்னுள் 1994 ஆம் ஆண்டு உதயமானது. ஒரே இடத்தில் மில்லியன் கணக்கில் புத்தகங்கள் கிடைக்குமிடம் எதுவும் அப்போது இல்லை. எனவே ஆன்லைன் புத்தகக்கடை ஆரம்பிக்கலாம் என நினைத்தேன். அப்போது நான் நியூயார்க் நகரில் ஒரு முதலீட்டு நிறுவனத்தில் வேலை செய்து வந்தேன். எனது யோசனை குறித்தும் அதன் காரணமாக வேலையை ராஜினாமா செய்ய விரும்புகிறேன் என்றும் என்னுடைய அதிகாரியிடம் கூறினேன். சென்டரல் பார்க் என்கிற இடத்தில் அவரும் நானும் நீண்ட தூரம் பேசிக் கொண்டே நடந்தோம். நான் சொன்னதையெல்லாம் கவனமாகக் கேட்டபின் அவர், “ஜெஃப், நல்ல வேலையெதுவும் இல்லாத ஒருவருக்கு இது சிறந்த யோசனையாக இருக்கும்” என்று கூறியதோடு இரண்டு நாட்கள் அவகாசம் கொடுத்து நன்கு யோசித்து இறுதி முடிவைக் கூறும்படி கூறினார். என் மூளையை விட மனம் சொன்னதைக் கேட்டு எடுத்த முடிவாக அது இருந்தது. எனக்கு 80 வயதாகும் போது பின்னோக்கிப் பார்க்கையில், என்னுடைய வாழ்க்கையில் வருத்தப்படுவதற்கான விஷயங்கள் மிகவும் குறைவாக இருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். நமது வருத்தங்களில் பெரும்பாலனவை செய்யத் தவறியதால் ஏற்பட்டதாகத்தான் இருக்கும் – அதாவது நாம் முயற்சிக்கத் தவறிய விஷயங்களும், பயணிக்காத பாதைகளும். அவைதான் நம்மை இடையறாது தொந்தரவு செய்து கொண்டே இருக்கும். எனவே என்னால் முடிந்த அளவு இணையம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் முயற்சித்து பார்க்க விரும்பியதோடு இது பெரிய அளவில் வளர்ச்சி பெறும் எனவும் நினைத்தேன். 

(ஆதாரம்: அமேசான் இணையதளத்தின் `DAY ONE’ Blog) 

  (தொடரும்…)

Spread the lovely business news